செம்மணி படுகொலைக்கு சர்வதேச நீதி கோரி “நீதியின் ஓலம் 2” போராட்டம் நாளை ஆரம்பம்!

Date:

செம்மணிப் படுகொலைக்கு சர்வதேச நீதி கோரி  “நீதியின் ஓலம் 2”  கவனயீர்ப்பு போராட்டம் நாளை (14)  ஆரம்பிக்கப்படவுள்ளதாக தாயகச் செயலணி அறிவித்துள்ளது.
இது தொடர்பில் யாழ் ஊடக அமையத்தில் இன்று (13) ஊடக சந்திப்பொன்றை முன்னெடுத்து இவ்வாறு கூறிய ஏற்பாட்டுக் குழு மேலும் தெரிவிக்கையில் –
தமிழர்கள்மீது தொடர்ந்து நடைபெறும் இனவழிப்பின் சாட்சியாக, யாழ்ப்பாணம் செம்மணியில் அகழ்ந்தறியப்பட்ட மனிதப் புதைகுழிகளில் இருந்து 544 க்கும் மேற்பட்ட எலும்புத் தொகுதிகள் இதுநாள்வரை மீட்கப்பட்டுள்ளன.
இதே நேரம் செம்மணி மனிதப் புதைகுழி என்பது, ஈழத் தமிழர்கள்மீது இலங்கை அரச பயங்கரவாதத்தால் நடத்தப்பட்ட மனிதப் பேரவலத்தின் ஒரு சிறு சாட்சியம் மட்டுமே.
குறிப்பாக,இந்த புதைகுழியை இலங்கை அரசியல் இயந்திரங்கள் அவற்றை முழுமையாக விசாரணை செய்யாமல், மூடி மறைத்து வந்தன.
ஆனாலும் கடந்த ஆண்டு, அப்பகுதியில் கட்டுமான வேலைக்காக நடைபெற்ற அகழ்வுப் பணியின் போது மனித எலும்புக்கூடுகள் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டன.
ஆனால், இவ்விடயத்தை மூடி மறைக்கும் முயற்சிகளை இன்றைய அரசுத் தரப்பாலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தமிழ் மக்கள் மேற்கொண்ட தொடர்ச்சியான அழுத்தங்களின் மூலமே இதுவரை பல எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன.
இதைப் பற்றிய கவனயீர்ப்பு நிகழ்வு, அணையாவிளக்கு மற்றும் நீதியின் ஓலம் போன்ற தொடர் போராட்டங்கள் எமது மக்களால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அதன் தொடர்ச்சியாக, 14.08.2026 வெள்ளி க்கிழமை தொடங்கி 17/08/2026 வரை தொடர்ந்து நான்கு நாட்கள் யாழ் நகரில் “நீதியின் ஓலம் 2” எனும் போராட்டத்தின் வாயிலாக, தமிழினப்படுகொலைக்கு சர்வதேச நீதி கோரும் வகையில் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் “நீதியின் ஓலம் 2” போராட்டத்தில்  முதன்மை கோரிக்கைகளாக
இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட செம்மணி உட்பட்ட அனைத்து மனிதப் புதைகுழிகளுக்கும் முழுமையான சர்வதேச நீதிவிசாரணை நடைபெற வேண்டும்.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. மனிதவுரிமைகள் பேரவையில் இலங்கை மீது வலுவான தீர்மானம் கொண்டு வந்து, அனைத்து நாடுகளும் தெளிவான நிலைப்பாடு எடுக்க வேண்டும்.
தமிழர்கள்மீது இனப்படுகொலை செய்த படை அதிகாரிகளுக்கு அமெரிக்கா, பிரித்தானியா, கனடா போல அனைத்து நாடுகளும் பயணத் தடையை நடைமுறைப்படுத்த வேண்டும்.
தமிழர் இனவழிப்பில் பாதிக்கப்பட்டவர்களையும் சாட்சியங்களையும் பாதுகாக்க ஐக்கிய நாடுகள் சபை முழுமையான பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்.
