நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, சில பகுதிகளில் கடும் மழையுடன் கூடிய அனர்த்தங்கள் உருவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது. குறிப்பாக, வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதனுடன் தொடர்புடைய முக்கிய பகுதிகள் என்ற அடிப்படையில், கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்கள் 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைக்கு வாய்ப்புள்ள பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுகள் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் அவ்வப்போது மணிக்கு 30-40 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீச வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வட மாகாணம், மாத்தளை, நுவரெலியா, பொலன்னறுவை, காலி, மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் மேல் கனமழை ஏற்படும் எனவும் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் காலை வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
அதேவேளை, இடியுடன் கூடிய மழையின் போது மின்னல் தாக்கம், வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு மற்றும் வெள்ள நீரின் உயர்வு போன்ற அனர்த்தங்களைத் தடுக்க அவசியமான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.