இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திங்களன்று காசாவின் ரஃபாவில் இடம்பெயர்ந்தோர் முகாம் மீதான கொடிய தாக்குதல் ஒரு “சோகமான விபத்து” என்றும் தனது அரசாங்கம் விசாரணை செய்து வருகிறது என்றும் கூறினார்.
“ரஃபாவில், நாங்கள் ஒரு மில்லியன் குடியிருப்பாளர்களை வெளியேற்றினோம், எங்களின் சிறந்த முயற்சிகள் இருந்தபோதிலும், நேற்று ஒரு சோகமான விபத்து நடந்தது” என்று நெதன்யாகு பாராளுமன்றத்தில் கூறினார்.
இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருந்த கூடாரங்களின் மீது ஞாயிற்றுக்கிழமை பிற்பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் 45 பேர் கொல்லப்பட்டனர். 249 பேர் காயமடைந்தனர்.
“நாங்கள் வழக்கை விசாரித்து வருகிறோம், முடிவுகளை எடுப்போம்” என்று அவர் கூறினார்.
ரஃபா தாக்குதல் தொடர்பில் திங்களன்று இஸ்ரேல் சர்வதேச கண்டன அலையை எதிர்கொண்டது, இதில் பிராந்தியம் முழுவதிலும் இருந்து ஐரோப்பிய ஒன்றியம், பிரான்ஸ் மற்றும் ஐக்கிய நாடுகள் ஆகியவை அடங்கும்.
கொல்லப்பட்டதாக கூறிய இரண்டு ஹமாஸ் போராளிகள் பற்றிய “துல்லியமான புலனாய்வுத் தகவலின்” அடிப்படையில் நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் கூறியது.
“அல்-மவாசியில் உள்ள மனிதாபிமான பகுதியில் தாக்குதல் நடக்கவில்லை, இராணுவம் ரஃபாவில் தரைப்படை நடவடிக்கை தொடங்கியதில் இருந்து பொதுமக்களை வெளியேற்ற ஊக்குவித்துள்ளது” என்றும் அது கூறியது.
காசாவில் பிணைக் கைதிகளாக உள்ள இஸ்ரேலியர்களின் உறவினர்கள் நடத்தும் தொர் போராட்டத்தையும் நெதன்யாகு தனது உரையில் விமர்சித்தார், மேலும் ஹமாஸை அழிக்கும் போரைத் தொடர்வதாக சபதம் செய்தார்.
காசாவில் “முழுமையான வெற்றிக்கு மாற்று இல்லை” என்று அவர் கூறினார்.
காசாவில் போர் தொடங்கியதில் இருந்து தனது அரசாங்கம் எதிர்கொண்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அழுத்தங்களை கண்டித்தார்.
“காசாவுக்குள் நுழையாதீர்கள் என்றார்கள். நுழைந்தோம்! ஷிஃபாவில் நுழையாதீர்கள் என்றார்கள். நுழைந்தோம்! கான் யூனிஸில் நுழையாதீர்கள் என்றார்கள். நுழைந்தோம்! ரஃபாவில் நுழையாதீர்கள் என்றார்கள். நுழைந்தோம்!” என்றார்.
“நான் கைவிடவும் இல்லை, கைவிடவும் மாட்டேன்! உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இருந்து வரும் அழுத்தங்களை நான் எதிர்கொள்கிறேன்“ என்றார்.




