கல்முனை பெரிய நீலாவணையில் பொதுமக்கள் ஏற்பாடு செய்த மதுபானசாலைக்கு எதிரான மக்கள் போராட்டத்தின் மூன்றாவது நாளான இன்று, திடீரென வந்த சுமந்திரன், சாணக்கியன் உள்ளிட்ட அரசியல்வாதிகள் எதிர்ப்பினை சந்தித்து விரட்டியடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தகவலின்படி, போராட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்ற முயன்ற இவர்களுக்கு, கல்முனை தொகுதி தமிழசு கட்சி செயலாளர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர். இதன் தொடர்ச்சியாக, சுமந்திரன், சாணக்கியன் உள்ளிட்ட குழுவினர் அங்கிருந்து செல்ல வேண்டும் என கோரிய மக்கள், பதற்றமான சூழ்நிலையை உருவாக்கியதாக கூறப்படுகிறது.
இந்த நிகழ்வின்போது கோடீஸ்வரன் MP மற்றும் அவரது ஆதரவாளர்கள் முன்வந்து, பதற்றத்தில் சிக்கிய அரசியல் தலைவர்களை பாதுகாப்பாக அப்புறப்படுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், கோடீஸ்வரன் MP ஏற்கனவே சுமந்திரன், சாணக்கியன் தரப்புடன் இணைந்தாரா? அல்லது திட்டமிட்டு இந்த சூழ்நிலையை உருவாக்கியாரா? போன்ற சந்தேகங்கள் மக்கள் மத்தியில் எழுந்துள்ளன.
போராட்டத்திற்கு ஆதரவாக இருந்த பொதுமக்கள், இதை ஒரு சமூக நல போராட்டமாகவே தொடர்வோம் எனத் தெரிவித்துள்ள நிலையில், அரசியல் வட்டாரங்களில் இந்த சம்பவம் பெரும் விவாதத்துக்கு உள்ளாகியுள்ளது. இதற்கான எதிர்விளைவுகள் எவ்வாறு இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
அதே சமயம், குறித்த மதுபான நிலையம் தொடர்பில் நீதிமன்றம் ஊடாக தடையுத்தரவு ஒன்றிணை பெற்றுத்தர நடவடிக்கையெடுப்பதாக இதன்போது ஜனாதிபதி சட்டத்தரணியும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.