2025ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ஒரே பார்வையில்

Date:

நாட்டின் எதிர்கால பொருளாதார நோக்கங்களை உறுதி செய்யும் முக்கியமான நடவடிக்கையாக, 2025ம் ஆண்டுக்கான கன்னி வரவு செலவுத் திட்டம் இன்று (17) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தில் வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பதவியேற்ற பின்னர், அவர் தலைமையில் சமர்ப்பிக்கப்படும் முதல் வரவு செலவுத் திட்டமான குறித்த திட்டத்தில், பல்வேறு துறைகளுக்காக முக்கிய திட்டங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

நிதி அமைச்சராகவும் செயற்படும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, 2025ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரையை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த வருடத்தில் 5% பொருளாதார வளர்ச்சி அடைய எதிர்பார்க்கின்றோம் எனக் கூறப்பட்டதைத் தொடர்ந்து, நாட்டின் வரவு செலவுத் திட்டம் தொடர்பான முக்கிய திட்டங்கள் அரசால் முன்வைக்கப்பட்டுள்ளன.

அவையாவன,

– அஸ்வெசும மற்றும் ஏனைய நலன்புரி சேவைகளுக்காக ஜூலை மாதம் முதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

– வறுமையை போக்குவதற்கு விசேட வேலைத்திட்டங்கள்.

– புதிய தேசிய தீர்வை வரி முறையை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்க திட்டம்.

– புதிய சுங்க சட்டத்தை முன்வைக்க நடவடிக்கை.

– வருமானத்தை அடிப்படையாக கொண்டு அரச காணிகள் முதலீடுகளுக்காக குத்தகைக்கு வழங்கப்படும்.

– பல்நோக்கு பொருள் விநியோக மத்திய நிலையமாக வெயாங்கொடையில் உள்ளக கொள்கலன் முனையம் நிர்மானிக்கப்படும்.

– கல்விக்கும் சுகாதாரத்துக்கும் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிக நிதி ஒதுக்கீடு இம்முறை வரவு-செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, துறைமுக அபிவிருத்திக்காக 500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.

– நாட்டில் பயன்படுத்தப்படாத காணிகளை விவசாயத்துக்காக பயன்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

– கொழும்பு துறைமுகம் – பண்டாரநாயக்க சர்வசே விமான நிலையத்தில் உயர்தர ஸ்கேன் கட்டமைப்பை உருவாக்க 1000 மில்லியன் ரூபா ஒருக்கீடு.

– இலத்திரனியல் அடையாள அட்டை விரைவில்.

– விரைவில் இலத்திரனியல் பொருளாதார அதிகாரசபை உருவாக்கப்படும்.

– கட்டங்கட்டமாக நாணயத்தாள் பாவனையை குறைக்க திட்டம்.

– தொடர்பாடல் தொழில் நுட்பத்தினூடான வருடாந்த ஏற்றுமதி வருமானத்தை 5 மில்லியன் அமெரிக்க டொலராக அதிகரிக்கப்படும்.

– டிஜிட்டல் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்ய 3000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.

– சுற்றுலாதுறை உட்கட்டமைப்பு வசதி அபிவிருத்திக்காக 500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு. சுற்றுலாதுறை சார் இடங்களுக்கு புதிய டிஜிட்டல் முறை அறிமுகப்படுத்தப்படும்.

– ஜப்பான் நிதியுதவியுடன் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 2வது முனையம் விரைவில் நிர்மாணிக்கப்படும்

– பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதிய காப்புறுதி இரண்டரை இலட்சம் ரூபாவால் குறைப்பு.

– அரச அபிவிருத்தி வங்கி உருவாக்கப்படும்.

– எதிர்வரும் மார்ச் மாதம் முதல் சகல அதிசொகுசு வாகனங்களும் குத்தகைக்கு.

– பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்த ஆண்டு வாகனங்களோ அனுமதிப்பத்திரங்களோ இல்லை. இந்த ஆண்டு எம்.பி.க்களின் வாகனங்களுக்கு பணம் ஒதுக்கப்படவில்லை. அவர்களுக்கு வாகன அனுமதிகளும் கிடைக்காது. அதிக செலவாகும் அனைத்து அரச சொகுசு வாகனங்களும் மார்ச் மாதம் ஏலத்தில் விடப்படும்.

– திரிபோசா வேலைத்திட்டத்துக்காக 5000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.

– வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாண பொது நூலகத்தை மேம்படுத்த 100 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.யாழ்ப்பாண நூலகத்தின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக ரூ. 100 மில்லியன் ஒதுக்கப்படும். நாட்டின் பிற பகுதிகளில் உள்ள நூலகங்களின் மேம்பாட்டுக்காக ரூ. 200 மில்லியன் ஒதுக்கப்படும்.

– மகளிர் , சிறுவர் துஷ்பிரயோகம், மகளிர் திறன் அபிவிருத்தி மற்றும் பாதுகாப்பு வேலைத்திட்டங்களுக்காக 120 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.

