எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எடுக்கவுள்ள நிலைப்பாடு தொடர்பில் இலங்கை தமிழ் அரசு கட்சியின் உயர்மட்டக்குழு நாளை (16) வவுனியாவில் கூடவுள்ளது.
இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்தியகுழு அண்மையில் கூடி, ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதென தீர்மானித்தது.
எனினும், இந்த கூட்டத்தில் கலந்துகொள்ளாத மாவை சேனாதிராசா, சி.சிறிதரன் ஆகியோர் அந்த முடிவை எதிர்த்தனர். ஜனாதிபதி தேர்தலில் எடுக்கவுள்ள நிலைப்பாடு தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க தமிழ் அரசு கட்சியினால் 6 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டிருந்தது. இந்த குழு கூடாமல் மத்தியகுழு கூடி முடிவெடுத்ததாக மாவை, சிறிதரன் எதிர்ப்பு தெரவித்தனர்.
எனினும், அவர்களின் எதிர்ப்பின் பின்னணியில் ரணில் விக்கிரமசிங்க ஆதரவு நிலைப்பாடு உள்ளதாகவும் விமர்சனம் உள்ளது. ரணில் விக்கிரமசிங்க மூலமாக சி.சிறிதரன் வர்த்தக அனுகூலங்களை பெற்றுள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேச்சுள்ளது.
அண்மையில் ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணம் வந்திருந்த போது, சிறிதரன் அணியை சேர்நத சிலர் பொதுமக்களை பேருந்தில் அழைத்து வந்து ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்திருந்தனர்.
அண்மையில், கிளிநொச்சியில் ஈ.பி.டி.பியினால் ரணில் ஆதரவு பிரச்சாரக்கூட்டம் நடத்தப்பட்ட போது, சிறிதரன் அணியை சேர்ந்த சிலர் பணத்துக்காக ஆட்களை சேர்த்து, கூட்டத்துக்கு அனுப்பி வைத்ததாக சமூக ஊடகங்களில் விமர்சனங்கள் எழுந்திருந்தன.
அண்மையில் மாவை சேனாதிராசாவின் வீட்டுக்கு ரணில் சென்றிருந்த போது, அந்த சந்திப்பில் கலந்துகொள்ளுமாறு சி.சிறிதரனையும் மாவை அழைத்திருந்தார். மாவை வீட்டுக்கு சிறிதரன் சென்ற போது, வாசலில் பொலிஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்ததையும், செய்தியாளர்கள் குவிந்திருந்ததையும் கண்டு, வீட்டுக்குள் நுழையாமல், வாகனத்தை திருப்பிக் கொண்டு சென்றிருந்தார்.
பின்னர் மாவை சேனாதிராசவின் தொலைபேசி ஊடாக சிறிதரனுடன், ரணில் விக்கிரமசிங்க பேசியதாக பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகியிருந்தன.
இந்த பின்னணியில், மாவை மற்றும் சிறிதரன் ஆகியோர் சஜித் ஆதரவு நிலைப்பாட்டை தீவிரமாக எதிர்ப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
கட்சி எடுக்க வேண்டிய தீர்மானம் குறித்து 6 பேர் கொண்ட குழு ஆராய்ந்து, வரைவு அறிக்கையொன்றை தயாரித்துள்ளது. அந்த அறிக்கையில், சஜித்தின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் முன்னேற்றகரமான விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது.
நாளை வவுனியாவில் 6 பேர் கொண்ட குழு கூடும்போது, இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு, இறுதித்தீர்மான முடிவு அறிவிக்கப்படும்.
இந்த அறிக்கையில், எந்த வேட்பாளரையும் ஆதரிக்கும் முடிவை குறிப்பிடாமல், தமிழ் மக்கள் விரும்பியவர்களுக்கு வாக்களிக்கலாமென குறிப்பிட வேண்டுமென மேற்படி இருவரும் வலியுறுத்தி வருவதாக கட்சியின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரணில் விக்கிரமசிங்கவின் நெருங்கிய தொடர்பின் பின்னர், இந்த கருத்து வலியுறுத்தப்படுவது கட்சி வட்டாரங்களிற்குள் பரவலான சந்தேகங்களை எழுப்பியுள்ளது.



