இலங்கை மற்றும் இந்திய யாத்திகர்கள் உள்ளிட்ட 9 ஆயிரம் யாத்திரிகர்கள் கச்சதீவு பெருந்திருவிழாவுக்கு வருகை தருவர் என்ற எதிர்பார்ப்புடன் இவ்வாண்டுக்கான பெருவிழா மார்ச் 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளதாக யாழ் மாவட்ட பதில் செயலாளர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்தார்.
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா தொடர்பான கலந்துரையாடல் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நடைபெற இந்த கூட்டத்தில் யாழ். இந்திய துணை தூதரகத்தின் அதிகாரிகள், கடற்படையினர், இராணுவத்தினர், பொலிஸார், துறைசார் அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டனர்.
திருவிழாவுக்கான ஏற்பாடுகள் குறித்து துறைசார் தரப்பினருடன் மேற்கொண்ட நீண்ட நேர கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்தத் தெரிவித்த மாவட்ட பதில் செயலாளர் பிரதீபன் கூறுகையில் –
திருவிழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொள்ளதற்கான குறிப்பாக குடிநீர், மலசலகூடம், சுகாதார சேவைகள், பேருந்து வசதி, கடற் போக்குவரத்து உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டன. இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு பிரதேச செயலக அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு தரப்பினர் உள்ளிட்ட அதிகாரிகள் தயாராகியுள்ளனர்.
இதேநேரம் பேருந்து போக்குவரத்து சேவையை முன்னெடுக்க இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பேருந்து சேவையில் ஈடுபடும் தரப்பினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேபோன்று கடற் போக்குவரத்து சேவையை மேற்கொள்ளவுள்ள படகுகளின் தரம் தொடர்பில் கடற்படையினர் ஆய்வுகளை மேற்கொண்டு அதற்கான அனுமதிகள் வழங்கப்படவுள்ளது.
அத்துடன் கடற்போக்குவரத்து சேவைக்கான கட்டணங்களும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக நெடுந்தீவில் இருந்து கச்சதீவுக்கான ஒரு வழி போக்குவரத்து கட்டடணமாக 1000 ரூபாவும், குறிகாட்டுவன் துறைமுகத்திலிருந்து ஒரு வழி போக்குவரத்து கட்டடணமாக 1300 ரூபாவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் வருகைதரும் யாத்திரிகர்களுக்கு உணவு வழங்குவதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில் பெருந்திருவிழாவுக்கு இம்முறை இந்தியாவிலிருந்து 4 ஆயிரம் யாத்திரிகர்களுக்கும் இலங்கையின் 4 ஆயிரம் யாத்திரிகர்களுக்கும் அனுமதிக்கப்படவுள்ளதுடன் இரு நாடுகளினதும் அதிகாரிகள் மற்றும் சேவையாளர்கள் என ஆயிரம் பேருமாக 9 ஆயிரம் பேர் வருகைதரவுள்ளனர்.
அந்தவகையில் குறித்த பெருந்திருவிழாவுக்கு வருகைதரவுள்ளவர்கள் ஏற்பாட்டாளர்களால் வழங்கப்படும் அறிவுறுத்தல்களை பின்பற்றி எதுவித இடையூறுகளும் இன்றி கலந்துகொள்ளுமாறும் அரச அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.



