அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரும், மகாராஷ்டிராவின் முன்னாள் அமைச்சருமான பாபா சித்திக் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், நடிகர் சல்மான் கானின் பாதுகாப்பு குறித்த அச்சம் அதிகரித்துள்ளது. இதனையடுத்து மும்பை பாந்த்ராவில் உள்ள அவரது வீடான கேலக்ஸி அடுக்ககத்தின் வெளியே பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் சல்மான் கானின் குடும்பத்தினர், சினிமாதுறை நண்பர்கள் அவரை சந்திக்க வருவதைத் தவிர்க்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர். நடிகர் சல்மான் கான் அவரது நெருங்கிய நண்பர் பாபா சித்திக்கை இழந்திருப்பதால் மிகந்த வேதனையடைந்துள்ளதாகவும், மன வருத்தத்தில் இருப்பதாகவும் தகவல் அறிந்தவர்கள் தெரிவித்துள்ளனர். நேற்றிரவு லீலாவதி மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு வந்ததும் அவர் தூங்க முடியாமல் தவித்ததாகவும், அடிக்கடி பாபா சித்திக் மகன் மற்றும் குடும்பத்தினரை விசாரித்ததாகவும் தெரிவித்தனர்.
சித்திக்க குடும்பத்தினருக்கு நெருக்கமான ஒருவர் கூறுகையில், “இறுதிச் சடங்கு ஏற்பாடுகள் குறித்து சல்மான் கான் தொலைப்பேசியில் கேட்டறிந்து வருகிறார். அடுத்த சில நாட்களுக்கான தனது தனிப்பட்ட சந்திப்புகள் அனைத்தையும் அவர் ரத்து செய்துவிட்டார். சல்மான் கானின் நெருங்கிய குடும்ப உறுப்பினர்களும் இந்த இழப்பால் பெருமளவு சோகத்தில் உள்ளனர். அப்பாஸ் கான் மற்றும் சோகைல் கான் இருவரும் பாபாவுக்கு மிகவும் நெருக்கமானவர்கள். அவருடைய இஃப்தார் விருந்தில் தவறாமல் கலந்து கொள்பவர்கள்” என்றார்.
மறைந்த பாபா சித்திக் சல்மான் கானுக்கு ஒரு நண்பராக மட்டும் இல்லாமல், குடும்பத்தில் ஒருவராகவும் இருந்திருக்கிறார். சித்திக், ஷீசான் இருவரும் நடிகரைச் சந்திக்க அவரது கேலக்ஸி அடுக்ககத்துக்கு செல்லும் போதெல்லாம் சல்மான் கான் அவர்களை மிகுந்த அன்புடன் வரவேற்பார். சல்மான் கானும் ஒரு சிறந்த நண்பராக பாபா சித்திக்கின் இறப்பு செய்தி அறிந்ததும் விரைந்து சென்று பாபாவின் குடும்பத்தினரை சந்தித்திருக்கிறார்.