எதிர்வரும் 14ஆம் திகதி நடத்த திட்டமிடப்பட்டிருந்த இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இரத்து செய்யப்பட்டுள்ளது.
இன்று (10) வவுனியாவில் கூடிய இலங்கை தமிழ் அரசு கட்சியின் பிரமுகர்கள் குழு இந்த தீர்மானததை எடுத்தது.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்க 6 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டிருந்தது. இந்த குழுவின் கூட்டம் நடக்காமலேயே, சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதென இலங்கை தமிழ் அரசு கட்சி மத்தியகுழுவில் தீர்மானம் எடுக்கப்பட்டது.
இந்த தீர்மானம் எடுக்கப்பட்டபோது கூட்டத்தில் கலந்து கொண்டிருக்காத மாவை சேனாதிரசா, சி.சிறிதரன் ஆகியோரின் நெருக்குதலால், 6 பேர் கொண்ட குழு இன்று கூடியது. அவர்களின் அறிக்கையின் அடிப்படையில் 14ஆம் திகதி மத்தியகுழு கூட்டத்தை கூட்டுவதென்றும் தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இன்றைய கூட்டத்தில், 3 பிரதான வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்களும் ஆராயப்பட்டன.
எதிர்வரும் 16ஆம் திகதி மீண்டும் கூடி, இறுதி முடிவெடுப்பதென தீர்மானிக்கப்பட்டது. இதன் பின்னர், மத்தியகுழு கூட்டத்தை கூட்டுவது பற்றி பரிசீலிக்கப்படும்.
மத்தியகுழு கூட்டத்தை நடத்த 2 வாரங்களின் முன்னர் அழைப்பு அனுப்பப்பட வேண்டுமென்பதால், சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதென எடுத்த தீர்மானத்தில் மாற்றம் ஏற்பட வாய்ப்பில்லையென்பது உறுதியாகியுள்ளது.