யுத்தம் ஏதும் நிகழாத இந்தக்கால கட்டத்திலும் இராணுவத்திற்கு அதிகளவு நிதி ஒதுக்கப்படுவதாகவும், அந்நிதி கல்விக்கு ஒதுக்கப்படுவதை விட அதிகமாக உள்ளதாகவும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் கருத்து வெளியிட்டுள்ளார்.
திருகோணமலை விபுலானந்தா கல்லூரியில், இன்று (16) காலை 10 மணியளவில், இலங்கை ஆசிரியர் சங்கத்தின் திருகோணமலை ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், சங்கத்தின் தலைவர், திருகோணமலை மாவட்ட நிர்வாகக் குழுவினர், ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் கலந்து கொண்டனர்.
இந்த சந்திப்பில், சங்கத்தின் செயற்பாடுகளை மேலும் வினைத்திறனாக முன்னேற்றுவது குறித்து முக்கிய கலந்துரையாடல் நடைபெற்றது.
கல்வியில் அரசியல் தலையீடு இருப்பதாகவும் குற்றஞ்சாட்டிப்பட்டிருந்தது. கூட்டத்தில் ஜோசப் ஸ்டாலின் கருத்து தெரிவிக்கையில், கிழக்கு மாகாணத்தின் கல்வித் தரம் பின்னடைந்து செல்ல காரணமாக, பிள்ளையான், செந்தில் தொண்டமான் போன்ற அரசியல் தலைவர்கள் கல்வித் துறையை அரசியல்மயமாக்கி செய்த நியமனங்கள் முக்கிய காரணம் என குற்றம் சாட்டினார்.
புதிய அரசு ஆட்சிக்கு வந்த பிறகும், இந்த தவறான நியமனங்களை சரிசெய்வதற்கான எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை என அவர் கூறியிருந்தார்.
மேலும், நாட்டில் யுத்தமில்லாத சூழ்நிலை நீடித்தாலும், வரவு செலவு திட்டத்தில் இராணுவத்துக்கு அதிகளவில் நிதி ஒதுக்கப்படுவதாகவும், அதே நேரத்தில் கல்விக்கான நிதி போதிய அளவில் வழங்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
பிரதமர் ஹரிணி அமரசூரிய யாழ்ப்பாணம் இந்து கல்லூரிக்கு சென்றமை தொடர்பாக லறுத்து தெரிவித்த இவர், கல்வி அமைச்சர் என்ற அடிப்படையில் அவருக்கு செல்லும் உரிமை இருந்தாலும், அனைத்து அரசியல்வாதிகளும் கல்வி நிறுவன நிகழ்வுகளில் பங்கேற்பதை தவிர்க்க வேண்டும் எனவும் ஜோசப் ஸ்டாலின் வலியுறுத்தினார்.