தமிழ் பொதுவேட்பாளர் என்ற அரசியல் கபட நாடகத்தில் ஏமாந்து விட வேண்டாமென தமிழ் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது தமிழீழ தேசாபிமானிகள் அமைப்பு.
அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில்,
இலங்கையில் பௌத்த சிங்களப் பேரினவாத அரசுத் தலைவரைத் தெரிவு செய்யும் தேர்தல் எதிர்வரும் 21 ஆம் திகதி (2024-09-21 அன்று) நடக்கவிருக்கிறது.தேர்தலுக்கு இன்னமும் இரண்டே நாட்கள் உள்ள நிலையில் வடக்குக் கிழக்குத் தமிழர் தாயகப்பகுதிகளிலும் மற்றும் இலங்கைத் தீவெங்கும் பரந்து வாழும் தமிழ் பேசும் மக்களுக்குத் தெளிவூட்ட வேண்டிய தார்மீகக் கடப்பாடு எமக்குண்டு. இந்தத் தேர்தல் நாள் அறிவிக்கும் முன்னரான காலப்பகுதியிலும், தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னரான இதுவரை நாட்களும் தேர்தல் அரசியல் தொடர்பிலும்,போட்டியிடும் பெரும்பான்மை இனக் கட்சிகளின் கருத்துக்கள்,தமிழ் மக்கள் தொடர்பில் அவர்கள் கொண்டிருக்கும் எண்ண ஓட்டங்கள் தொடர்பிலும், தமிழ் அரசியல்வாதிகளின் சந்தர்ப்பவாதப் பாய்ச்சல் அரசியல், அவர்களது சிந்தனை,அவர்களது நடவடிக்கைகள் தொடர்பிலும் அவதானித்தவன் என்ற வகையில் எமது இனத்தின் நலன் கருதி எமது மக்களுக்குத் தெளிவூட்ட வேண்டிய பொறுப்பு எமக்கும் உள்ளது.
இலங்கைத் தேர்தலில் பிரதான கதாநாயகர்களாக ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச, அனுரகுமார திசாநாயக்க, நாமல் ராஜபக்ச ஆகியோர்கள் போட்டியிடுவது யாவரும் அறிந்ததே. இந்தத் தேர்தலில் இன்னும் சில வில்லன்களும்,வில்லங்கங்களும் போட்டியிடுகின்றனர்.வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்தைப் பொறுத்தமட்டில் தேர்தல் வேட்பாளராக வில்லங்கம் களமிறக்கப்பட்டுள்ளது.பொதுவாக இலங்கைத் தேர்தலில் ஆட்சியாளர்களைத் தெரிவு செய்வது சிங்கள பெரும்பான்மை இன வாக்குகளாக இருப்பினும் அதனை இறுதி செய்வது சிறுபான்மையினத்தவர்களின் வாக்குகளே. அதாவது தமிழர்களின் வாக்குகளே.அவர்களுக்கே முடிவுகளைத் தீர்மானிக்கும் சக்தி உண்டு என்ற உண்மையை ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும்.
கடந்த பல தசாப்த காலங்களாக அதுவே நடந்து வருவது கண்கூடு. 2024 ஜனாதிபதித் தேர்தலும் அதனையே கட்டியம் கூறி நிற்கின்றது. எனவேதான் வடக்கு கிழக்குத் தமிழர் தாயகத்தின் பெரும்பான்மையினமான தமிழ் மக்களின் வாக்கு வங்கிகளை நோக்கி இலங்கையின் பெரும்பான்மையின சிங்கள வேட்பாளர்கள் படையெடுக்கின்றார்கள். தமிழ் மக்களின் வாக்குகளைக் கொள்ளையிடும் நோக்கிலேயே தமிழ் அரசியல்வாதிகளை விலை பேசி,பேரம் பேசி மரியாதை மிக்க சொல்லான பெட்டிகள் கைமாறல் என்ற நிகழ்வுகள் நடந்திருக்கின்றன. இதனால் ஒரே கட்சிக்குள் பல கட்சி ஆதரவு நிலைப்பாடு ஒரே கூட்டணிக்குள் பல வேட்பாளர் ஆதரவுக் குரல்களும் வலுக்கின்றன.
