29.6 C
Jaffna
March 15, 2025
Pagetamil
இலங்கை கட்டுரை

இனிய கற்பனை: எப்போது திகட்டும் என்.பி.பி?

– கருணாகரன்

அவர் ஜே.வி.பியின் நீண்டகால உறுப்பினர். உறுப்பினர் மட்டுமல்ல, ஜே.வி.பியின் சார்பாக ஒரு மாவட்டத்தின் அமைப்பாளராகவும் இருந்தவர். அதனால் அவருடைய பெயரோடு முன்னொட்டாக ஜே.வி.பி என்ற அடைமொழி – அடையாளம் – சேர்க்கப்பட்டிருந்தது. அவர் ஜே.வி.பியின் ஆள் என்று தமிழ்ப் பெருந்திரள் சமூகம் அவரை விட்டுச் சற்றுத் தொலைவில் இருந்தது. அவரும் அதைப்பற்றிக் கவலைப்படாமல், அதிலிருந்து சற்றுத் தூரமாகவே இருந்தார்.

அப்போது தமிழ்ப்பகுதியில் ஜே.வி.பி என்ற அடையாளத்தோடு ஒருவர் இருப்பதும் செயற்படுவதும் சாதாரணமானதல்ல. எத்தனையோ விதமான கதைகளைக் கேட்க வேணும். நெருக்கடிகளையும் அவமானப்படுத்தல்களையும் ஓரங்கட்டல்களையும் சந்திக்க வேண்டும். இந்த அரசியல் நிலைப்பாட்டுக்காக ஏறக்குறைய ஒரு தீண்டத்தகாதவரைப் பார்ப்பதைப்போலவே அவரைச் சிலர் நடத்த முற்பட்டதும் உண்டு.

அப்போது வந்த தேர்தல்களில் ஜே.வி.பியின் சார்பாக வேட்பாளர்களை நிறுத்துவதற்கு ஆட்களைத் தேடிப் பிடிப்பது பெரும்பாடாக இருந்தது. எப்படித்தான் தலையைப் பிய்த்தாலும் அவருடைய குடும்ப வட்டம், நெருங்கிய நட்பு வட்டத்துக்கு அப்பால் ஓரிருவர் மட்டுமே சிக்குவார்கள். அதனால் பெரும்பாலான தேர்தல்களிலும் அவர் தன்னோடு, குடும்ப உறுப்பினர்களையும் சேர்த்துக் கொண்டு, போதாக்குறைக்குத் தனக்கு நெருக்கமானவர்களையும் இணைத்து பட்டியலைத் தயார் செய்து வேட்பு மனுக்களைத் தயார் செய்வார்.

இதெல்லாம் 2024 ஜனாதிபதித் தேர்தலில் அநுர குமார திசநாயக்க (NPP) வெற்றியடையும் மட்டும்தான்.

அநுரவின் (NPP யின்) வெற்றியோடு இந்த நிலை மெல்ல மாறியது. அநுர குமார திசநாயக்கவின் (NPP) வெற்றியும் அதனால் உருவாகிய அநுர – NPP அலையும் பாராளுமன்றத் தேர்தலின்போது பலரையும் NPP யின் பக்கமாகத் திருப்பி, அணி சேர வைத்தது.

அப்படி NPP யோடு சேர்ந்த பலருக்கு அதன் மெய்யான வடிவத்தையோ, NPP க்கும் ஜே.வி.பிக்கும் உள்ள ரத்த உறவைப் பற்றியோ எந்தப் புரிதலும் இருக்கவில்லை. NPP க்கும் இதெல்லாம் தெரிந்தாலும் தன்னுடைய பக்கமாகத் திரண்டு கொண்டிருந்த ஆதரவு அலையை அது சாதகமாகப் பயன்படுத்தவே விளைந்தது. அதில் அது வெற்றியும் பெற்றது.

ஆனால், திடீர்ப்போராளிகளாகிய NPP யின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஆதரவாளர்களிற் பலருக்கும் JVP யைப் பற்றியும் தெரியாது. பொதுவான அரசியற் போக்குகளைப் பற்றியும் தெரியாது. இதொன்றும் அவர்களைக் குறைத்து மதிப்பிடுவதாகக் கூறப்படவில்லை. அனைவருக்கும் தெரிந்த உண்மையே.

இப்பொழுது உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான சூழல். இதில் NPP சார்பாகப் போட்டியிடுவதற்கு பலர் முண்டியடித்துக் கொண்டிருக்கிறார்கள். NPP மாவட்ட – பிராந்திய அலுவலகங்களில் இரவு பகலாக கூட்டம். யாருக்கு வாய்ப்புக் கொடுப்பதென்றே முடிவெடுக்க முடியாத அளவுக்கு என்னைப் போடு, உன்னைப் போடு என்று கேட்கிறார்களாம்.

