பொதுபல சேனா அமைப்பின் செயலாளராக உள்ள கலகொட அத்தே ஞானசார தேரர், ஒன்பது மாத சிறைத் தண்டனைக்கு உள்ளாகியிருந்த நிலையில், அவரை பிணையில் விடுதலை செய்யுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (25) உத்தரவிட்டுள்ளது.
ஞானசார தேரர் தம்மை பிணையில் விடுவிக்குமாறு தாக்கல் செய்த மனுவை விசாரணை செய்த நீதிமன்றம், இதனை அனுமதித்து பிணை வழங்கியுள்ளது. அவருக்கு, இஸ்லாம் மதத்தை அவமதித்த குற்றச்சாட்டின் கீழ் கடந்த மாதம் ஒன்பது மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
கடந்த காலங்களிலும், மத அடிப்படைவாத கருத்துக்களை பரப்பியது, இஸ்லாம் மதத்தினை அவமதித்தது, நீதித்துறைக்கு எதிராக அவதூறு விளைவித்தது உள்ளிட்ட பல்வேறு வழக்குகளுக்கு முகங்கொடுத்துள்ளார். 2016ம் ஆண்டில் நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் சிறைத்தண்டனை அனுபவித்த அவர், பின்னர் ஜனாதிபதி மன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.
அதேவேளை, தற்போது பிணையில் விடுவிக்கப்பட்ட ஞானசார தேரருக்கு எதிரான வழக்கு தொடர்ந்தும் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.




