ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்ட அறிவிப்பில், ‘தூய்மையான இலங்கை’ (Clean Sri Lanka) வேலைத்திட்டம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் எதிர்வரும் 1ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக, ஜனாதிபதியின் செயலாளர் டாக்டர் என். எஸ். குமாநாயக்க, பதில் பொலிஸ் மா அதிபர் மற்றும் முப்படைகளின் தளபதிகள் உட்பட 18 பேர் கொண்ட ஜனாதிபதி செயலணியொன்று அண்மையில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஜனாதிபதி செயலணியின் பொறுப்புகள் என்ற அடிப்படையில், ‘தூய்மையான இலங்கை’ திட்டத்தை திட்டமிடல், வழிகாட்டுதல், நடைமுறைப்படுத்துதல், முன்னேற்றத்தை மீளாய்வு செய்தல் மற்றும் குறிப்பிட்ட கால எல்லைக்குள் நிறைவு செய்தல் என்பன குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வேலைத்திட்டம், இலங்கையின் சுற்றுச்சூழல் மற்றும் சமூக ஆரோக்கியத்தை மேம்படுத்தும் முக்கிய முயற்சியாக கருதப்படுகிறது.