ஒப்ரேஷன் சுமந்திரனா? OR ஒப்பிரேஷன் பொதுவேட்பாளரா?

Date:

– கருணாகரன்

தமிழ்ப்பொது வேட்பாளரைக் களமிறக்கியதும் அதற்காகத் தமிழ் மக்கள் பொதுச்சபை, தமிழ்த்தேசியப் பொதுக் கட்டமைப்பு போன்றவற்றை உருவாக்கியதும் சுமந்திரனையும் அவருடைய கட்டுப்பாட்டிலிருக்கும் தமிழரசுக் கட்சியையும் முடக்குவதற்காகத்தான் என்பது தெளிவாகியுள்ளது.

தனியொரு சுமந்திரனை அல்லது சுமந்திரனையும் சாணக்கியனையும் எதிர்கொள்வதற்குப் பதிலாக அவர்களைப் பழிவாங்குவதற்காக முழுத் தமிழ்ச்சமூகத்தையும் விலை கொடுக்கத் தயாராகியுள்ளது தமிழ்த்தேசியப் பொதுக் கட்டமைப்பு.

இது மிகத் தவறானது. கண்டிக்க வேண்டியது. ஆகவே இதனை சிந்திக்கக் கூடிய அனைவரும் மறுதலித்தே தீர வேண்டும்.

தமிழ்ப்பொது வேட்பாளர் என்பது, “தமிழ் மக்களைத் திரட்டுவது; அல்லது ஒரு பொது நிலைப்பாட்டின் கீழ் மக்களை ஒன்றிணைப்பது; அல்லது தேசத்தைக் கட்டி எழுப்புவது” என்ற மாய வார்த்தைகளின் பின்னாலான ஒரு சூழ்ச்சியே.

இதனை அவர்களே சொல்வதை அல்லது ஒத்துக் கொள்வதைப் பார்க்கலாம். “ஒரு நண்பர் பகிடியாகச் சொன்னார், “சுமந்திரன் நம்பியாராக மாறி அரியனேந்திரனை எம்ஜிஆர் ஆக்கிவிட்டார். இனி நடக்கப் போவது எம்ஜிஆருக்கும் நம்பியாருக்கும் இடையிலான சண்டை. தமிழ் கூட்டு உளவியல் என்பது கதாநாயகன் – வில்லன் என்ற துருவ நிலைப்பட்ட மோதலை ரசிப்பது. நமது புராணங்களில் இருந்து திரைப்படங்கள் வரையிலும் அப்படித்தான் காணப்படுகின்றன. இந்நிலையில் தமிழரசுக் கட்சியை தமிழ்க் கூட்டு உணர்வுக்கு மாறாக சஜித்தை நோக்கி திருப்பியதனால் சுமந்திரன் இப்பொழுது வில்லனாக காட்டப்படுவார். அவர் வில்லனாகவும் அரியநேத்திரன் கதாநாயகனாகவும் காட்சிப்படுத்தப்படும் பொழுது அங்கே ஒரு திரைப்படம் ஓடும். அது தமிழ் பொது உளவியலைக் கவரும். இனி தமிழ்ப் பொது வேட்பாளருக்கான பிரச்சாரம் தன்பாட்டில் நடக்கும். கதாநாயகனுக்கு வில்லனுக்கு இடையிலான மோதல். அது அரியனேத்திரனை நோக்கி அதிகம் வாக்குகளை ஈர்க்கும்” என தமிழ்ப்பொது வேட்பாளரை நிறுத்திய தரப்பின் முக்கிய நபரான நிலாந்தன், தன்னுடைய பத்தியில் வெளிப்படையாகவே குறிப்பிட்டிருக்கிறார்.

எனவே இந்த அடிப்படையில் (சுமந்திரனை எதிரியாக – வில்லனாக – வும் அரியநேத்திரனைக் கதாநாயகனாகவும்) திட்டமிட்டு உருவாக்கியதே தமிழ்ப்பொது வேட்பாளராகும். இப்பொழுது இவர்களுடைய நோக்கம் வெற்றிகரமாக நிறைவேற்றப்படுகிறது.

