மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு தோளில் பொருத்தப்பட்டிருந்த பிளேட் அகற்றப்பட்டது.
கட்சி நிர்வாகியின் மகள் திருமணத்துக்குச் செல்வதற்காக கடந்த மே 25ஆம் திகதி நெல்லையில் தனது சகோதரர் வீட்டில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தங்கியிருந்தார். அங்கு கால் இடறி விழுந்ததில் வைகோவுக்கு இடது தோளில் லேசான எலும்பு முறிவு ஏற்பட்டது. இதையடுத்து சென்னை திரும்பிய அவர், ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரது இடது தோளில் மூன்று இடத்தில் எலும்புகள் உடைந்திருந்தன. அதை சரி செய்ய அம்மாதம் 29-ம் தேதி அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, டைட்டானியம் பிளேட் வைக்கப்பட்டது. இதையடுத்து சிறிது நாட்கள் வீட்டில் ஓய்வில் இருந்த வைகோ, பின்னர் கட்சி நிகழ்ச்சிகள், பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார்.
இந்நிலையில், தோளில் வைக்கப்பட்ட பிளேட்டை அகற்றுவதற்காக அப்போலோ மருத்துவமனையில் நேற்று முன்தினம் இரவு வைகோ அனுமதிக்கப்பட்டார். அங்கு பரிசோதனைக்குப் பிறகு, பிளேட்டை மருத்துவர்கள் அகற்றினர். இதையடுத்து அவர் நேற்று வீடு திரும்பினார்.