இலங்கையில் யார் ஆட்சியாளர்களாக வரவேண்டும் என்று தீர்மானிக்கும் இந்தியாவின் மறைமுகத் தலையீடு இலங்கை அரசியலில் பெருமளவு ஆதிக்கம் செலுத்துவதை மறுக்க முடியாது. இந்தியா தனது பிராந்திய வல்லாதிக்க நலன்களுக்காக யாரையும் பலி கொடுக்கத் தயங்காது என்ற உண்மை கடந்த கால வரலாற்றைப் புரட்டினால் தெரிந்துவிடும். இந்தியாவின் பாதுகாப்பு, இறையாண்மை கடலாதிக்க நலன்கள் சார்ந்து இலங்கையின் ஆட்சியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவதையே இந்திய அரசும் அதன் ஆதரவு சக்திகளும் விரும்புகின்றன. இந்தியாவுக்கு இப்போது இருக்கும் சீன அழுத்தத்திற்கு முகம் கொடுப்பதே பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இலங்கையில் சீன ஆதரவான ஆட்சியாளர் ஒருவர் தேர்வு செய்யப்படுவதை இந்தியா ஒருபோதும் விரும்பாது. சஜித் பிரேமதாசா அடிப்படையில் ஒரு இந்திய எதிர்ப்பாளர் . அனுரகுமார திசாநாயக்கவோ ஒரு சீன ஆதரவாளர்,இந்திய எதிர்ப்புணர்வு கொண்டவர் என்பதோடு பெயரளவில் ஒரு இடதுசாரிக் கொள்கை கொண்டவரும் கூட.அதுபோல் நாமல் ராஜபக்சவைப் பற்றி கூறவே தேவையில்லை. சீனாவின் காலடிக்குள் பதுங்கிக் கிடப்பவர். எனவே ரணில் விக்கிரமசிங்கா மட்டுமே ஓரளவுக்கு இந்தியா விரும்பக் கூடியவராக இருக்கிறார். ஏனெனில் அவர் இந்திய ஆதரவு நிலைப்பாடு கொண்டவர் இல்லை ஆயினும் அமெரிக்காவின் செல்லப்பிள்ளை அல்லவா?? அதுவே இந்தியாவுக்கு ஒரு ஆறுதல் தானே. எனவே தான் இந்தியா ரணில் ஆட்சியாளராகத் தேர்வு செய்யப்படுவதை விரும்புகின்றது.
அப்படி என்றால் இலங்கைத் தேர்தலில் என்ன நடக்கப் போகிறது? ரணில் ஜனாதிபதி ஆவதற்கு இந்தியா கடுமையாக உழைக்கிறது. அதற்காகவே பல கோடிகளை அள்ளி வீசிகொண்டிருக்கிறது. வடக்கு கிழக்குத் தமிழர் தாயகத்தில் வாழும் தமிழ் மக்களின் நிலைப்பாட்டின்படி ரணிலை எப்போதும் அவர்கள் ராஜபக்சக்களை, ஜே ஆர் ஜெயவர்த்தனாவை, பண்டாரநாயக்கர்களை எப்படிப் பார்க்கிறார்களோ அந்த இடத்தில் வைத்துத்தான் பார்க்கிறார்கள். அப்படி என்றால் அவர்களது வாக்குகள் யாருக்கு போகலாம்? என்றால் 01.சஜித் பிரேமதாசா 02.அனுஷகுமார திசாநாயக்கா. சஜித் பிரேமதாசா மீது தமிழர்களுக்கு இருக்கும் வெறுப்புணர்வும்,பகைமை உணர்வும் மற்றவர்களை விடக் குறைவாகவே உள்ளதென்று கூறலாம்.அதுபோல் அனுராகுமார ஒரு சிங்கள இனவாதியாக இருந்தாலும் அவரது கட்சியின் கொள்கைகளாலும்,அது ஒரு போராட்ட இய க்கமாக இருந்த காரணத்தாலும், இடதுசாரி என்பதாலும் அவர் பக்கமான ஈர்ப்பும் தமிழர்கள் மத்தியில் இருக்கத்தான் செய்கிறது.இந்தக் காரணிகளை நாம் புறந்தள்ளி விட முடியாது. எனவே தமிழர் தாயகப் பகுதிகளின் வாக்கு வங்கியில் ரணிலுக்கான வாக்குகளில் சரிவுநிலை காணப்படுகிறது.இதனைத் தெளிவாகப் புரிந்து கணித்துக் கொண்ட இந்தியா தமிழ் அரசியல் கட்சிகளை அழைத்துப் பேசி, அவர்களை விலை பேசி, அவர்களை மிரட்டுவது போல் அழுத்தம் கொடுத்து அடிபணிய வைத்துள்ளார்கள். அது போல் ரணில் விக்ரமசிங்கவும் இவர்களுடன் பேரம்பேசித் தமிழ் அரசியல் கட்சிகளை வளைத்துப் போட்டுள்ளார். இவ்வாறான தந்திரங்களின் விளைவாகக் கொண்டுவரப்பட்டதே பொது வேட்பாளர் என்னும் மாயை.