– மகளிர் அபிவிருத்திக்கான கிளைகளை மேம்படுத்த 720 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.

– பெருந்தோட்ட பகுதிகளிலுள்ள வைத்தியசாலைகளுக்காக மனிதளவளம், மருத்துவ உபகரணங்கள், மருந்துகள் அரசாங்கத்தால் வழங்கப்படும்.

– அனுராதபுரம் மற்றும் யாபஹுவ போன்ற புதிய சுற்றுலா தலங்களை மேம்படுத்த ரூ. 500 மில்லியன் ஒதுக்கீடு.

– சுகாதார சேவைக்காக 604 பில்லியன் ரூபாவாக அதிகரிப்பு.

– திருகோணமலையில் அறுபத்தொரு எண்ணெய் தொட்டிகள் சர்வதேச பங்காளிகளுடன் இணைந்து அபிவிருத்தி செய்யப்படும்.

– மகாபொல புலமைப்பரிசில் 5,000த்திலிருந்து 7,500 ஆக அதிகரிக்கப்படும்.

– லேடி ரிஜ்வே வைத்தியசாலையில் நரம்பியல் நோயினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக சர்வதேச தரம் கொண்ட சிகிச்சை நிலையமொன்றை அமைக்க 200 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு.

– பல்கலைக்கழக கட்டமைப்பு அபிவிருத்திக்காக 135 பில்லியன் ரூபா ஒதுக்கீடு. பாடசாலை உட்கட்டமைப்பு வசதி அபிவிருத்திக்காக 1000 மில்லியன் ரூபா வரையில் நிதி ஒதுக்கீடு. பல்கலை. மாணவர்களின் மாணவர் உதவி தொகை 4000 ரூபாவிலிருந்து 6500 ரூபாவாக அதிகரிப்பு. (4600 மில்லியன் ரூபா ஒதுக்கீடு)

– பாலர் பாடசாலை மாணவர்களுக்காக காலை உணவுக்கான வேலைத்திட்டத்துக்கான ஒதுக்கீடு 60 ரூபாவிலிருந்து 100 ரூபாவாக அதிகரிப்பு – 1000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.

– பாடசாலை கட்டமைப்பை மறுசீரமைப்பு செய்து புதிய நிலையை உருவாக்கும் தேசிய வேலைத்திட்டத்துக்காக 500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு. 5ம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவித்தொகை ரூ.750 லிருந்து ரூ.1,000 ஆக உயர்த்தப்படுகிறது.

– விளையாட்டு பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படும் மாதாந்த போசணை கொடுப்பனவு 5000 ரூபாவிலிருந்து 10,000 ரூபாவாக அதிகரிப்பு.

– உயர்தரப் பரீட்சையின் அதி சித்தியை பெறும் மாணவர்கள் வெளிநாட்டு படிப்பு மற்றும் வினைத்திறன் விருத்தி வேலைத்திட்டத்துக்காக 200 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.

– தொழில் பயிற்சி கற்கையில் ஈடுபடும் மாணவர்களுக்கான மாதாந்த கொடுப்பனவை 4000 ரூபாவிலிருந்து 5000 ரூபாவாக அதிகரிப்பு – 200 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.

– மேல், வடமத்திய, ஊவா, வடக்கு மாகாணங்களில் விசேட விளையாட்டு துறை அபிவிருத்திக்காக 500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு.

– தேசிய தர முகாமைத்துவ கட்டமைப்புக்காக 750 மில்லியன் ரூபா ஒடுக்கீடு.

– கொழும்பு துறைமுகத்தின் வடக்கு – மேற்கு முனைய அபிவிருத்திகளுக்காக ஒரு மாதத்துக்குள் யோசைனைகள் கோரப்படும்.

– வட மாகாணத்தில் 16,000 புதிய ஏக்கர் தென்னை தோட்டங்கள் நிறுவப்படும்.

– 2025ம் ஆண்டில் உர விநியோகத்திற்காக ரூ.35,000 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.

– சிறுநீரக நோயாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகை ரூ.7,500-ல் இருந்து ரூ.10,000 ஆக உயர்த்தப்படும் அதே வேளையில், குறைந்த வருமானம் பெறும் மூத்த குடிமக்களுக்கான உதவித்தொகை ரூ.3,000-ல் இருந்து ரூ.5,000 ஆக உயர்த்தப்படும்.

– அஸ்வேசும சலுகைகளுக்காக ரூ. 232.5 மில்லியன் ஒதுக்கப்படும்.

– தடுப்பு மையங்கள் மற்றும் அனாதை இல்லங்களில் உள்ள குழந்தைகளுக்கு மாதாந்திர உதவித்தொகை ரூ. 5,000.

– குற்றம் சாட்டப்பட்ட பிள்ளைகளை நீதிமன்றங்களுக்கு கொண்டு செல்வதற்கான வாகனங்கள் வாங்குவதற்கு ரூ. 250 மில்லியன் ஒதுக்கப்படும்.

– திருத்தப்பட்ட புதிய மின்சாரச் சட்டம் விரைவில்.