ஆக துரோகி – தியாகி, வில்லன் – கதாநாயகன், கறுப்பு – வெள்ளை என்ற சிறுமைப் பார்வையின் தொடர்ச்சியாகவே தமிழ்த்தேசிய அரசியல் முன்னெடுக்கப்படுகிறது. அதிலிருந்து அது விலகவில்லை.

ஆகவே தமிழ்த்தேசிய அரசியல் ஒரு அடி கூட முன்னகரவில்லை. முன்னகரக் கூடிய நிலையிலும் இல்லை. இதில் வேடிக்கை என்னவென்றால், முன்னர் இந்தத் தீவிரத் தமிழ்த்தேசியத் தரப்பினரால் துரோகிகள், காட்டிக் கொடுப்பவர்கள், வில்லன்கள், ஒட்டுக்குழுக்கள் என்று கூறப்பட்ட தரப்புகளும் (கருதப்பட்டவர்கள் அல்ல) இப்பொழுது இந்தச் சிறுமை அரசியலுக்குள் சிக்குண்டு சரியான திசையில் அரசியலை முன்னெடுக்கும் சக்திகளை துரோகிகள், காட்டிக் கொடுப்பவர்கள், வில்லன்கள், ஒட்டுக்குழுக்கள் என வசைபாடுவதாகும்.

ஆகவே, சிறுமை இருளுக்குள் தொடர்ந்தும் சிக்குண்டிருப்பதுதான் தீவிரத் தமிழ்த்தேசிய அரசியலாக உள்ளது. என்னதான் சாம்பல் அரசியலைப் பற்றிப் பேசினாலும் இருட்டில்தான் (கறுப்பில்தான்) இவர்களுடைய சிந்தனை புதையுண்டிருக்கிறது. அதை மறைப்பதற்காக தமக்குத் தாமே தியாகிகள், கதாநாயகன்கள் என வெள்ளை அடித்துப் பூச்சூடிக் கொண்டிருக்கிறார்கள்.

சுமந்திரனை வில்லனாகவும் அரியநேத்திரனை கதாநாயகனாகவும் கற்பனை செய்து கொள்கின்றவர்களுக்குத் தெரியாது, வரலாறு யாரை கதாநாயகராக்கும்? யாரை வில்லராக்கும்? எதனை ஏற்றுக் கொள்ளும்? எதனை நிராகரிக்கும்? என்று.

இதைத் தெரியாமல் தன்னைப் பலி கொடுத்துள்ளார் பொதுவேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள திரு. பா. அரியநேத்திரன். கிழக்கிலே சாணக்கியன் மீதான வெறுப்புணர்வு பொதுவேட்பாளர் என்ற பொறியை நோக்கி அரியநேத்திரனைத் தள்ளியது.

அப்படித்தான் தமிழரசுக் கட்சிக்குள் திரு. சிவஞானம் சிறிதரனின் அணியும் சுமந்திரனை எதிர்ப்பதற்காகவே பொதுவேட்பாளரை ஆதரிக்கிறது. சுமந்திரன் பொதுவேட்பாளரை ஆதரித்திருந்தால் சிறிதரன் அணி சஜித்தையோ, ரணிலையோ, அநுரவையோ ஆதரித்திருக்கும்.

இதேவேளை சாணக்கியின் பொது வேட்பாளரை எதிர்ப்பதும் கூட சுமந்திரனுக்காகத்தான். அவர் சுமந்திரனை எதிர்ப்பவராக இருந்திருந்தால், பொதுவேட்பாளரை ஆதரித்திருப்பார்.

ஆக மொத்தத்தில் சுமந்திரனை மையமாக வைத்தே பொதுவேட்பாளர் என்ற எதிரும் புதிருமான நாடகம் நடந்து கொண்டிருக்கிறது.