வடக்கு கிழக்கு தமிழர்களின் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான வாக்குகள் சஜித்துக்கோ அன்றி அனுராவுக்கோ சென்று விடுமாயின் ரணிலின் தோல்வி உறுதிப்படுத்தப்பட்டு விடும். எனவேதான் இந்தியா பொது வேட்பாளர் என்ற ஒரு முகமூடியைக் கொண்டு வந்து ஆரம்பத்தில் பொது வேட்பாளர் என்ற கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பது போல் பாசாங்கு செய்துவிட்டுப் பின்னர் பொது வேட்பாளரை ஆதரிக்கிறது.
தமிழர்,தமிழ்த் தேசியம், தமிழ்த் தேச விடுதலை என்ற உணர்வை மூலதனம் ஆக்கிப் பிரச்சாரங்களை மேற்கொண்டு வரும் தமிழ் அரசியல் கட்சிகளும், தமிழ் அரசியல்வாதிகளும் மக்களை ஏமாற்றும் கபடத்தனத்தைத் தமிழர்கள் புரிந்து கொள்வதே காலத்தின் தேவையாகும். ரணிலின் இன்னும் ஒரு நாடகம் தமிழரசுக் கட்சியின் சஜித் ஆதரவு நிலைப்பாடு.தமிழரசுக் கட்சியின் சுமந்திரன் சாணக்கியன் கலையரசன் சிவஞானம் மாவை சேனாதிராசா போன்றோர் சஜித்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்கள்.சஜித்தின் மேடைகளில் முழங்கி வரும் சாணக்கியன் சுமந்திரன் போன்றோரும் தமிழ் தேசியம் தமிழர் உரிமைகள் தமிழருக்கான தீர்வு என்று உணர்ச்சி பொங்க உரை நிகழ்த்துகிறார்கள்.இது சிங்கள மக்கள் மத்தியில் சஜித்துக்கு எதிரான மனநிலையை ஏற்படுத்திவிட வாய்ப்புகள் உண்டு. இதனால் சிங்கள மக்களின் சஜித்துக்கு ஆதரவான வாக்கு வங்கியில் சரிவு ஏற்படலாம். அத்தோடு மறைமுகமாக ரணிலுடன் இவர்கள் இரகசியப் பேச்சு வார்த்தைகளைச் செய்து பணப்பெட்டிகளைப் பரிமாறிக் கொண்டதற்கான வலுவான ஆதாரங்களும் உண்டென்று கூறப்படுகிறது.
அதுபோல் தமிழ்ப் பொது வேட்பாளர் பிரச்சார மேடைகளிலும் தமிழர்களுக்கான உரிமைகள் என்ற வெற்றுக் கோஷங்களால் சிங்கள மக்கள் மத்தியில் ஏற்படும் தமிழின எதிர்ப்பு வாதம் ரணிலுக்கு லாபத்தை கொடுக்கப் போகிறது. இதுவெல்லாம் மிகவும் துல்லியமாகத் திட்டமிட்டு இந்தியாவாலும் ரணில் விக்கிரமசிங்கவாலும் நடத்தப்படும் முகமூடி நாடகங்களே அன்றி வேறில்லை.ஈபிஆர்எல்எப்,புளட், டெலோ,ஜனநாயக போராளிகள் கட்சி, விக்னேஸ்வரன், வேலன் சுவாமிகள், பேராசிரியர் கணேசலிங்கம், மறவன்புலவு சச்சிதானந்தம் போன்றோரும் இந்திய, ரணில் ஆதரவாளர்களும் இன்னும் பல இந்திய ஆதரவாளர்களும் பொது வேட்பாளரை முன்னுறுத்திப் பிரச்சாரங்களை மேற்கொள்வதை வைத்து உண்மைகளைப் புரிந்து கொள்வது தமிழர்களுக்குக் கடினமானதாக இருக்காது.
