கொழும்பு அளுத்கடை நீதிமன்றத்துக்கு முன்பாக இன்று (11-02-2025) மூன்றரை வயது சிறுவன் பஸ்லி ஹம்தியின் சிறுநீரகம் திருடப்பட்ட சம்பவத்திற்கான நீதியை வேண்டி அமைதிப் போராட்டம் ஒன்று இடம்பெற்றது.
2021ம் ஆண்டு சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட ஹம்தி, சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கு இடது புற சிறுநீரகம் பழுதடைந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்திருந்தனர்.
சிகிச்சைக்காக காத்திருப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டதாக பெற்றோர்களுக்கு வைத்தியர்களால் அறிவிக்கப்பட்டது. பின்னர், வைத்தியசாலை அறுவை சிகிச்சையை மேற்கொண்டு, அது வெற்றிகரமாக முடிந்ததாக கூறப்பட்டது என பஸ்லி ஹம்தியின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
ஆனால், சிகிச்சைக்குப் பின்னர் சிறுவனின் உடல் பருமன் திடீரென அதிகரிக்கத் தொடங்கியதை கவனித்த வைத்தியர்கள் மேலதிக பரிசோதனை செய்தபோது சிறுவனின் இரண்டு சிறுநீரகங்களும் அகற்றப்பட்டுள்ளது எனும் அதிர்ச்சி தகவல் ஒன்று வெளிச்சத்துக்கு வந்தது. .
இதற்கிடையே, சம்பவத்துடன் தொடர்புடைய வைத்தியர் நாட்டைவிட்டு வெளியேறியதாக தகவல்கள் வந்தன. பெற்றோர்கள் நீதிமன்றத்தை நாடியதைத் தொடர்ந்து, இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இன்றைய தினம் (11-02-2025) தீர்ப்பு அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டிருந்த போதிலும், இம்மாதம் 21ம் திகதி (வெள்ளிக்கிழமை) பிற்போடப்பட்டுள்ளது என்றும், அதற்கான அறிவித்தல் விடுக்கப்படும் எனவும் நீதிமன்றத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதிக்காக சிறுவனின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் இன்று காலை நீதிமன்றத்திற்கு முன்பாக பதாகைகளை ஏந்தி சிறுநீரகம் திருடப்பட்டதற்கான நீதி கோரி அமைதியான முறையில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் நாடுமுழுவதும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.