இலங்கை தமிழ் அரசு கட்சியின் சார்பில் எதிர்வரும் பொதுத்தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் சாள்ஸ் நிர்மலநாதன் போட்டியிடவுள்ளார்.
எதிர்வரும் பொதுத்தேர்தலில் தான் போட்டியிடவில்லையென அவர் அண்மையில் தனது சமூக ஊடகங்களின் வழியாக அறிவித்திருந்தார்.
எனினும், இன்று தமிழ் அரசு கட்சியின் வேட்பாளர் தெரிவுக்குழு கூட்டத்தில் சாள்ஸ் நிர்மலநாதன் போட்டியிடுவதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, வேட்பாளர் பட்டியலில் அவரது பெயர் உறுதி செய்யப்பட்டது.
இதேவேளை, முன்னாள் வடமாகாணசபை பிரதம செயலாளர் பத்திநாதன் இலங்கை தமிழ் அரசு கட்சியின் சார்பில் மன்னார் மாவட்டத்தில் போட்டியிடுவதென முன்னர் பேசப்பட்டிருந்தது. எனினும், அவர் தற்போது முடிவை மாற்றியுள்ளார். அவர் தேர்தலில் போட்டியிடுவதில்லையென தீர்மானித்துள்ளார்.
மதுபானச்சாலை உரிமம் பெற்றவர்கள் விவகாரம் அண்மையில் சர்ச்சையாக உருவெடுத்திருந்தது. இதில் சாள்ஸ் நிர்மலநாதனின் பெயரும் அடிபட்டது. மதுபானச்சாலை உரிமம் பெற்றவர்கள் தொடர்பில் எம்.ஏ.சுமந்திரனும் கடுமையாக விமர்சித்திருந்தார். எனினும், அவரும் அங்கம் வகித்த இலங்கை தமிழ் அரசு கட்சியின் வேட்பாளர் தெரிவுக்குழுவில் சாள்ஸ் நிர்மலநாதனின் வேட்புமனு உறுதி செய்யப்பட்டுள்ளது.