புலம்பெயர் நாடுகளில் இருக்கும் சில தமிழ் அமைப்புகள் கடந்த காலங்களில் தங்களை யார் என்று மக்களுக்கு அடையாளம் காட்டி இருந்தார்கள். அமெரிக்க சார்பாகவும் இந்தியாவுடன் இரகசிய தொடர்புகளைப் பேணி வருவோரும் பொது வேட்பாளருக்கு ஆதரவாகக் குரல் கொடுத்து அறிக்கைகள் வெளியிட்டுள்ளார்கள்.இவர்களின் அரசியல் சிந்தனைகளின் வறுமையை எப்படிப் புரிந்து கொள்வது? தங்களை அரசியல் தலைவர்களாகவும்,அரசியல் ஆய்வாளர்களாகவும்,அரசியல் முதிர்ச்சி பெற்றவர்களாகவும் காண்பிக்க முயலும் புலம்பெயர் நாடுகளில் வாழும் பல அரசியல் பச்சோந்திகளின் நிலைப்பாடுகளை மக்கள் புரிந்து கொள்ள வேண்டாமா?
இலங்கையில் யார் ஆட்சிக்கு வந்தாலும் ஈழத் தமிழர்களுக்கு யாதொன்றும் உரிமைகள் கிடைத்து விடப் போவதில்லை.ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை அமர்வுகள் பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த போதும் ஈழத்தமிழர்களுக்கான நீதி இதுவரை கிடைக்கவில்லை. ரணில், மைத்திரி, ராஜபக்சக்கள் என்று மாறி மாறிப் பலர் ஆட்சி அதிகாரத்தில் இருந்த போதும் தமிழர்களை தமிழ் அரசியல் கட்சிகளும், அரசியல்வாதிகளும் ஏமாற்றி அந்தந்த அரசுகளுடன் தங்கள் சுயலாபத்துக்கான பேரம் பேசலை மட்டுமே செய்தார்கள்.இன்றும் அதுவே நடக்கிறது.இனியும் அதுவே நடக்கும்.தமிழ் பொது வேட்பாளரை தேர்தலில் முன்னிறுத்தி அதன் ஊடாகத் தமிழர்களின் ஒற்றுமையையும், ஒருமித்த குரலையும் சர்வதேசத்துக்குக் காட்டும் ஒரு பெரிய சந்தர்ப்பம் இது என்று பசப்பு வார்த்தைகளைப் பிரச்சாரப்படுத்தித் தமிழ் மக்களை ஏமாற்ற முனைகிறார்களே அன்றி வேறொன்றுமில்லை.
இவர்களின் அனைத்துச் செயல்பாடுகளும் கபட நோக்கம் கொண்டது. இதனால் வெல்லப் போகும் சந்தர்ப்பம் ரணிலுக்கு அமையுமானால் மீண்டும் ஒருமுறை தமிழர்கள் ஏமாற்றப்படுவதை யாராலும் தடுத்து நிறுத்தி விட முடியாது என்பத ே யதார்த்தம். ரணில் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றுவாராக இருந்தால் அது ஐக்கிய நாடுகள் சபை நோக்கிய ஈழத் தமிழர்களின் செயல்பாடுகளுக்கு மீண்டும் பின்னடைவையே ஏற்படுத்தும் என்பதில் யாதொரு ஐயமும் இல்லை. இலங்கை வாழ் அனைத்துத் தமிழர்களை நோக்கியும் ஒரு எச்சரிக்கையான அழைப்பை விடுக்கிறோம். தேர்தலில் வாக்களிப்பதும், வாக்களிக்காமல் விடுவதும் உங்கள் ஜனநாயக உரிமை. அதுபோல் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதும் உங்கள் ஜனநாயக உரிமை. அனுபவத்தை வழிகாட்டியாகக் கொண்டு, கடந்த காலங்களைப் பாடமாகக் கொண்டு உங்கள் ஜனநாயகக் கடமைகளை நிறைவேற்றுங்கள்.
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.