சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவியை ரயில் முன்பாக தள்ளிவிட்டு கொலை செய்த குற்றத்துக்காக இளைஞர் சதீஷுக்கு தூக்கு தண்டனை விதித்து சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. குடும்பத்தை இழந்து தவிக்கும் மாணவியின் தங்கைகளுக்கு இளைஞருக்கான அபராதத்தில் இருந்து ரூ.25 ஆயிரமும், தமிழக அரசு ரூ.10 லட்சமும் வழங்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை பரங்கிமலை காவலர் குடியிருப்பில் வசித்த மாணிக்கம் – தலைமைக் காவலர் ராமலட்சுமி தம்பதியின் மூத்த மகள் சத்யபிரியா. இவர் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் பிபிஏ 3-ம் ஆண்டு படித்து வந்தார். இவரும், அதே குடியிருப்பில் வசித்துவந்த முன்னாள் உதவி ஆய்வாளர் தயாளனின் மகன் சதீஷும் காதலித்து வந்துள்ளனர்.
டிப்ளமா முடித்த சதீஷ், வேலைக்கு செல்லாமல் சுற்றிவந்ததால் இவர்களது காதலுக்கு சத்யபிரியாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால், சதீஷைவிட்டு விலகினார் சத்யபிரியா. ஆனாலும் சதீஷ் விடாமல் பின்தொடர்ந்து வந்து, காதலிக்குமாறு வற்புறுத்தி வந்துள்ளார்.
இந்த நிலையில், கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் 13-ம் தேதி மதியம் 1.30 மணி அளவில் வழக்கம்போல கல்லூரிக்கு செல்வதற்காக பரங்கிமலை ரயில் நிலையத்துக்கு சத்யபிரியா வந்துள்ளார். மின்சார ரயிலுக்காக நடைமேடையில் காத்திருந்தார். அப்போது, அங்கு வந்த சதீஷ், தன்னை காதலிக்குமாறு கூறி சத்யபிரியாவிடம் மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த சதீஷ், ரயில் முன்பாக சத்யபிரியாவை தள்ளிவிட்டு கொலை செய்தார். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த வழக்கில் சதீஷ் கைது செய்யப்பட்டார். பின்னர், இந்த வழக்கு சிபிசிஐடி போலீஸாருக்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்து வந்தது.
இதற்கிடையே, மகள் உயிரிழந்த சோகம் தாளாமல் சத்யபி்ரியாவின் தந்தை மாணிக்கம் தற்கொலை செய்து கொண்டார். கணவரும், மகளும் இறந்த நிலையில் உடல்நல கோளாறு காரணமாக சிகிச்சை பெற்று வந்த சத்யபிரியாவின் தாய் ராமலட்சுமியும் இறந்தார். ஒரே குடும்பத்தில் 3 பேர் அடுத்தடுத்து உயிரிழந்த நிலையில், சத்யபிரியாவின் தங்கைகள் இருவரும் தற்போது தங்களது மாமாவின் பராமரிப்பில் இருந்து வருகின்றனர்.
இந்நிலையில், சத்யபிரியா கொலை வழக்கு தொடர்பாக சென்னை அல்லிக்குளத்தில் உள்ள மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீஸார் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். வழக்கை நீதிபதி ஸ்ரீதேவி விசாரித்தார். சிபிசிஐடி தரப்பில் சிறப்பு வழக்கறிஞர் ரவீந்திரநாத் ஜெயபால் ஆஜராகி வாதிட்டார். அரசு தரப்பில் 70 சாட்சிகளிடம் விசாரிக்கப்பட்டது. இந்த வழக்கில் சதீஷுக்கு ஜாமீன் கிடைக்காமல் புழல் சிறையிலேயே இருந்து வந்தார்.
அனைத்து தரப்பிலும் வாதங்கள் முடிவடைந்த நிலையில், மாணவி சத்யபிரியாவை கொலை செய்த சதீஷை குற்றவாளி என கடந்த 27-ம் தேதி அறிவித்த நீதிபதி ஸ்ரீதேவி, தண்டனை விவரங்களை தள்ளிவைத்தார்.
இந்நிலையில், தண்டனை அறிவிப்புக்காக, புழல் சிறையில் இருந்து சதீஷ் அழைத்து வரப்பட்டு, நீதிபதி ஸ்ரீதேவி முன்பு நேற்று பிற்பகலில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, தண்டனை குறித்து அவரிடம் நீதிபதி தெரிவித்தார். அதற்கு, வயதான பெற்றோர் இருப்பதாலும், தனக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு இருப்பதாலும் குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று சதீஷ் கூறினார்.
இதையடுத்து, தண்டனை விவரத்தை நீதிபதி ஸ்ரீதேவி அறிவித்தார். பட்டப்பகலில் அனைவரது முன்னிலையிலும் ரயில் முன்பாக தள்ளி மாணவி சத்யபிரியாவை கொலை செய்த கொடூர குற்றத்துக்காக அதிகபட்ச தண்டனையாக சதீஷுக்கு தூக்கு தண்டனையுடன், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் சதீஷுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையுடன், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
‘மொத்தம் ரூ.35 ஆயிரம் அபராதத்தில் ரூ.25 ஆயிரத்தை சத்யபிரியாவின் தங்கைகளான தாரணி, மோனிஷாவுக்கு வழங்க வேண்டும். அவர்கள் இருவரும் குடும்பத்தை இழந்து கடும் மன வேதனையுடன் இருப்பதால், அவர்களுக்கு தமிழக அரசும் தனது இழப்பீட்டு நிதியத்தில் இருந்து ரூ.10 லட்சத்தை இழப்பீடாக வழங்க வேண்டும்’ என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். சதீஷுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை உறுதி செய்வதற்காக, இந்த வழக்கின் ஆவணங்களை சென்னை உயர் நீதிமன்றத்துக்கு அனுப்பி வைக்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.