பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் (டிஐஜி) ரவி செனவிரத்ன மற்றும் சிறிலங்கா காவல்துறையின் குற்றப் பிரிவின் பணிப்பாளர், குற்றப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர ஆகியோர் எக்காரணம் கொண்டும் அந்தப் பதவிகளில் இருந்து நீக்கப்பட மாட்டார்கள் என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில், இரண்டு அதிகாரிகளையும் பதவி நீக்கம் செய்ய வற்புறுத்தியவர்கள் சூழ்ச்சி நோக்கத்துடன் இதனைச் செய்கிறார்கள் என்றும், அத்தகைய முயற்சிகளுக்கு அரசாங்கம் அடிபணியாது என்றும் அவர் கூறினார்.
புதிய விசாரணைக்கு முன்னர் இரண்டு அதிகாரிகளையும் அரசாங்கம் நீக்குமா என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், உயர் நீதிமன்ற நீதிபதி ஜனக் டி சில்வா தலைமையிலான ஜனாதிபதி ஆணைக்குழுவோ அல்லது பாராளுமன்றத் தெரிவுக்குழுவோ (PSC) ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதலுக்கு பொறுப்பு ரவி சேனவிரத்ன அல்லது ஷானி அபேசேகர என கூறவில்லை.
ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனு மீதான தீர்ப்பில் உயர் நீதிமன்றம் கூட அவர்கள் எவரையும் குற்றவாளிகளாக அறிவிக்கவில்லை என்றும், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அரச புலனாய்வுப் பிரிவின் தலைவர் நிலந்த ஜயவர்தன மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர குற்றவாளியாக அறிவிக்கப்பட்டனர் என்றார்.
எவ்வாறாயினும், முறையான விசாரணையின் பின்னர் எந்தவொரு அதிகாரியும் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசாங்கம் தயங்காது என்றும் அமைச்சர் கூறினார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் அரசியல்ரீதியாக ஆதாயமடைந்த கோட்டா தரப்பின் அரசில் அமைச்சராக பதவிவகித்த உதய கம்மன்பில, அப்போது வாய்மூடி இருந்து விட்டு, தற்போது, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் அறிக்கையென ஒன்றை வெளியிட்டு புரளி கிளப்பிய நிலையில் அரசாங்கம் இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.