திருகோணமலை – கொழும்பு பகல் நேர ரயில் சேவையின் இடைநிறுத்தம் பொது மக்கள் மற்றும் பயணிகளுக்குப் பெரும் சிரமங்களை ஏற்படுத்தியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மக்ரூப் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப், இந்த சேவையை மீண்டும் ஆரம்பிப்பதற்கான கோரிக்கையை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் விமானப்போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்கவிடம் விடுத்துள்ளார்.
கடந்த சில ஆண்டுகளில், திருகோணமலை – கொழும்பு பகல் நேர ரயில் சேவை பகல் 11.00 மணிக்கு திருகோணமலையிலிருந்து கொழும்பு செல்லும் பயணிகளுக்கு முக்கியமான போக்குவரத்து மார்க்கமாக விளங்கியதாக குறிப்பிட்டுள்ள இவர், இச் சேவையை பயன்படுத்துவோரில் பெரும்பாலானோர் ஏழை விவசாயிகள், நோயாளிகள் மற்றும் உல்லாசப் பயணிகள் ஆவார் எனவும் தெரிவித்திருந்தார்.
மேலும், கொழும்பு செல்வதற்கு அவர்களுக்கான ஒரு முக்கியமான மற்றும் எளிதான போக்குவரத்தாக அமைந்திருந்த போதிலும், இந்த ரயில் சேவை திடீரென இடைநிறுத்தப்பட்டுள்ளதால், மக்கள் பெரும் அசௌகரியங்களை சந்தித்து வருவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
குறிப்பாக, தமது உற்பத்திப் பொருட்களை கொண்டு செல்லும் ஏழை விவசாயிகளும், கொழும்புக்கு வைத்திய சிகிச்சைக்காக செல்லும் நோயாளிகளும் இந்த ரயில் சேவையை அதிகமாகப் பயன்படுத்தி வந்ததாக அவர் தெரிவித்தார்.
இதனைவிட திருகோணமலைக்கு வருகை தரும் உல்லாசப் பயணிகளும் அதிகளவில் இந்த ரயில் சேவையைப் பயன்படுத்தி வந்தனர் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், குறித்த ரயில் சேவை திடீரென இடைநிறுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்களும், உல்லாசப் பிரயாணிகளும் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர் என தெரிவித்த இம்ரான் மகரூப் அவர்கள், இந்த ரயில் சேவையை மீள ஆரம்பிக்க வேண்டுமென அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.
இவற்றை செவிமடுத்த அமைச்சர் விரைவில் இத குறித்த நல்ல தீர்மானம் ஒன்றுக்கு வருவதாக வாக்குறுதி அளித்தார்.



