குற்றவாளிகள் யாரென்று தீர்மானித்து, அவர்களுக்கு தண்டனை வழங்கும் அதிகாரம் பொலிஸாருக்கு இருந்தால், நாளை எவரின் உயிருக்கும் உத்தரவாதம் இருக்காது என்று மக்கள் போராட்ட முன்னணியின் செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், கொழும்பில் அண்மையில் இடம்பெற்ற இரட்டை கொலை சம்பவம் தொடர்பாகப் பேசினார். இதுவரை பல சந்தர்ப்பங்களில், பொலிஸார் குற்றவாளிகள் என சந்தேகிக்கப்படும் நபர்களை அவர்களின் விருப்பப்படி அழைத்து சென்று கொலை செய்த சம்பவங்கள் நடந்துள்ளன. இது தொடர்பாக ஏற்கனவே நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசாநாயக்க, ‘ஒருவர் ஆயுதம் வைத்திருக்கிறார் என்று கூறி, அவரை அழைத்து சென்று, பின்னர் அந்த நபர் பொலிஸாரை தாக்க முயன்றதாக கூறி சுட்டுக் கொல்வார்கள்’ என்று நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்ததை நினைவுபடுத்தினார்.
இதே போன்ற முறையில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற துப்பாக்கிசூட்டு சம்பவத்திற்குப் பின்னர் கைது செய்யப்பட்ட இருவரும் எவ்வாறு ஆயுதங்கள் உள்ள இடத்திற்கு அழைத்து செல்லப்பட்டார்கள் என்பதில் தெளிவற்ற நிலை காணப்படுவதாகவும் அவர் கூறினார். 2023ம் ஆண்டு தொடுக்கப்பட்ட வழக்கின்படி, குற்றவாளிகளை ஏதேனும் ஒரு இடத்திற்குக் கொண்டு செல்லும் போது, பொலிஸார் அதனை வீடியோவாக பதிவு செய்ய வேண்டும். ஆனால் இந்த வழக்கில் அது மேற்கொள்ளப்படவில்லை.
குற்றம்சாட்டப்பட்ட ஒருவர் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு, சட்டப்படி அவருக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும். ஆனால், அவசரமாக பொலிஸார் அவர்களை கொலை செய்வதன் பின்னணியில் என்ன காரணம் இருக்கிறது என்பதை அரசு விளக்க வேண்டும் என ரஜீவ்காந் கேட்டுக்கொண்டார்.
இந்நாட்டில் தொடர்ந்து பல ஆண்டுகளாக பாதாள உலகக் குழுக்கள், போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக துப்பாக்கிசூட்டு சம்பவங்கள் இடம்பெற்றுவருகின்றன. ஆனால், அவற்றை அரசியல் கொலைகளுக்கு பயன்படுத்தும் வாய்ப்பும் அதிகரித்து வருகிறது. இலங்கை, கொலைகள் அதிகரித்து வரும் நாடாக மாறிக்கொண்டு இருப்பதை அனைவரும் கவனிக்க வேண்டும்.
சுமார் இரண்டு நாட்களில் ஆறுகொலைகள் இடம்பெற்றுள்ளன, ஜனவரியிலிருந்து இன்றுவரை 17 துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த கொலைகளை உடனடியாக தடுத்து நிறுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். பொலிஸார் நீதிபதிகளாக மாறுவதற்கு எந்த நிலையிலும் அனுமதி அளிக்க முடியாது. மக்கள் பாதுகாப்பு தொடர்பாக அரசு பொறுப்பு எடுத்துக் கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



