தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் அமைப்பாளரும், உலக மீனவ சம்மேளனத்தின் பொதுச் செயலாளருமான கேமன்குமார, தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் முல்லைத்தீவு மாவட்ட இணைப்பாளர் சிங்கராசா பிரதாஸ் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகள் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனுடன் முக்கிய சந்திப்பொன்றை மேற்கொண்டுள்ளனர்.
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள எம்.பி. துரைராசா ரவிகரனின் மக்கள் தொடர்பகத்தில் இந்த கலந்துரையாடல் நடைபெற்றது. இதில் வடபகுதி மீனவர்கள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினைகள் மற்றும் அவற்றுக்கு தீர்வுகள் காணும் வழிமுறைகள் குறித்து விரிவாகப் பேசப்பட்டது.
கடற்கரையோர வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையிலும், மீனவர்களுக்கு ஏற்பட்டுள்ள தொழில்துறை சவால்களையும், அவற்றை சமாளிக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்துக்கொள்வது தொடர்பிலும், இந்தச் சந்திப்பு முக்கிய பங்குவகித்தது.
மீனவர்களின் உரிமைகளையும், கடல்சார் வளங்களை நிலைநிறுத்துவதற்கான முயற்சிகளையும் அதிகரிக்க, உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று எம்.பி. துரைராசா ரவிகரன் உறுதியளித்துள்ளதோடு, இந்த கலந்துரையாடல் மீனவர்களிடையே முக்கிய எதிர்பார்ப்புகளை தோற்றுவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்..