26.8 C
Jaffna
January 19, 2025
Pagetamil
இலங்கை

அதீத பதப்படுத்தலுக்குட்பட்ட, பொதிசெய்யப்பட்ட உணவுகளை உட்கொள்வதால் உடல் நலத்திற்கு பெருங்கேடு விளையும்!

அதீத பதப்படுத்தப்பட்ட, பொதிசெய்யப்பட்ட உணவுகளை அடிக்கடி நுகரும் பழக்கத்துக்கு அடிமையாவதால் உடல் நலத்துக்குப் பெருங்கேடு விளையும். எனவே வீட்டில் பாதுகாப்பாகச் சமைத்த உள்ளூர் உணவுகளை உட்கொள்ளும் பழக்கத்தை வளர்த்துக்கொள்ளவேண்டும் என பூநகரி மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் ஜென்சன் றொனால்ட் தெரிவித்தார்.

தேசிய போசாக்கு விழிப்புணர்வு மாத கண்காட்சி நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலுந் தெரிவிக்கையில்-

அதிதீவிர பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருட்கள் பெரும்பாலும் பொதிசெய்யப்பட்டோ,மிகை குளிரூட்டலுக்கு உட்பட்டோ அல்லது நீண்ட உணவுத் தயாரிப்பு வேலைகளுக்கு உட்பட்டோ இருப்பதோடு அவை அதிக நிம்பிய கொழுப்பு, அதிக உப்பு, அதிக சீனி மற்றும் மிக அதிகளவான செயற்கை இரசாயன உள்ளீடுகளையும் கொண்டிருக்கும். இவை விளம்பரங்களூடாகவும் சுவையூட்டிகளினூடாகவும் மக்களால் அதிகளவில் நுகரத் தூண்டப்படுகின்றன. இவை மிகவும் ஆபத்தானவை.தவிர்க்கப்பட வேண்டியவை.

மக்கள் தாங்கள் வாழும்சூழலிலுள்ள மரக்கறிகள், பழங்கள், தானியங்கள் மற்றும் விலங்குணவுகளை வீட்டு சமையலினூடு நுகர்வதற்கு முன்னுரிமை அளிக்கவேண்டும். இவையே அவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த மிகவும் உதவுபவை.

ஆரோக்கியமான உணவு எமது உரிமை எனும் தொனிப்பொருளுக்கமைய அதிக சீனி, அதிக உப்பு, அதிக கொழுப்புப் பாவனையைத் தவிர்க்கவேண்டும். பொதிசெய்யப்பட்ட உணவுகளில் காட்டப்படும் நிறக்குறியீடுகளைக் கருத்திற்கொண்டு சிவப்பு குறியீடு அடங்கியவற்றை இயன்றளவு தவிர்க்கவும், மஞ்சள் குறியீடு அடங்கியவற்றை குறைவாகப் பாவிக்கவும், பச்சைக் குறியீடு அடங்கியவற்றை தேவையானபோது பாவிக்கவும் தேவையான விழிப்புணர்வைப் பெற்றிருக்கவேண்டும்.

தவறாக வழிநடத்தும் விளம்பரங்களுக்கெதிராக பெற்றோரும், சமூகமும் தமது குரலை அவற்றுக்கெதிராக ஒன்றுசேர்ந்து உயர்த்த முன்வருவதோடு ஆரோக்கியமான உணவுத்தேர்வில் கூடிய கவனம் செலுத்தவும்வேண்டும்.

ஆரோக்கியமற்ற உணவுகளை உண்பதாலும், உடல் உழைப்பற்ற வாழ்க்கை முறையைக் கைக்கொள்வதாலும், அதிக உடற்பருமனைக் கொண்டிருப்பதாலும் இதயநோய்கள், நீரிழிவு,உயர் குருதி அமுக்கம், புற்றுநோய், பாரிசவாதம் போன்ற தொற்றாத நோய்கள் ஏற்பட்டு தரமற்ற வாழ்க்கையும் உயிரிழப்புக்களும் ஏற்படுகின்றன.

எனவே பாடசாலை மாணவர்களை இலக்காக்ககொண்டு சுகாதாரக் கழகங்களூடான அவர்களின் பங்களிப்புடனும் தாய்மார்கழகங்களின் பங்களிப்புடனும் மேற்கொள்ளப்படும் இவ்வாறான போசாக்குக் கண்காட்சிகளும் விழிப்புணர்வுகளும் நிச்சயம் சமூகத்தில் நல்ல மாற்றங்களைத்தூண்டும் என்றார்.

பூநகரி சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் துஷ்யந்தன் தலைமையில் பூநகரி மத்திய கல்லூரியில் இடம்பெற்ற இப் போசாக்குமாத கண்காட்சியில் பிதம விருந்தினராக பதில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் யாதவனும், சிறப்பு விருந்னதினராக கிநொச்சி பிராந்திய தொற்றுநோய்த்தடுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் ரஞ்சனும், கௌரவ விருந்தினராக பூநகரி மகாவித்தியாலய அதிபர் பாலச்சந்திரனும் கலந்து கொண்டதோடு பாடசாலை மாணவர்களும், பொதுமக்களும், சுகாதார உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

இரு பேருந்துகள் மோதி விபத்து: 35 பேர் காயம்!

Pagetamil

மன்னார் துப்பாக்கிச்சூடு: முன்னாள் இராணுவச்சிப்பாய்கள் இருவர் சந்தேகத்தில் கைது!

Pagetamil

அரிய நோயால் பாதிக்கப்பட்ட சிறுவனை காக்க நன்கொடை கோரும் பெற்றோர்

east tamil

யாழ் நகைக்கடை கொள்ளை: இரணுவப் புலனாய்வளர்கள், காப்புறுதி நிறுவன முகாமையாளர்கள் கைது!

Pagetamil

இன்றைய வானிலை அறிக்கை

east tamil

Leave a Comment