உள்ளூராட்சி மன்றத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்குத் தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாம் இன்று உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் 9ஆம் திகதி நடைபெறவிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்தாமல் மனுதாரர்கள் மற்றும் நாட்டின் குடிமக்களின் அடிப்படை உரிமைகள் நிதியமைச்சர், தேர்தல்கள் ஆணைக்குழு, சட்டமா அதிபர் உள்ளிட்ட அதிகாரிகளால் மீறப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றம் மேலும் தெரிவித்துள்ளது.
சுதந்திரமானதும் நியாயமானதுமான உள்ளூராட்சி சபை தேர்தiல நடத்துவதற்கு அதிகாரிகளுக்கு உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட நான்கு அடிப்படை உரிமை மனுக்கள் தொடர்பில் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, நீதியரசர் விஜித் மலல்கொட, முர்து பெர்னாண்டோ, காமினி அமரசேகர மற்றும் யசந்த கோதாகொட ஆகியோர் அடங்கிய ஐவரடங்கிய நீதிபதிகள் குழாம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரிய, மாற்றுக் கொள்கைகளுக்கான மையம் மற்றும் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கான மக்கள் நடவடிக்கை (PAFFREL) ஆகியோரால் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
திறைசேரி செயலாளர் மஹிந்த சிறிவர்தன, சட்டமா அதிபர், தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் பலரை பிரதிவாதிகளாக பெயரிட்டு மனுதாரர்கள் இந்த மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவுக்காக ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் ஜயசூரிய ஆஜராகியிருந்ததுடன், ஹரினி அமரசூரிய சார்பில் ஜனாதிபி சட்டத்தரணி Nigel Hatch, மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்திற்காக ஜனாதிபதி சட்டத்தரணி விரான் கொரிய, PAFFRAL சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி அஸ்திக தேவேந்திர, தேர்தல்கள் ஆணைக்குழு சார்பில் சாலிய பீரிஸ், சட்டமா அதிபர் சார்பில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நெரின் புள்ளே ஆஜராகினர்.