29.4 C
Jaffna
April 24, 2025
Pagetamil
இலங்கை

பண்பாட்டை உள்வாங்காமல் தமிழ்த் தேசிய அரசியல் வலுப்பெறாது: பொ.ஐங்கரநேசன் 

ஒரு தேசிய இனத்தை மற்றைய தேசிய இனங்களில் இருந்து வேறுபடுத்திக்காட்டும் விடயங்களில் அதன் பண்பாடும் ஒன்று. இது வெறும் அடையாளம் அல்ல. ஒரு இனத்தின் தேசியத்தைக் கட்டமைப்பதில் அந்த இனத்தின் வாழ்புலம், பேசுகின்ற மொழி எந்த அளவுக்கு முக்கியமானதோ அந்த அளவுக்குப் பண்பாடும் இன்றியமையாதது. ஆனால், தமிழ்தேசியக் கட்சிகள் வாழ்புலத்துக்கும் மொழிக்கும் கொடுக்கும் முக்கியத்துவத்தைப் பண்பாட்டுக்குக் கொடுப்பதில்லை. பண்பாட்டை உள்வாங்காமல் தமிழ்த்தேசிய அரசியல் வலுப்பெறாது என்பதை எமது தலைவர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழ்தேசியப் பசுமை இயக்கத்தின் ஆடிப்பிறப்புவிழா கடந்த புதன் கிழமை அராலி குலனையூரில் நடைபெற்றது. இவ்விழாவுக்குத் தலைமை வகுத்து உரையாற்றும்போதே பொ.ஐங்கரநேசன் இவ்வாறு சுட்டிக்காட்டினார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

தைப்பொங்கலைப் போன்றே ஆடிப்பிறப்பும் தமிழ் மக்களின் வாழ்வியற் பண்பாட்டை அறிவுபூர்வமாக வெளிப்படுத்துகின்ற ஒரு பண்டிகை. இன்று ஆடிப்பிறப்புக் கொண்டாட்டங்கள் தமிழ் மக்களிடையே அருகிவிட்டது. ஆடிப்பிறப்பு நாளில் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கிய காலம் ஒன்று இருந்தது. இப்போது ‘ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை ஆனந்தம் ஆனந்தம் தோழர்களே’ என்ற நவாலியூர் சோமசுந்தரப்புலவரின் பாடல் மாத்திரம்தான் மிஞ்சியுள்ளது. பண்பாட்டுச் செயற்பாடுகளுக்காக வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் தனியார் கல்வி நிறுவனங்களிடம் விடுமுறையைக் கோருகின்ற நாம் ஆடிப்பிறப்பு விடுமுறையை மீளப்பெறுவதற்கும் முயற்சிக்க வேண்டும்.

சுதந்திரத்துக்குப் பின்னரான இலங்கையில் தமிழ்த்தேசிய அரசியலின் காலத்தை தலைமைத்துவ அடிப்படையில் ஜி.ஜி பொன்னம்பலம் காலம், எஸ்.ஜே.வி செல்வநாயகம் காலம், அமர்தலிங்கம் காலம், பிரபாகரன் காலமென்று ஆய்வாளர்கள் பிரித்து வைத்திருக்கின்றனர். இவர்களில் ஆயுதப்போராட்டத்தை முன்னெடுத்த பிரபாகரன் மட்டுமே தமிழ்த்தேசிய அரசியலை வலுப்படுத்துவதில் கலை, இலக்கியங்களினதும் பண்பாட்டினதும் வகிபாகம் குறித்து ஆழமான புரிதலைக் கொண்டிருந்தார். கலை, பண்பாட்டுக்கழகம் என்று தனியான ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டு போராளிகளின் பாசறைகளில் மாத்திரமல்லாது பொதுமக்களிடையேயும் கலை, இலக்கிய, பண்பாட்டுச் செயற்பாடுகள் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டன.

தமிழ்ப்பண்பாடு இன்று மும்முனைத் தாக்குதல்களுக்கு ஆளாகியுள்ளது. ஒரு புறம் சிங்கள பௌத்த மேலாதிக்கத்தினால் ஒடுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இன்னொரு புறம் உலகமயமாக்கலினால் அதன் தனித்துவத்தை இழந்து கொண்டிருக்கிறது. மறுபுறம், எமது அக்கறையின்மையாலும் தொன்று தொட்டு நாம் கடைப்பிடித்து வந்த பண்பாட்டு விழுமியங்கள் கைவிடப்பட்டுக் கொண்டிருக்கின்றன. தமிழ்த்தேசிய இனத்தின் தரத்தை மதிப்பீடு செய்வதற்கான அளவுகோல்களில் பண்பாடும் ஒன்று என்பதை உணர்ந்து மக்களிடையே பண்பாட்டுச் செயற்பாடுகளை ஒரு பேரியக்கமாக முன்னெடுப்பதற்கு எமது தலைவர்கள் முன்வரவேண்டும் என்றும் தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்

வட்டுவாகல் பாலம் புனரமைப்பு விரைவில் ஆரம்பிக்கும்

Pagetamil

‘எமது பொது எதிரி அரசுதான்… இம்முறை ஜேவிபியின் வித்தைகள் எடுபடாது’: க.வி.விக்னேஸ்வரன்!

Pagetamil

நாளை சில பகுதிகளில் வெப்பநிலை அதிகரிக்கும்

Pagetamil

அரசாங்கம் பாதாள உலகக்குழுக்களை பயன்படுத்தி கொலைகள் செய்கிறதா?: மொட்டுக்கு வந்த சந்தேகம்!

Pagetamil

உள்ளூராட்சி தேர்தலில் தமிழ் தேசிய பேரவைக்கே ஆதரவு: யாழ் முஸ்லிம் மக்கள் அறிவிப்பு!

Pagetamil

Leave a Comment