எதிர்வரும் பொதுத்தேர்தலில் தனித்து போட்டியிடுவதென இலங்கை தமிழ் அரசு கட்சியின் அரசியல்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நேற்று (3) இரவு சூம் தொழில்நுட்பம் வழியாக இந்த கலந்துரையாடல் நடந்தது.
இதன்போது, பொதுத்தேர்தலுக்கான வேட்பாளர்களை தெரிவு செய்வதற்கான குழுவின் கூட்டத்தை நாளை (5) வவுனியாவில் நடத்த தீர்மானிக்கப்பட்டது. வேட்பாளர் தெரிவுக்கான 11 பேர் கொண்ட குழு வவுனியாவில் கூடவுள்ளது.
வடக்கு கிழக்கில் கூட்டாக தேர்தலில் போட்டியிடுவது, அது சரிவராவிட்டால் அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலேனும் கூட்டாக போட்டியிடலாம், திருகோணமலையில் வீட்டு சின்னத்திலும், அம்பறையில் சங்கு சின்னத்திலும் போட்டியிடலாம் என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு யோசனை தெரிவித்திருந்தது.
இது பற்றி ஆலோசிக்கப்பட்டது. கூட்டாக தேர்தலை சந்திக்க தமிழ் அரசு கட்சியினர் விரும்பவில்லை. குறிப்பாக, சங்கு சின்னத்தில் போட்டியிடவும் விரும்பவில்லை.
திருகோணமலை ஆயர், சிவில் சமூகத்தினர் தன்னை சந்தித்து, கூட்டாக தேர்தலை சந்திக்க வலியுறுத்தியதாக, அந்த மாவட்ட முன்னாள் எம்.பி குகதாசன் தெரிவித்திருந்தார். கூட்டாக தேர்தலை சந்திக்க அரசியல்குழு விரும்பாததையடுத்து, இன்று மேற்படி பிரதிநிதிகளை சந்தித்து, கட்சியின் முடிவை அறிவிக்கும்படி குகதாசனுக்கு தெரிவிக்கப்பட்டது.
இதேவேளை, சில சிறிய கட்சிகள் தமிழ் அரசு கட்சியுடன் கூட்டணி வைக்க விரும்பியதாக தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக ஈரோஸ் அமைப்பு. அவர்கள் யாருக்கும் இம்முறை ஆசனம் வழங்குவதில்லையென்றும், அவர்கள் தமிழரசு கட்சியை ஆதரித்து தேர்தல் செயற்பாடுகளில் ஈடுபடலாமென்றும் தீர்மானிக்கப்பட்டது.