உண்மை அப்படியே பளிச்சென வெளிவந்துள்ளது. எத்தனை நாட்களுக்குத்தான் அதைப் பொத்தி மறைக்க முடியும்?

தமிழ்ப்பொது வேட்பாளரை ஆதரிக்கின்ற ஈ.பி.ஆர்.எல்.எவ், தமிழரசுக் கட்சிக்குள்ளிருக்கும் சிறிதரன் அணி, அரைகுறையாகப் பொதுவேட்பாளருக்கான ஆதரவை வழங்கும் ரெலோ, புளொட் போன்றவற்றுக்கெல்லாம் சுமந்திரனே எதிரி. மட்டுமல்ல, தீவிரத் தமிழ்த்தேசிய நிலைப்பாடுடைய பத்தி எழுத்தாளர்களுக்கும் சுமந்திரனைப் பிடிப்பதில்லை. மட்டக்களப்பில் பிள்ளையானையும் விட சாணக்கியனை எதிர்க்கின்ற தமிழ்த்தேசியத் தரப்பினர் உள்ளனர்.

இந்த வெறுப்புக்குக் காரணம், சுமந்திரனுடைய அரசியல் முன்னெடுப்பேயாகும். இதை வகைப்படுத்தி நோக்கலாம்.

1. தமிழ்த்தேசிய அரசியலைத் தீவிர நிலையில், புலிகளின் தொடர்ச்சியாக முன்னெடுக்க முடியாது. அப்படி முன்னெடுத்தால் அது உள்நாட்டிலும் சர்வதேச ரீதியாகவும் பிராந்திய (இந்திய) நிலையிலும் மேலும் நெருக்கடியை உண்டாக்கும் என்று சுமந்திரன் சொல்வது. அதாவது, போருக்குப் பிந்திய அரசியல் (Post – War politics) வேறு விதமாகக் கையாள வேண்டியது. அதற்கான பொறிமுறையும் அணுகுமுறையும் வேறு என்பது.

2. ஆகவே மென்னிலையிலான தமிழ்த்தேசிய அரசியலை முன்னெடுக்க வேண்டும். அவசியமான நிலையில் தேவையான இடங்களில் அரசை ஆதரிப்பது – எதிர்ப்பது என்ற நிலைப்பாட்டைக் கொள்வது அவசியம். கண்மூடித்தனமாக ஆதரிப்பதும் அதே

மாதிரி எந்த நியாயமற்று தொடர்ச்சியான எதிர்ப்பைக் காட்டுவதும் தவறு. அது பயனற்றது மட்டுமல்ல, மேலும் மக்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் என அவர் வலியுறுத்துவது.

3. கற்பனாவாத அரசியலைத் தொடர்ந்தும் தமிழர்கள் முன்னெடுக்க முடியாது. அப்படி முன்னெடுத்தால், அது மேலும் பின்னடைவையும் பலவீனத்தையுமே உண்டாக்கும். ஆகவே நடைமுறையை – யதார்த்தத்தை உணர்ந்த அரசியலை முன்னெடுக்க வேண்டும் எனச் சுமந்திரன் கூறுவது.

4. சர்வதேசத்தின் உளநிலை, பிராந்திய சக்தியாக இந்தியாவின் அணுகுமுறை ஆகியவற்றுக்கும் தமிழ் மக்களுடைய நலன், பாதுகாப்பு போன்றவற்றுக்கும் இடையிலான சமனிலை அரசியல் நிலைப்பாட்டைக் கொள்ள வேண்டியது அவசியம். சர்வதேசத்துக்கு நாம் எதைச் சொல்லிக் கொண்டிருக்கிறோம் என்பது மட்டும் முக்கியமானதல்ல, அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதைக் கேட்பதும் அவசியம். அதைக் கேட்டு எமக்குப் பொருந்தக் கூடிய ஒரு அரசியல் வடிவத்தை – நிலைப்பாட்டை முன்னெடுக்க வேண்டும். அதுவே சர்வதேச சமூகத்தை எம்மை நோக்கிக் கவர்ந்திழுக்கும் எனச் சுமந்திரன் சொல்வது.

