குறுகிய காலத்தில் அதிகளவு சொத்துக்களை சேர்த்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள பிரபல மொடல் அழகி பியுமி ஹன்ஸ்மாலியை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 20 ஆம் திகதி வரை கைது செய்யப்போவதில்லை என சட்டமா அதிபர் நேற்று (15) மேன்முறையீட்டு நீதிமன்றில் உறுதியளித்துள்ளார். அந்த வாக்குறுதியின் காரணமாக அவருக்கு எதிரான விசாரணைகள் தடையின்றி தொடர முடியும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் தெரிவித்துள்ளது. குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினரால் தமக்கு எதிராக நடத்தப்படும் விசாரணைகளைத் தடுக்கும் ஆணை பிறப்பிக்குமாறு தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்த மனு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி சோபித ராஜகருணா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. மனுதாரர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ரொனால்ட் பெரேரா, தமது கட்சிக்காரர் சந்தேக நபராக பெயரிடப்படவில்லை எனத் தெரிவித்தார். இருந்த போதிலும் தனது வாடிக்கையாளர் கைது செய்யப்படும் அபாயம் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மனுதாரரை விசாரணைக்கு அழைத்தால் அரசுத் தரப்பு கோரியபடி இரண்டு நாட்கள் அல்லது அதற்கு முன்னதாக மனுதாரருக்கு நோட்டீஸ் வழங்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். தனது கட்சிக்காரரை கைது செய்வதை தடுக்கும் உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.
சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஷனில் குலரத்ன, விசாரணைகள் முடியும் வரை மனுதாரரை கைது செய்யப்போவதில்லை என உறுதியளித்தார். வாக்குறுதியின்படி, மேன்முறையீட்டு நீதிமன்றம் மேலதிக விசாரணையை அனுமதித்ததுடன், மனுதாரர் விசாரணைக்கு அழைக்கப்பட்டால் இரண்டு நாட்கள் அல்லது இரண்டு நாட்களுக்கு முன்னதாக மனுதாரருக்கு தெரிவிக்குமாறு பிரதிவாதிகளைக் கேட்டுக் கொண்டது.
மேன்முறையீட்டு நீதிமன்றம், உண்மைகளை உறுதிப்படுத்தும் வகையில் மனுவை எதிர்வரும் செப்டெம்பர் 20ஆம் திகதி அழைக்குமாறு உத்தரவிட்டதுடன், உரிய விசாரணைகளை தடையின்றி மேற்கொள்ளுமாறும் குறிப்பிட்டுள்ளது. இந்த மனு மீதான அடுத்தகட்ட விசாரணை செப்டம்பர் 20ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்த மனுவின் பிரதிவாதிகளாக உள்ள சட்டவிரோத சொத்துக்கள் விசாரணை பிரிவின் அதிகாரிகள் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர். இந்த மனுவில் பிரதிவாதிகளாக பொலிஸ் மா அதிபர், இரகசிய பொலிஸ் பணிப்பாளர், சட்டவிரோத சொத்துக்கள் விசாரணை பிரிவின் பணிப்பாளர் மற்றும் நிலைய பொறுப்பதிகாரி சஞ்சீவ மஹவத்த உள்ளிட்டோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
தனது சொத்துக்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும், கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் இந்த விடயம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்துள்ளதாகவும் மனுதாரர் குறிப்பிட்டுள்ளார். சட்டத்துக்கு முரணான வகையில் நியாயமற்ற முறையில் விசாரணை நடத்தப்படுவதாக மனுவில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினரால் மேற்கொள்ளப்படும் விசாரணைகளைத் தடுக்கும் ஆணை பிறப்பிக்குமாறு மனுவில் கோரப்பட்டுள்ளது. இந்த மனுவில் பிரதிவாதிகளுக்கு நோட்டீஸ் அனுப்புமாறும், விசாரணைக் கோப்பை மேன்முறையீட்டுக்கு சமர்ப்பிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு உத்தரவிடுமாறும் மனுவில் கோரப்பட்டுள்ளது.