பொலிஸ்மா அதிபரை நியமிப்பதால் சட்டச்சிக்கல்கள் ஏற்படக்கூடிய நிலைமையுள்ளதால், அந்த செயற்பாட்டிலிருந்து விலகியிருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சபாநாயகருக்கு அறிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் காலப்பகுதிக்குள் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை பொலிஸ்மா அதிபரை நியமிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டால், இதை காரணமாக குறிப்பிட்டு தமக்கு எதிராக தேர்தல் முறைப்பாடுகள் முன்வைக்கப்படலாம் என்பதால், தாம் அந்த செயற்பாட்டிலிருந்து விலகியுள்ளதாக அவர், சபாநாயகருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, பொலிஸ் மா அதிபர் பதவிக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை குறித்து ஆராய்வதற்காக அரசியலமைப்பு பேரவை இன்று (26) காலை 10.30 மணிக்கு கூடவுள்ளது.
இதேவேளை, பொலிஸ் மா அதிபர் பதவிக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி தொடர்பில் பிரதமர் தினேஷ் குணவர்தனவும் இன்று பாராளுமன்றத்தில் விளக்கமளிக்க உள்ளதாக நாடாளுமன்ற வட்டாரங்களிலிருந்து தெரியவந்துள்ளது.
தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபராக நியமிப்பதற்கு அரசியலமைப்பு பேரவை எவ்வாறு அனுமதி வழங்கியது என எதிர்க்கட்சிகள் உட்பட பல்வேறு குழுக்கள் குற்றம் சுமத்தி வருகின்றன.
இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு பிரதமர் பதில் அளிப்பார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொலிஸ் மா அதிபர் பதவி தொடர்பில் இன்று பாராளுமன்றத்தில் காரசாரமான விவாதம் இடம்பெறலாமென எதிர்பார்க்கப்படுகிறது.