தமிழ் பொதுவேட்பாளர் விவகாரத்தில் இன்றும் தீர்மானமின்றி கூட்டம் நிறைவடைந்துள்ளது.
யாழ்ப்பாணத்திலுள்ள ஹொட்டல் ஒன்றில் நடந்த கலந்துரையாடலில், முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன், ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா ஆகிய இருவரில் ஒருவரை வேட்பாளராக்குவது பற்றி ஆராயப்பட்டது.
இவர்களை களமிறக்குவதிலுள்ள சாதக பாதகங்களை பற்றி ஆராயப்பட்டது.
முக்கியமாக, நிதி விவகாரங்கள் பற்றி ஆராயப்பட்டது.
பொதுவேட்பாளருக்காக இதுவரை ஒரு சதமேனும் திரட்டப்படவில்லை. பொதுவேட்பாளராக களமிறங்குவதெனில் அதற்கான தயார்படுத்தல்கள் சரியாக செய்யப்பட்டிருக்க வேண்டுமென இருவருமே நிபந்தனை விதித்துள்ளனர்.
பொதுவேட்பாளர் என பத்திரிகையில் அறிவித்து விட்டு, தேர்தலை எதிர்கொள்ள முடியாதென இருவரும் குறிப்பிட்டுள்ளனர். வடக்கு கிழக்கு தழுவிய முழு அளவிலான பிரச்சாரம் செய்யப்பட வேண்டுமெனில் பெருமளவு நிதி தேவை.
பொதுவேட்பாளரை தெரிவு செய்து அறிவித்தால், புலம்பெயர் தேசங்களிலிருந்து கோடி கோடியாக பணம் திரளுமென பொதுவேட்பாளர் திட்டத்தை முன்னெடுத்த 7 தனிநபர்கள், சுரேஸ் பிரேமச்சந்திரன் உள்ளிட்டவர்கள் ஆரம்பத்தில் குறிப்பிட்டிருந்தனர். எனினும், தற்போது நிதி விவகாரத்தில் தெளிவான நம்பிக்கையை வழங்க வேண்டியுள்ளது.
நாளை (6) இருவருடனும் இந்த விவகாரங்கள் பற்றி பேசிவிட்டு, நாளை மறுநாள் மீண்டும் கூடி, பொதுவேட்பாளரை இறுதி செய்வதென தீர்மானிக்கப்பட்டது.