இலங்கைத் தமிழரசு கட்சியின் மூத்த தலைவரும் தமிழ்தேசிய கூட்டமைப்பின் முன்னால் தலைவருமான இரா.சம்பந்தன் காலமானார்.
இதன்படி தனது 91 ஆவது வயதில் இரா.சம்பந்தன் காலமாகியுள்ளார்.
இதேவேளை கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னதாக இரா.சம்பந்தனுக்கு 3 மாத கால விடுமுறை வழங்க நாடாளுமன்றில் முன்மொழியப்பட்டது.
இரா.சம்பந்தன் சுகவீனமுற்றிருப்பதாகவும் விடுமுறை வழங்குமாறும் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல கோரிக்கை விடுத்த நிலையிலேயே அந்த அனுமதி வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
தமிழரின் அரசியல் வரலாற்றில் ஆயிரம் கட்சிகள் வந்து சென்றாலும் விரும்பியோ விரும்பாமலோ சில அரசியல் தலைமைகள் மறக்க முடியாத நிலையை எட்டி விடுவர்.
இரா.சம்பந்தன் அவர்கள் தமிழரசு கட்சி மற்றும் தமிழ் தேசிய கூட்டணியின் மாபெரும் தலைவர். திருகோணமலையை வதிவிடமாக கொண்ட இவர் வடக்கு கிழக்கின் அரசியல் தலமையாக இத்தனை காலம் இருந்து வந்தார்.
அரசியலில் தீர்வுகளை பெற்று கொள்வது என்பது சாதாரண விடயம் கிடையாது. ஆனால் அதை பெற தொடர்ச்சியாக அத்தனை விமர்சனங்கள் கடினங்களையும் கடந்து உழைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இரா.சம்பந்தன் யார்?
தான் ஏற்றுக்கொண்ட பாத்திரத்தை கட்டிக்காத்து தமிழ்தேசியத்தின் அரசியல் நீரோட்டத்தில் பயணித்துக்கொண்டு, தமிழர்களின் உரிமைக்குரலுக்காய் இறுதிவரை பயணப்பட்ட மூத்த தலைவர்.
சர்வதேச மட்டத்திலும், இலங்கையின் பாராளுமன்றத்திலும் தமிழ்த்தேசிய உரிமைக்காய் குரல் கொடுத்து தொடர்ந்து செயற்பட்ட தலைவர். புல இறுக்கமான கடினமான தருணங்களை சந்திக்கும் போதும் அரசியலை தன் இறப்புவரை அவர் பாரமாக எண்ணவில்லை.
1933 − மாசி − 5ம் திகதி திருகோணமலையில் ஏ.இராஜவரோதயம் என்பவருக்கு மகனாகப்பிறந்தார்.
சம்பந்தன் அவர் தந்தை கல்லோயா திட்டத்தில் பணியாற்றியவர். இவர் யாழ்ப்பாணம் சம்பத்தரிசியார் கல்லூரி, மொரட்டுவை புனித சென் பட்டிக்ஸ் கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்றார்.
பின்னர் இலங்கை சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்று வழக்கறிஞர் ஆனார். லீலாதேவி என்பாரைத் திருமணம் புரிந்தாசம்பந்தனுக்கு. சஞ்சீவன், செந்தூரன், கிரிசாந்தினி என மூன்று பிள்ளைகள் உள்ளனர்.
சம்பந்தன் 1977 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் சார்பில் திருகோணமலைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று முதன் முதலில் நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார்.
1983ஆம் ஆண்டு நடுப்பகுதியில் தமிழர் விடுதலைக் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் நாடாளுமன்றத்தைப் புறக்கணித்தனர்.