இலங்கை அரசு கையகப்படுத்தியுள்ள தமிழர்களின் பாரம்பரிய வாழ்விடங்களை விடுவிப்பதோடு, தமிழர் தாயகத்தை பல்வேறு வகையில் கையகப்படுத்தும் நடவடிக்கைகளை நிறுத்த சர்வதேச நாடுகள் அழுத்தம் கொடுக்க வேண்டும்.
“பயங்கரவாதத் தடைச் சட்டம்” என்ற பெயரில் இன்றும் தொடரும் தமிழின அடக்குமுறைகளை நிறுத்தவும், நீண்டகாலமாகச் சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்யவும் சர்வதேச அழுத்தம் தேவை.
கடந்த 77 ஆண்டுகளாக ஒற்றை ஆட்சியின் கீழ் கட்டமைக்கப்பட்ட தமிழின சுத்திகரிப்பையும் தொடரும் தமிழர் இனவழிப்பையும் நினைவழிப்பையும் நிறுத்தி, ஓர் சர்வதேச நீதிப்பொறிமுறை மூலம் தமிழர்களின் வாழ்வுரிமையை உறுதிசெய்ய அனைத்து நாடுகளும் ஆதரவு வழங்க வேண்டும்.”
வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகள் தமிழர்களின் பூர்வீகத் தாயகம் என்பதையும், தமிழ் மக்கள் சுயநிர்ணய உரிமை உடையவர்கள் என்பதையும் ஏற்றுக்கொண்டு, வட்டுக்கோட்டைத் தீர்மானம் மற்றும் திம்பு பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் இறையாண்மை உள்ள தேச அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும்.
Unitary State / Ekiya Rajya அடிப்படையிலான போலி தீர்வு திட்டங்கள் நிராகரிக்கப்பட வேண்டும்; தமிழர் தேச அதிகாரங்கள் மீளப்பெற முடியாத சுயநிர்ணயத்தின் அடிப்படையிலும் சர்வதேச உத்தரவாதத்துடனும் உறுதி செய்யப்பட வேண்டும்.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் முழுமையாக ரத்து செய்யப்பட்டு, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்துக்கு மாற்றீடான சட்டமூலம் (PTSA) முழுமையாக மீளப்பெறப்பட வேண்டும்
ஆகிய 10  விடயங்களை வலியுறுத்தி, “நீதியின் ஓலம் 2” என்ற போராட்டம் 14.08.2026 வெள்ளி க்கிழமை மாலை 4 மணி க்கு செம்மணியில் ஆரம்பித்து 15 மற்றும் 16 ம் திகதிகளில் அடையாள போராட்டமாக தொடர்ந்து தமிழர் தாயகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இருந்து மக்கள் திரண்டு வருகை தந்து, இறுதி நாள் (17/08/2026) 11 மணியளவில் யாழ் நூலகம் – இருந்து ஊர்வலமாக ஆரம்பித்து மாபெரும் பேரணி யாழ் ஐக்கிய நாடுகள் அலுவலகம் வரை சென்றடைய உள்ளது.
இந்தப் போராட்டம் வெற்றியடைய, அனைத்து தரப்புன் பேராதரவும் ஒத்துழைப்பும் வழங்கி போராட்டத்தை  வலுப்பெறச் செய்யுமாறும் அழைப்பு விடுத்துள்ளனர்.
spot_imgspot_img

More like this
Related

காரைதீவு பிரதேச வைத்தியசாலையின் அபிவிருத்தி தொடர்பான விசேட கூட்டம்

காரைதீவு பிரதேச வைத்தியசாலையின் அபிவிருத்தி தொடர்பான விசேட கூட்டமொன்று, கல்முனை பிராந்திய...

செல்வச்சந்நிதி வருடாந்த மஹோற்சவம்

தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய 2026ஆம் ஆண்டு மகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பம்  வரலாற்றுச் சிறப்புமிக்க...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்