அந்த ஜே.வி. பி ஆள் சொன்னார், “இதைக் கால மாற்றம் என்பதா? அரசியல் மாற்றம் என்பதா? அல்லது சோதிடர்கள் சொல்வதைப்போல கிரக மாற்றம் என்று கூறுவதா? எண்ணிப் பார்க்கச் சிரிப்பாக இருக்கு. அப்போது தேர்தலுக்காகவும் அரசியல் வேலைக்காகவும் ஆட்களைத் தேடுவது பெரிய பாடாக இருந்தது. இப்போது ஆட்களைத் தேர்வது அதை விடப் பெரியபாடாக இருக்கு” என்று.

அரசியல் வேடிக்கைகள் பலவிதம். அது எப்போதுமிருப்பதுண்டு. அதில் இந்த மாதிரிச் சுவாரசியமான சங்கதிகளும் உண்டு.

இப்பொழுது தமிழ்ப்பகுதிகளில் தேசிய மக்கள் சக்தி (NPP) யைச் சிலர் தங்களுடைய அதீத விசுவாசத்தினாலும் அதிகரித்த ஆதரவினாலும் திணறடிக்கிறார்கள். இந்தப் பழமும் புளிக்கிறது என்று எப்போது சொல்லப்போகிறார்கள்? என்பதான் கேள்வி.

ஜனாதிபதித் தேர்தல், பாராளுமன்றத் தேர்தல் இரண்டிலும் வெற்றியீட்டிய NPP உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தலிலும் வெற்றியைப் பெறுவதற்கே முயற்சிக்கிறது. அதிலும் அதனுடைய எதிர்பார்ப்பு வடக்குக் கிழக்கில்தான் கூடுதலாக உள்ளது. வடக்குக் கிழக்கில் பெறும் வெற்றியையே அது பெரியதாக எதிர்பார்க்கிறது. தேசிய அரசியலுக்கு அது வாய்ப்பாகும் என்பது NPP யின் கணக்காகும்.

அதாவது வடக்குக் கிழக்கு பிராந்திய ஆயுதம் தாங்கிய போராட்ட அரசியலை – தமிழீழ அரசியலை – போரின் மூலம் முடிவுக்குக் கொண்டு வந்தது ராஜபக்ஸக்கள் என்றால், அதை அரசியல் ரீதியாக முடிவுக்குக் கொண்டு வந்தது NPP என வரலாறு சொல்ல வேண்டும் என அது கருதுகிறது. அதற்காக யார், எவர் என்று பார்க்காமல் எழுந்துள்ள ஆதரவைப் பயன்படுத்திக் கொள்ளப் பார்க்கிறது. இதனைப் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள் பலரும். இதனால் NPP யைப் பற்றிய நியாயமான விமர்சனங்களை முன்வைப்போருடன் கூட, உடனே சண்டைக்கு வருகிறார்கள். இது அதன் மீதான அபிமானத்தின் விளைவாகும்.

அரசியல் அபிமானம் ஒன்றும் புதியதல்ல. அது கேள்விக்கிடமில்லாத விசுவாசத்தையும் கண்மூடித்தனமான நம்பிக்கையையும் உருவாக்குகிறது. இதற்குக் காரணம், அரசியல் பாமரத்தனமேயாகும்.

ஆனால், NPP யோ JVP யோ அப்படி கேள்விக்கிடமில்லாத விசுவாசத்தையும் கண்மூடித்தனமான நம்பிக்கையையும் கொண்ட இயக்கமோ கட்சியோ கிடையாது. அது எப்போதும் அரசியலை அறிவுபூர்வமாகவே அணுக விளைந்த ஓரமைப்பு – ஓரியக்கம். ஆனால், வரலாற்றின் விசித்திரமென்னவென்றால், அதுவே இப்போது கேள்விக்கிடமில்லாத விசுவாசிகளையும் கண்மூடிகளையும் தன்னுடைய ஆதவுப்படையாக உருவாக்கிக் கொண்டிருக்கிறது என்பதுதான்.

இவ்வாறான ஆதரவாளர்களையும் பிரதிநிதிகளையும் கொள்ளும் அரசியல் இயக்கம் நல் விளைவுகளை உருவாக்கவே முடியாது. நீண்டகாலத்துக்கு சரியான அரசியல் பாதையில் பயணிக்கவும் முடியாது. அதை இப்போதே காணக் கூடியதாக உள்ளது.

NPP யில் தேர்வு செய்யப்பட்ட வடக்குக் கிழக்கில் உள்ள தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களில் பலருக்கும் அரசியல் என்றால் என்ன? மக்களுடன் இணைந்து பணியாற்றுவது எப்படி? கட்சியின் நடைமுறை மற்றும் கட்டுக்கோப்பு எவ்வாறானது? என்பதெல்லாம் தெரியாது. ஏன் NPP யைப் பற்றியோ, JVP யைப் பற்றியோ கூடச் சரியாகத் தெரியாது. இதனால்தான் “புரட்சிப் படைத்தலைவர் அர்ச்சுனாவுக்கும் இவர்களுக்கும் இடையில் ஆறு வித்தியாசங்களைக் காட்டுங்கள்” என்று பலரும் கேட்கும் நிலை வந்திருக்கிறது.