5. ஏனைய தமிழ்த்தேசிய அரசியல் தலைவர்களையும் விடச் சுமந்திரன் தன்னுடைய ஆளுமையினாலும் நிலைப்பாட்டினாலும் இலங்கையிலும் சர்வதேச அரசியல் மட்டங்களிலும் செல்வாக்கைப் பெற்றிருப்பது. இன்றைய தமிழ் அரசியலாளர்களில் சுமந்திரனே தலைமைத்துவ அடையாளத்தைப் பெற்றிருப்பவராகத் துலங்குகிறார். ஏனையோர் அதை மிஞ்ச முடியாத நிலையில் உள்ளனர். உண்மையில் சுமந்திரனையும் விட சுரேஸ், சித்தார்த்தன், செல்வம் போன்றோருக்கு நீண்ட அரசியற் பாரம்பரியமும் அனுபவமும் உண்டு. ஆனால், அவர்களை விடச் சுமந்திரன் முன்னிலையைப் பெற்றிருக்கிறார் என்பது. இது ஏனையோரிடத்தில் உண்டாக்கியிருக்கும் கசப்பு.

6. சேர்ந்துரையாடுவது, கூட்டுத்தீர்மானங்களை மேற்கொள்வது, சேர்ந்தியங்குவது, பிறருடைய கருத்துகளுக்கும் நிலைப்பாட்டுக்கும் செவிகொடுப்பது போன்றவற்றைச் சுமந்திரன் புறக்கணிப்பது. பல சந்தர்ப்பங்களிலும் அவர் ஒரு Politician ஆக இல்லாமல் Police officer ஆகவே நடந்து கொண்டிருப்பது. அதாவது ஜனநாயக அடிப்படைகளைப் பின்பற்றத் தவறுவது.

7. தன்னுடைய நிலைப்பாட்டைச் சமரசமற்றுப் பகிரங்கமாகவும் துணிச்சலாகவும் வெளிப்படுத்துவது. (இதற்கு நேரெதிராகவே இருப்பவர் திரு. சித்தார்த்தன். அவருடைய உள்ளத்திலிருக்கும் அரசியல் நிலைப்பாடு வேறு. அவர் வெளியே செய்து கொண்டிருக்கும் அரசியல் வேறு. இதை அவருடன் நெருக்கமான அனைவரும் அறிவர்). இது உண்டாக்கும் கசப்பு. (இவற்றுக்கு சுமந்திரனிடம் வேறு விதமான பதில்கள் இருக்கலாம். உண்மை, யதார்த்தம் போன்றவற்றைத் தெரிந்து கொண்டே அதைத் தெரியாததைப்போல வேண்டுமென்றே பிடிவாதமாக நடப்போருடன் எப்படி உடன்பாட்டுக்கு வர முடியும்? எப்படித் தொடர்ந்து உரையாட முடியும்? என்று அவர் கேட்கக்கூடும்).

இவ்வாறான காரணங்களால் சுமந்திரன் மீதான கசப்பும் வெறுப்பும் தீவிரத் தமிழ்த்தேசியத் தரப்பினரிடத்தில் மேலோங்கியுள்ளது. அவர்கள் விடுதலைப் புலிகளின் சாயலோடு (விடுதலைப் புலிகளாகத் தீவிரமாகச் செயற்படவோ, தியாகம் செய்யக் கூடியவர்களாகவோ அல்ல) புலிகளின் தியாகத்தில், அவர்கள் விட்டுச் சென்ற அடையாளத்தோடு அரசியலை முன்னெடுக்க விரும்புகின்றனர். அது இலகுவானது எனவும் கருதுகிறார்கள்.

