நேபாளத்தில் 20 இலட்சம் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் நோக்கில் போக்ரோ நகரில் விமர்சையாக ஏற்பாடு செய்யப்பட்ட சுற்றுலா கண்காட்சி நேபாள துணை பிரதமர் பிஷ்ணு பிரசாத் பவுடல் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது.
இந்த கண்காட்சி நேபாளத்தின் சுற்றுலா தொழில்துறையை மேம்படுத்த மற்றும் உலகளாவிய சுற்றுலா நிறுவனங்களை ஈர்க்க அமைக்கப்பட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், கண்காட்சியின் போது திடீரென ஐதரசன் நிரப்பப்பட்ட பலூன்கள் தீப்பற்றியதில், விழா மேடையில் இருந்த துணை பிரதமர் மற்றும் நிதி அமைச்சர் பிஷ்ணு பிரசாத் பவுடல், போக்ரோ நகர ஆளுனர் தன்ராஜ் ஆச்சார்யா மற்றும் சுற்றுலா துறையினர் சிலர் தீக்காயம் அடைந்தனர்.
தீ விபத்து ஏற்பட்டதும் அங்கு இருந்த பாதுகாப்பு படையினர், தீயணைப்பு துறையினர் உடனடியாக செயல்பட்டு, தீயை கட்டுப்படுத்தினர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றது. இந்த தீ விபத்திற்கான காரணம் குறித்து மேலதிக விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றது.
சுற்றுலா கண்காட்சி நேபாள அரசாங்கத்தால் மிகுந்த எதிர்பார்ப்புடன் தொடங்கப்பட்ட நிலையில், இந்த விபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.