இன்று (28) இலங்கை வர்த்தக சபையால் ஏற்பாடு செய்யப்பட்ட இலங்கை பொருளாதார உச்சி மாநாடு கொழும்பில் உள்ள ஷங்க்ரி-லா ஹோட்டலில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் ஆரம்பமாகிறது. இந்நிகழ்வின் தொடக்க அமர்வில் ஜனாதிபதி பிரதம விருந்தினராக கலந்து கொண்டு, நிலையான பொருளாதார முன்னேற்றத்திற்கான அரசாங்கத்தின் தொலைநோக்கு பார்வை குறித்து வர்த்தக சபையின் துணைத் தலைவர் பிங்குமல் தேவரதந்திரியுடன் உரையாடவுள்ளார்.
இந்த ஆண்டின் மாநாடு, “இலங்கையின் எதிர்காலத்தை வடிவமைத்தல். நல்ல பொருளாதாரக் கொள்கைகளுடன் உருமாறும் வளர்ச்சி” என்ற கருப்பொருளின் கீழ் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் வணிகத் தலைவர்கள், கொள்கை வகுப்பாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் மூத்த நிறுவன பிரதிநிதிகள் முன்னோடியில்லாத அளவில் பங்கேற்கின்றனர்.
மாநாட்டின் தொடக்க உரையை இலங்கை வர்த்தக சபையின் தலைவர் துமிந்த ஹுலங்கமுவ நிகழ்த்தவுள்ளார். மேலும், இலங்கை வர்த்தக சபையின் துணைத் தலைவர் கிருஷ்ணா பாலேந்திரா உட்பட பல முக்கிய வணிகத் தலைவர்கள் இன்றைய அமர்வில் பங்கேற்க உள்ளனர்.
இந்த மாநாடு நாளை (29) ஜனாதிபதியின் டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான தலைமை ஆலோசகர் டாக்டர் ஹான்ஸ் விஜயசூரியவுடனான சிறப்பு கலந்துரையாடலுடன் ஆரம்பமாகும். அதன்பின்னர் உள்ளூர் மற்றும் சர்வதேச வணிகத் தலைவர்கள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள் பல்வேறு அமர்வுகளில் பங்கேற்க திட்டமிடப்பட்டுள்ளது.
இலங்கையின் பொருளாதாரத்தை முன்னேற்றும் முக்கிய தீர்வுகளை முன்வைக்கும் இம்மாநாடு, இலங்கை வர்த்தகத்தின் வளர்ச்சியில் புதிய சாதனைகள் ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.