ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழுவின் தீர்மானம் எதுவாக இருந்தாலும் தானும் தனது தந்தை ஜனக பண்டார தென்னகோனும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிப்போம் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.
தனது தந்தை மாத்திரமல்ல பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் என பெரும்பான்மையானவர்கள் இன்று ஜனாதிபதியுடன் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நாடு எரிமலையாக கொதித்துக் கொண்டிருந்த போது எவரும் முன்வராத பின்னணியில் பொருளாதார நெருக்கடியைக் கட்டுப்படுத்துவதற்கு எவ்வித தயக்கமுமின்றி நாட்டைப் பொறுப்பேற்று பாடுபட்ட ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்க தானும் தனது தந்தையும் தீர்மானித்தோம் என தென்னகோன் தெரிவித்தார்.
ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழுவினால் நேற்று எடுக்கப்பட்ட முடிவு, களத்தின் யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளாத அறிவொளியற்ற தீர்மானம் எனத் தெரிவித்த பிரமித பண்டார தென்னகோன், அந்த முட்டாள்தனமான முடிவின் விளைவுகளை நாடு விரைவில் காணும் என்றும் தெரிவித்தார்.
இந்த நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியின் தீயை கட்டுப்படுத்திய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு தானும் தனது தந்தையும் மாத்தளை மக்களிடம் சென்று அதிகபட்ச ஆதரவை வழங்க ஏற்பாடு செய்வோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.