வடக்குக் கிழக்கில் வெற்றியீட்டிய – NPP யினால் நியமிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் என ஒன்பது பேர் உள்ளனர். இவர்களில் எத்தனை பேருக்கு மக்கள் அரசியல் என்ற அடிப்படையில் உறவுண்டு? கட்சி அரசியல் வரலாறு உள்ளது?

என்பதால்தான் இன்னும் இவர்கள் மக்கள் பிரதிநிதிகளாகச் செயற்பட முடியாத நிலையில் தத்தளிக்கின்றனர். கட்சியும் இவர்களை எப்படிப் பயிற்றுவித்து நெறிப்படுத்துவது என்று தெரியாமல் தலையைப் பிய்த்துக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில்தான் இதே தவறை உள்ளுராட்சி மன்றத் தேர்தலிலும் செய்யப்போகிறது NPP. இது அதற்கு மேலோட்டமாக அரசியல் ஆதரவு உள்ளதென்று ஒரு தோற்றத்தைக் காட்டினாலும் அரசியல் விளைவுகளை உருவாக்குவதிலும் NPP யின் எதிர்கால அரசியலுக்கும் பாதகமானதாகவே அமையும்.

ஏனென்றால் NPP ஏற்றுள்ள பாத்திரம், மாற்றங்களுக்கான சக்தி என்பதாகும். மாற்றங்களுக்கான சக்தி என்பது மாற்றுச் சக்தியே. அவ்வாறான மாற்றுச் சக்தியானது, அறிவு, ஆற்றல், மக்கள் நேயம், அர்ப்பணிப்பு, செயற்றிறன், துணிவு போன்றவற்றைக் கொண்டிருக்க வேண்டும். இந்த அடிப்படைகள் இருந்தாற்தான் மாற்றங்களை நிகழ்த்தக் கூடியதாக இருக்கும்.

ஆனால், இதில் பாதியும் இல்லாத பெருங்கூட்டத்தினால் நிரப்பப்படுகிறது NPP. அப்படியான கூட்டம், மாற்றங்களுக்கு உதவாது. மக்களுக்கும் உதவாது. இதனால் NPP க்கே சேதமும் சுமையுமாகும்.

உண்மையில் இப்போது தேவையாக இருப்பது அநுர – ஹரிணி என்ற அடையாளங்களின் நிழலில் தங்கியிருப்போரோ, NPP அலையில் மிதப்போரோ அல்ல. சுய அடையாளத்தோடும் சுயாதீனத்தோடும் வேலை செய்யக் கூடியவர்களே NPP க்குத் தேவை. அதையே NPP யும் விரும்ப வேண்டும்.

ஆனால் NPP யிடம் அவ்வாறான நிதானம் இருப்பதாகத் தெரியவில்லை. அது அடிக்கிற காற்றில் தூற்றிக் கொள்வோம். கிடைக்கின்ற வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வோம் என்ற Policy யைத்தான் Make பண்ணுகிறது.

அதிகாரத்தின் சுவை அப்படித்தான் கொண்டுபோய் சேர்க்கும். ஆம், அதிகாரம் தெய்வத்தையும் பிசாசாக மாற்றும். அதை மீறி எழுவோரோ வரலாற்றுக்குப் புதியவர்கள். அவர்களே வரலாற்றுக்கு ஒளியூட்டுவோர்.

இந்தப் புரிதலும் இந்த நிலையைக் குறித்த துக்கமும் JVP யிலுள்ள பலரிடத்திலும் உண்டு. இதையே நம்முடைய JVP ஆளும் சொல்லிக் கவலைப்படுகிறார்.

இப்பொழுது இலங்கை அரசியலில் தேசிய மக்கள் சக்தி (NPP) ஒரு இனிப்பான கற்பனை. இனிய நம்பிக்கை. இரண்டுக்குமிடையில் ஆடும் ஓர் அழகிய, துயரம் நிறைந்த ஊஞ்சலாகும்.

00

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

5 மாகணங்களில் மழை பெய்ய வாய்ப்பு!

Pagetamil

துணை இராணுவக்குழுவை இயக்கிய தேசபந்து தென்னக்கோன்!

Pagetamil

அனுராதபுரம் வைத்தியசாலைக்கு புதிய பதில் பணிப்பாளர்

Pagetamil

எம்.பி பதவியை துறந்தார் மு.காவின் நளீம்!

Pagetamil

விக்கி அணியும் கட்டுப்பணம் செலுத்தியது

Pagetamil

Leave a Comment