கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கரந்தன் பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தமிழ் மக்கள் கூட்டணியின் பெண் ஆதரவாளர்களுடன் சேட்டை விட்ட இளைஞர்கள் குழு, அதை தட்டிக்கேட்ட கட்சி ஆதரவாளர்கள் மீது கொலை வெறி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் தமிழ் மக்கள் கூட்டணியின் ஆதரவாளர்கள் நேற்று மாலை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். பிரச்சாரக்குழுவொன்று வீதியோரமாக நடந்து சென்று கொண்டிருந்தது. இளம் பெண்ணொருவர் நடந்து சென்று கொண்டிருந்த போது, அவருக்கு முச்சக்கர வண்டியில் வெட்டுக்காட்டியுள்ளனர்.
அந்த யுவதியை வீதியோரமாக வருமாறு, பிரச்சாரத்தில் ஈடுபட்ட இளைஞன் ஒருவர் கூறினார்.
அந்த இளைஞன் என்ன கூறினார் என, முச்சக்கர வண்டியில் வந்த நால்வரும் வினவியுள்ளனர். அந்த யுவதியுடன் தான் பேசியதாகவும், உங்களுடன் பேசவில்லையென்றும் அந்த இளைஞன் கூறினார். முச்சக்கர வண்டிக்குள்ளிருந்து கொட்டன் ஒன்றை காட்டி மிரட்டி விட்டு அந்த குழு சென்றது.
4 பேர் அடங்கிய மற்றொரு பிரச்சாரக்குழு சற்று தொலைவில் சென்று கொண்டிருந்தது. அதில் அங்கம் வகித்த யுவதியொருவர் நடந்து சென்று கொண்டிருந்த போது, அவரது காதுக்குள் சென்று கூ சத்தமிட்டு விட்டு சென்றுள்ளனர்.
இதனால் இரு தரப்புக்குமிடையில் தகராறு ஏற்பட்டது. முச்சக்கர வண்டியில் வந்த குழுவினர், பிரச்சாரக்காரர்கள் மீது தாக்குதல் நடத்த முயன்ற போது, பிரச்சாரக்குழுவிலிருந்த இளைஞன் ஒருவர் குடையை பயன்படுத்தி தாக்கியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த குழுவினர், ஊருக்குள் சென்று 35 பேர் வரையான குழுவினரை அழைத்து வந்து, கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர். யுவதிகள், இளைஞர்கள் மீது பிளாஸ்டிக்பைப்களினால் தாக்குதலை நடத்தியுள்ளனர்.
பாதிக்கப்பட்ட பெண் உட்பட மூவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த பெண் அதிதீவிர சிகிச்சை பிரிவிலும் ஏனைய இருவரும் 24 ஆம் இலக்க விடுதியிலும் சிகிச்சை பெற்று வருவதாக அறிய முடிகிறது.
இச்சம்பவம் குறித்து கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.