இலங்கையின் எதிர்கால முன்னேற்றம் மற்றும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றுவதற்கான அனைத்து முடிவுகளையும் தற்போதைய அரசாங்கம் எடுக்கும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
சர்வதேச சுங்க தினத்தை முன்னிட்டு, நேற்று (27) பிற்பகல், சுங்கத் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த கருத்துக்களைத் தெரிவித்தார்.
இந்த வருடம் சர்வதேச சுங்க தினம் “சுபீட்சமான தேசத்தை உருவாக்க வினைத்திறனான சுங்கத் திணைக்களம்” என்ற தொனிப்பொருளின் கீழ் கொண்டாடப்படுகின்றது.
1952ம் ஆண்டு 17 ஐரோப்பிய நாடுகளின் பங்கேற்புடன் சுங்க ஒத்துழைப்பு கவுன்சிலாக நிறுவப்பட்ட இந்த சர்வதேச அமைப்பில், 1967ம் ஆண்டு இலங்கை உறுப்பினராக இணைந்தது. 1994ல், சுங்க ஒத்துழைப்பு கவுன்சில் உலக சுங்க அமைப்பு என பெயரிடப்பட்டது.
1953ம் ஆண்டு ஜனவரி 26ம் திகதி பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸில் நடைபெற்ற சுங்க ஒத்துழைப்பு கவுன்சிலின் முதல் அமர்வை நினைவுகூரும் வகையில் இந்த தினம் சர்வதேச சுங்க தினமாக பெயரிடப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26ம் திகதி, உலகின் அனைத்து நாடுகளிலும் உள்ள சுங்க நிறுவனங்கள் இந்தத் தினத்தைக் கொண்டாடுகின்றன.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மேலும் கூறுகையில், “இந்த வருடம், அரச ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அரச சேவையை மேலும் திறம்படச் செயற்படுத்த, டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் தொழில்நுட்பத்தை இணைத்துக்கொள்ளும் திட்டம் இருக்கின்றது.”
அவர், “சுங்கத் திணைக்களத்தில் கட்டமைப்பு ரீதியான சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும். காலத்தின் சவால்களைத் தாண்டி, தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்,” என தெரிவித்தார்.
மேலும், “இலங்கையின் இயற்கையான அமைவிடத்தைப் பயன்படுத்துவதற்கான சில வாய்ப்புகள் இழந்திருக்கின்றன. எதிர்காலத்தில் இலங்கை துறைமுகத்தில் 113 இலட்சம் கொள்கலன் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும்,” என அவர் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் சிறப்பாக பணியாற்றிய 20 சுங்க அதிகாரிகளுக்கு உலக சுங்க அமைப்பின் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு, இரண்டு அதிகாரிகளுக்கு தகைமை விருதுகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் தொழில் அமைச்சர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ, நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, சட்டமா அதிபர் பாரிந்த ரணசிங்க, மற்றும் சுங்கத் திணைக்கள அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.