இலங்கையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி, தங்கச்சிமடத்தில் மீனவர்கள் தொடர் உணவுத்தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களை உடனடியாக படகுடன் விடுதலை செய்ய வலியுறுத்தி, இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்திய-இலங்கை மீனவர் பேச்சுவார்த்தையைத் துரிதப்படுத்தி, உடனடியாக மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு பெற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், இந்த உணவுத்தவிர்ப்பு போராட்டம் இரவு பகலாக நடைபெறும் எனவும், மத்திய அரசு படகுகளையும் மீனவர்களையும் விடுதலை செய்வதாக உறுதியளித்தால் மட்டுமே இந்த போராட்டம் கைவிடப்படும் என மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஐந்து நாட்களாக தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மீனவர்கள், தங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்வரை போராட்டத்தை தொடரும் மனநிலையிலிருக்கின்றனர். இது தொடர்பாக, மத்திய அரசின் நடவடிக்கைகள் மற்றும் இந்திய-இலங்கை அரசுகளுக்கிடையேயான பேச்சுவார்த்தைகள் எவ்வாறு முன்னேறுகின்றன என்பதையும் மீனவர்கள் கவனித்து வருகின்றனர்.
இந்நிலையில், ராமேஸ்வரம் மீனவர்களும் தொடர்ச்சியாக உணவுத்தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அவர்கள் இந்த போராட்டத்தை முன்னெடுத்துவருகின்றனர்.