இலங்கை அரசியலமைப்பின் ஆறாவது திருத்தச் சட்டத்தின் படி தனி நாடு கோருவதற்கு ஆதரவளிக்க முடியாது என நாடாளுமன்றத்தில் சத்தியப் பிரமாணம் எடுக்க மறுத்தமைக்காகவும், 1983 கறுப்பு சூலை நிகழ்வுகளில் மூவாயிரத்திற்கும் அதைகமான தமிழர்கள் சிங்களக் காடையர்களினால் படுகொலை செய்யப்பட்டதற்கும், அவர்களது உடைமைகள் சேதமாக்கப்பட்டதற்கும் எதிர்ப்புத் தெரிவித்தும் அவர்கள் நாடாளுமன்ற அமர்வுகளைப் புறக்கணித்தனர்.
மூன்று மாதங்கள் தொடர்ந்து நாடாளுமன்ற அமர்வுகளில் பங்குபற்றாமல் போனதால் சம்பந்தன் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை 1983, செப்டம்பர் 7 இல் இழந்தார், மீண்டு 1989 நாடாளுமன்றத் தேர்தலில் சம்பந்தன் கூட்டமைப்பின் வேட்பாளராக திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிட்டார்.
கூட்டணியின் வேட்பாளர் எவரும் இம்மாவட்டத்தில் வெற்றி பெறவில்லை. 2001 ஆம் ஆண்டில் தவிகூ, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈபிஆர்எல்எஃப்), டெலோ ஆகிய கட்சிகள் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (ததேகூ) என்ற புதிய கூட்டணிக் கட்சி ஒன்றை ஆரம்பித்தனர்.
இக்கூட்டணிக்கு சம்பந்தன் தலைமைப் பொறுப்பை ஏற்றார். அக்கட்சி தேர்தல் சட்டத்தில் அங்கீகரிக்கப்படாத படியால் கூட்டமைப்பு தமிழர் விடுதலைக் கூட்டணியின் பெயரில் 2001 ஆம் ஆண்டுத் தேர்தலில் போட்டியிட்டது. சம்பந்தன் திருகோணமலைத் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதன் காரணமாக 18 ஆண்டுகளின் பின்னர் சம்பந்தன் நாடாளுமன்றத்திற்கு மீண்டும் தெரிவு செய்யப்பட்டார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமைக்கப்பட்ட சிறிது காலத்தில் விடுதலைப் புலிகளை இலங்கைத் தமிழரின் ஏக பிரதிநிதிகளாக ஏற்றுக் கொண்டு அவர்களுக்குச் சார்பாக தனது நிலைப்பாட்டினை முன்னெடுத்தது.
இந்நிலைப்பாட்டுக்கு தவிகூ தலைவர் வி. ஆனந்தசங்கரி எதிர்ப்புத் தெரிவித்து கூட்டமைப்பில் இருந்து விலகினார்.
அத்துடன், 2004 ஆம் ஆண்டு தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் பெயருடன் போட்டியிடுவதற்கு ஆனந்தசங்கரி அனுமதிக்கவில்லை. இதனால் சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சின்னத்தில் போட்டியிட்டனர்.
சம்பந்தன் தமிழரசுக் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2004, 2010 , 2015, 2020 நாடாளுமன்றத் தேர்தல்களில் சம்பந்தன் திருகோணமலைத் தொகுதியில் இருந்து மீண்டும் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2015 தேர்தலில் முக்கிய கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி (ஐதேக), ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி (ஐமசுகூ) ஆகியன முறையே 106, 95 இடங்களைக் கைப்பற்றியிருந்தன. ஐதேக ஆட்சியமைப்பதற்குத் தேவையான அறுதிப் பெரும்பான்மை கிடைக்காததால், இரண்டு முக்கிய கட்சிகளும் இணைந்து தேசிய அரசாங்கம் ஒன்றை அமைத்தன.
இதனால் 16 இடங்களைக் கைப்பற்றி மூன்றாவது இடத்தில் இருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் 2015 செப்டம்பர் 3 இல் எதிர்க்கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை வெண்றெடுக்க அரசியல் எனும் அறவழியில் போராடிய திரு.இரா.சம்மந்தன். தனது 91வது வயதில் 30.06.2014 அன்று இறைபாதம் அடைந்துள்ளார்.