மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட இறால் குழி பிரதேசத்தில் நேற்று (14) மாலை 5.30 மணியளவில் மண் அகழ்வை மீண்டும் அனுமதிக்க கோரி ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.
திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், இறால் குழி பிரதேச மக்கள் 60க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இப்பிரதேச மக்களின் பிரதான தொழில் மண் அகழ்வாகும். எனினும், சமீபத்தில் இது இடைநிறுத்தப்பட்டதால், அவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மண் அகழ்வு மீண்டும் அனுமதிக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்து, பதாகைகளை ஏந்தியும் முழக்கங்களையும் எழுப்பியும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் இதுகுறித்து இதுவரை எந்தவித தீர்வையும் வழங்கவில்லை என போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
எனினும், குறித்த பகுதியில் அதிகளவில் சட்டவிரோத மண் அகழ்வுகள் இடம்பெறுவதாகவும், இதனால் சூழல் பாதிப்பு ஏற்படுவதாகவும் அரச அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் பின்னணியில் மண் மாபியாவை சேர்ந்த நபர்கள் உள்ளனரா எனவும் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.