பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது நுவரெலியாவில் மசாஜ் நிலையம் போர்வையில் இயங்கி வந்த விபசார விடுதியில் இருந்து 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நுவரெலியா – கண்டி பிரதான வீதியில், பம்பரகலை பகுதியில் மசாஜ் நிலையம் என்ற பெயரில் செயல்பட்டு வந்த விபசார விடுதி மீது பொலிஸார் நேற்று (11) சுற்றிவளைப்பு நடத்தினர். இதன் போது, அங்கு செயலில் இருந்த நான்கு பெண்களும் இரண்டு ஆண்களும் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் பரிசோதகர் மேனன் தலைமையில் பொலிஸ் குழு செயல்பட்டது. அவர்கள் திட்டமிட்ட முறையில் முற்றுகையிட்டு, சோதனை மேற்கொண்டு குறித்த விடுதியை சுற்றிவளைத்தனர்.
கைது செய்யப்பட்டவர்களின் வயது 21 முதல் 35 வரை உள்ளதாகவும், இவர்கள் வெளிமடை, இரத்தினபுரி மற்றும் கொழும்பு போன்ற பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட 6 சந்தேகநபர்களும் தனித்தனியாக விசாரணைக்குட்படுத்தப்பட்டு, மேலதிக விசாரணைகள் முடிந்ததன் பின்னர் அவர்கள் நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், இந்த விடுதியின் செயல்பாடுகள் தொடர்பாக கூடுதல் தகவல்கள் பெற்று, சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.