30 ஆண்டுகள் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்தாலும், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு அழிக்கப்பட்டிருந்தாலும், அதன் நோக்கம் இன்னும் தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் வியாபித்துள்ளதாகவும், இதனால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டுமெனவும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
நேற்று (30) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர், காலி முகத்திடலில் நடைபெற்ற மக்கள் எழுச்சிப் போராட்டத்தில் விடுதலைப் புலிகளின் இலக்கு வெளிப்பட்டதாகவும், இதனால் பாதுகாப்பு குறித்து கவனம் செலுத்த வேண்டிய அவசியம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
சந்தையில் நிலவும் அரிசி மற்றும் தேங்காய் தட்டுப்பாட்டுக்கு அரசாங்கம் வெகுவிரைவில் தீர்வு காண வேண்டும் எனவும், மொத்த நுகர்வுக்கு தேவையான அளவில் தேசிய மட்டத்தில் தேங்காய் உற்பத்தி செய்யப்படுவதில்லை எனவும் கூறிய திசாநாயக்க, பெரும்பாலான தென்னந்தோப்புகள் அழிக்கப்பட்டுள்ளதாகவும், தென்னை தோப்புக்கள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை எனவும், கூறியுள்ளதோடு, இவ்வாறான பின்னணியில் அதிகளவான தெங்கு விளைச்சலை எவ்வாறு எதிர்பார்க்க முடியும் எனவும் தனது கருத்தினை வெளியிட்டுள்ளார்.
அத்துடன், முன்னாள் ஜனாதிபதிகளுக்கான அரச உத்தியோகபூர்வ இல்லங்கள் வழங்கப்பட வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தாலும், அவற்றை அவர்கள் விருப்பத்திற்கேற்ப புதுப்பிக்க அனுமதி இல்லை எனவும் கருத்தினை வெளியிட்ட திஸாநாயக்க, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்ட விஜேராம இல்லம் அரச செலவில் பல மில்லியன் ரூபா செலவழித்து புதுப்பிக்கப்பட்டுள்ளதாகவும், இது நாட்டின் பொருளாதார நிலைமைக்கு கருத்திற்கொள்ளாமல் மேற்கொள்ளப்பட்ட முறையற்ற செயற்பாடாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
30 ஆண்டுகள் நீடித்த யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த மஹிந்த ராஜபக்ஷவால், விடுதலைப் புலிகள் அழிந்திருந்தாலும், அதன் நோக்கம் இன்னும் பலரால் தொடரப்பட்டு வருவதாகவும் தெரிவித்த இவர் மஹிந்த ராஜபக்ஷவின் பாதுக்காப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.