இதையே இப்பொழுது ஈ.பி.ஆர்.எல்.எவ், புளொட், ரெலோ போன்றவையும் செய்கின்றன. என்பதால்தான் இவை தங்கள் முன்னோடிகளின் சுவட்டை மறந்து – மறுத்து, மஞ்சல் – சிவப்பு அடையாளத்தை ஏந்தி நிற்கின்றன. புலிகளின் அடிச்சுவட்டைப் பின்தொடர்கின்றன. ஏறக்குறைய தமது சுய அடையாளத்தை இழந்து தீவிரத் தமிழ்த்தேசியவாத நிலைப்பாட்டுக்கு – கற்பனாவாத அரசியலுக்குத் தம்மைத் தாரை வார்த்துள்ளன.

இவ்வாறு செய்வதன் மூலம் தங்களுடைய கடந்த காலத்தின் இருளடர்ந்த பக்கங்களை மறைத்துக் கொள்ளலாம் என்று அவை கருதுகின்றன. ஆனால், அரசியலில் இந்த மாதிரியான உருமறைப்புகளும் புதிய நாடகங்களும் தற்கொலைக்கொப்பானவை.

இதையெல்லாம் தெரிந்து கொண்டும் இதை ஏன் இவை செய்கின்றன என்றால், சுமந்திரனைத் தோற்கடித்து தமிழ் அரசியற் களத்திலிருந்து ஓரம்கட்டி விட வேண்டும். அடுத்தது, தமிழரசுக் கட்சியை உடைத்துச் சிதைத்து விடலாம் என்பதற்காகவே.

அவ்வாறே தீவிரத் தமிழ்த்தேசியவாதிகளுக்கும் சில தேவைகள் உள்ளன. தமிழ் – சிங்கள அரசியலை எப்போதும் வில்லன் – கதாநாயகன், துரோகி – தியாகி, கறுப்பு வெள்ளை நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே. அது அதிக சிரமம் இல்லாமல் அரசியல் செய்வதற்கு உதவும் என்பதால். எனவேதான் தொடர்ந்தும் எதிர்ப்பு அரசியல் வலுப்படுத்தப்படுகிறது. அதற்கான நியாயங்கள் தேடிக் கண்டு பிடிக்கப்பட்டுச் சோடிக்கப்படுகின்றன.

தமிழரசுக் கட்சியிலுள்ள சிறிதரன் அணிக்கும் சுமந்திரனைத் தோற்கடிக்க வேண்டிய அவசியம் – தேவை உள்ளது. மாவை சேனாதிராஜா, சிறிதரன் என முன்னாள் – இந்நாள் தலைவர்கள் என இருந்தாலும் நடைமுறையில் தமிழரசுக் கட்சியானது சுமந்திரனின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. அல்லது சுமந்திரனை மீற முடியாமலிருக்கிறது.

எனவே தொகுத்துச் சொன்னால், நிறுத்தப்பட்டுள்ள தமிழ்ப்பொது வேட்பாளர் என்பது சுமந்திரனை வீழ்த்துவதற்காக முயற்சிக்கப்படும் ஒரு அரசியல் அஸ்திரமாகும். ஆகவே, இது ஒப்பிரேஷன் சுமந்திரனே!

00

spot_imgspot_img

More like this
Related

பிக்குகளுக்கு சிறப்பு நீதிமன்றம் என்ற ஜனாதிபதியின் யோசனை நாட்டை மேலும் பௌத்த மயமாக்கும் முயற்சி

பௌத்தத்தின் பேரால் முன்னெடுக்கப்படும் பேரினவாதத்திற்குள் மட்டும் அரசு கட்டுப்பட்டிருக்கவில்லை. மேலாக பௌத்த...

நாளையும் மின்சாரம் துண்டிக்கப்படலாம்

வழக்கத்திற்கு மாறாகக் குறைந்த மின்சாரத் தேவை மற்றும் அதிக சூரிய மின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்