மகாராஷ்டிர மாநிலம் புனே நகரைச் சேர்ந்த பிரபல ரியல் எஸ்டேட் தொழிலதிபர் கேத்தன் அகர்வால் (26). இவருக்கும் சியா கோயல் (20) என்ற இளம் பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. ஆனால், தனது காதலன் சேத்தன் சவுத்ரியுடன் சேர்ந்து கடந்த ஜூன் 18-ம் தேதி லோஹாகாட் கோட்டை மலை உச்சியிலிருந்து கேத்தனை கீழே தள்ளிப் படுகொலை செய்தார்.
இதுகுறித்து புனே ஊரகக் காவல் கண்காணிப்பாளர் சந்தீப் சிங் கில் கூறியதாவது: “சியா கோயல் மற்றும் சேத்தன் சவுத்ரி ஆகிய இருவரையும் லோஹாகாட் கோட்டையில் கொலை நடந்த இடத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினோம். அவர்கள் எந்தப் பாதை வழியாகக் கோட்டைக்கு வந்தனர், சம்பவத்தன்று எந்தெந்த இடங்களில் நின்று கொண்டிருந்தனர், கேத்தனை எவ்வாறு கீழே தள்ளினர் என்பது போன்ற அனைத்து நிகழ்வுகளும் அச்சு அசலாக அவர்கள் நடித்துக் காட்டினர்.
பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த மறு உருவாக்க நடவடிக்கையின் போது லோஹாகாட் கோட்டைக்கு பொது மக்களின் வருகை தற்காலிகமாகத் தடை செய்யப்பட்டிருந்தது. இந்த ஒட்டுமொத்த விசாரணையும் முழுமையாக வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு சந்தீப் சிங் கில் கூறினார்.
காவல்துறை வட்டாரங்கள் கூறுகையில், “கோட்டையில் கேத்தனுடன் சியா கோயல் சென்றபோது, பின் தொடர்ந்த காதலன் சேத்தனுக்கு சியா ஏதோ ஒரு ரகசிய சிக்னல் கொடுத்துள்ளார். அதன் பிறகே இருவரும் சேர்ந்து கேத்தனைத் மலை உச்சியிலிருந்து கீழே தள்ளி கொலை செய்துள்ளனர். சேத்தன் சவுத்ரி கோட்டைக்கு நுழைவுக் கட்டணம் ஏதுமின்றி ரகசியமாக நுழைந்துள்ளார்” என்று தெரிவித்தன.




