ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அனுராதபுரம் மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடிகர் உத்திக பிரேமரத்னவின் வாகனத்தின் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட சம்பவத்துடன், உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் சம்பந்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவருடன் இணைந்து திட்டமிட்ட வகையில் இந்த துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலை நாடாளுமன்ற உறுப்பினர் மேற்கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்னவின் வாகனம் மீது 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17 ஆம் திகதி துப்பாக்கிச் சூட்டு தாக்குதல் நடத்தப்பட்டது.
துப்பாக்கிச் சூட்டில் காரின் பக்கவாட்டு கண்ணாடி சேதமடைந்தது, ஆனால் எம்.பி.க்கு காயம் ஏற்படவில்லை.
சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
சஞ்சீவ மஹாநாம என்ற சந்தேகத்திற்குரிய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் வெளிநாடு சென்றுள்ளதாகவும், பொலிஸாருக்கு அறிவித்து முறையான அனுமதி பெற்று வெளிநாடு செல்லவில்லை எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் தனியான விசாரணை நடத்தப்படும் எனவும் தல்துவ குறிப்பிட்டுள்ளார்.
உதவிப் பொலிஸ் அத்தியட்சகரும் பாராளுமன்ற உறுப்பினரும் நன்கு அறியப்பட்டவர்கள் என்பதாலேயே இந்தத் தாக்குதல் திட்டமிடப்பட்டதாகத் தோன்றுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
விசாரணையில் உதவிப் பொலிஸ் அத்தியட்சகரின் மனைவி மற்றும் பிள்ளைகள் வெளிநாடு சென்றுள்ளதாக தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகத்திற்குரிய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் கட்டுநாயக்க விமான நிலையத்திற்குச் சென்று தனது துப்பாக்கியை பணியிடத்திற்கு யாரோ ஒருவரின் மூலமாக அனுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளதாகத் தெரிவித்த பொலிஸ் பேச்சாளர், இது தொடர்பிலும் விசாரணை நடத்தப்படும் என்றார்.
உங்கள் துப்பாக்கியை வேறு ஒருவரின் கட்டுப்பாட்டில் வைப்பது தண்டனைக்குரிய குற்றமாகும் என்றார்.
உதவி பொலிஸ் அத்தியட்சகர் நேற்றைய தினம் மலேசியாவிற்கு சென்றுள்ளதாகவும் பொலிஸஸ் பேச்சாளர் தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்ன தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை கடந்த பெப்ரவரி 27ஆம் திகதி இராஜினாமா செய்தார். பதவியை ராஜினாமா செய்துவிட்டு கனடா சென்றார்.