– வட்டுவாகல் பாலத்தினை புனரமைப்பு செய்ய 1000 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்ய முன்மொழிவு.

– வடமாகாணத்தில் கிராமிய வீதிகள் மற்றும் பாலங்களை மேம்படுத்த ரூ.5000 மில்லியன் ஒதுக்கிட முன்மொழிவு.

– குழந்தைகள் இல்லங்களில் குழந்தைகள் நலனுக்காக ரூ. 1,000 மில்லியன் ஒதுக்கப்படும். குழந்தைகள் இல்லங்களில் உள்ள ஒவ்வொரு குழந்தையின் கணக்கிலும் மாதந்தோறும் ரூ. 2,000 வரவு வைக்கப்படும், மேலும் குழந்தைகளின் பாதுகாவலர்களுக்கு ரூ. 3,000 வழங்கப்படும்.

– மூத்த குடிமக்களுக்கு அதிக வட்டி விகிதங்களை வழங்க ரூ.15 பில்லியன் ஒதுக்கப்படும்.

– 2024 / 2025 ஆம் ஆண்டுக்கான பெரும்போக நெல்லை கொள்வனவு செய்ய 5000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.

– சோயா, கௌப்பி, பாசிப்பயறு, உளுந்து, மிளகாய், உருழைக்கிழங்கு போன்ற தானிய விளைச்சல்களுக்காக 500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.

– இராஜாங்கனை, கல்லோயா, மின்னேரியா, உருவெல நீர்தேக்கங்களு மீள் அபிவிருத்திக்காக 2000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.

– பாவனையின்றி இருக்கும் காணிகளை மீள் அபிவிருத்திக்கான ஆரம்பகட்ட செயற்பாடுகளுக்காக 250 மில்லியன் ருபா ஒதுக்கீடு.

– தென்னை பயிர்செய்கை அபிவிருத்திக்காக 500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.

– கறுவா உள்ளிட்ட ஏனைய ஏற்றுமதி பயிர்களுக்கான சந்தை அபிவிருத்தி வேலைத்திட்டத்துக்காக 250 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.

– கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து ஆதரவை வழங்குவதற்காக ரூ. 7,500 மில்லியன் ஒதுக்கீடு.

– ஆதரவின்றி இருக்கும் சிறுவர்கள் திருமணம் செய்யும்போது அவர்களுக்கான வீட்டை நிர்மாணித்துக்கொள்வதற்காக ஒரு மில்லியன் ரூபா வழங்க திட்டம் – 1000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.

– குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான வீட்டுத் திட்டங்களைப் புதுப்பிப்பதற்காக ரூ. 1,000 மில்லியன் ஒதுக்கப்படும்.

– மீள்குடியேற்றத்திற்காக ரூ.1,500 மில்லியன் ஒதுக்கப்படும்.

– புத்தாண்டு காலபகுதியில் லங்கா சதொச நிறுவனத்தினூடாக விசேட உணவு பொதியை வழங்குவதற்காக 1000 மில்லியன் ரூபா ஒருக்கீடு.

– இயற்கை அனர்த்தங்கள் மற்றும் விலங்குகளினால் ஏற்படும் மரணங்கள் மற்றும் உடல் உபாதைகளுக்காக வழங்கப்படும் நிவாரணத் தொகை 10 இலட்சம் ரூபாவாக அதிகரிப்பு.

– அரசு பொதுத்துறை ஊழியர்களுக்கு சம்பள உயர்வு அடிப்படை சம்பளத்தை ரூ.24,250 லிருந்து குறைந்தபட்ச ஊதியம் ரூ.40,000 ஆக உயர்த்தப்படும். இந்த சம்பள உயர்வு படிப்படியாக வழங்கப்படும்.

– தனியார் துறை ஊதிய உயர்வை ஏப்ரல் மாதத்திலிருந்து 27,000 ஆகவும், அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து 30,000 ஆகவும் உயர்த்த முதலாளிகள் ஒப்புக்கொண்டுள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

காட்டு யானைகளின் அச்சுறுத்தல் – வனஜீவிகள் அலுவலகம் அமைக்கவும் திட்டம்

சம்மாந்துறை அலவக்கரை மற்றும் அதனை அண்டிய கிராமப் பகுதிகளில் பகல் வேளைகளில்...

சாய்ந்தமருதில் தீக்காயங்களுக்கு உள்ளாகிப் பெண் பலி: சடலம் நல்லடக்கத்திற்காக உறவினர்களிடம் கையளிப்பு

அம்பாறை மாவட்டம், சாய்ந்தமருது பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் தீக்காயங்களுக்கு உள்ளாகிச் சிகிச்சை...

லண்டனில் திலீபன் நினைவேந்தல்: 12 நாள் அரசியல் விழிப்புணர்வு செயற்திட்டம் ஆரம்பம்

12 நாள் அரசியல் விழிப்புணர்வு செயற்திட்டத்தின் முதல் நாள் நிகழ்வு லண்டனில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்