நாட்டில் உள்ள இஸ்ரேலிய பிரஜைகள் மீது தாக்குதல் நடத்தும் திட்டத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் மேலும் பல சந்தேகநபர்கள் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பயங்கரவாத புலனாய்வு பிரிவினர் கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேனவிடம் நேற்று அறிவித்துள்ளனர்.
அறுகம் குடாவில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டது தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் விசாரணைக்குட்படுத்தப்பட்ட போது, இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் பல சந்தேகநபர்கள் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளதாக யங்கரவாத புலனாய்வு பிரிவினர் நீதிமன்றத்திற்கு அறிவித்தது.
இதன்படி, யங்கரவாத புலனாய்வு பிரிவினர், விசேட மனுவொன்றை தாக்கல் செய்து, சந்தேகநபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆரம்பிக்க நீதவானிடம் அனுமதி கோரினர்.
இந்த சம்பவம் தொடர்பான அனைத்து விசாரணைகளையும் மேற்கொண்டு சந்தேக நபர்களை உடனடியாக கைது செய்யுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
கிடைத்த தகவலின் பிரகாரம் கடந்த செப்டெம்பர் மாதம் இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதாகவும், இதுவரை மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். மேலதிக விசாரணைகளுக்காக சந்தேகநபர்களை குற்றப் புலனாய்வுப் பிரிவில் தடுத்து வைக்க அனுமதி வழங்குமாறும் கோரியுள்ளனர்.
குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சமர்ப்பித்த உண்மைகள் மற்றும் விசேட அறிக்கையை பரிசீலித்த மேலதிக நீதவான், உரிய கோரிக்கைகளை அனுமதித்து விசாரணைக் கோப்பில் வாய்மொழியாக முன்வைக்கப்பட்ட உண்மைகளை பதிவு செய்தார்.
இதன்படி, முன்வைக்கப்பட்ட உண்மைகளை பரிசீலித்த நீதிமன்றம், இந்த சந்தேக நபர்களிடம் நீண்ட விசாரணை நடத்தவும் உத்தரவிட்டது.