இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சசித்திர சேனாநாயக்கவின் குரல் விசாரணை அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே, அரசாங்க பகுப்பாய்வாளருக்கு நேற்று (17) உத்தரவிட்டுள்ளார்.
இந்த அறிக்கை லங்கா பிரீமியர் லீக் 2020 இன் முதல் கட்டத்தின் போது துபாயிலிருந்து தொலைபேசி அழைப்புகள் மூலம் இரண்டு வீரர்களை மேட்ச் பிக்சிங்கிற்கு தூண்டியதாகக் கூறப்படும் சம்பவத்துடன் தொடர்புடையது.
இந்த சந்தேக அறிக்கை தொடர்பில் குரல் பரிசோதனை நடத்தப்பட்ட போதிலும், அரச பகுப்பாய்வாளர் அலுவலகத்தில் இருந்த குரல் பரிசோதனை இயந்திரம் செயலிழந்துள்ளதாக விளையாட்டு தொடர்பான குற்றங்களைத் தடுப்பதற்கான விசேட புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.
சந்தேகநபர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி கலிங்க இந்ததிஸ்ஸ, தனது வாடிக்கையாளரின் குரல் பரிசோதனை சுமார் ஒரு வருடத்திற்கு முன்னர் நடத்தப்பட்ட போதிலும், அறிக்கை கிடைக்கப்பெறுவதில் தாமதம் ஏற்பட்டதன் காரணமாக பாரபட்சம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதன்படி, குறித்த அறிக்கையை உடனடியாக நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு அரசாங்க பகுப்பாய்வாளரிடம் நினைவூட்டல் ஒன்றை நீதவான் உத்தரவிட்டார். இந்த சம்பவம் தொடர்பான நீதவான் விசாரணை நேற்று (17) நீதிமன்றில் மீண்டும் கூடிய போது இந்த உண்மைகள் முன்வைக்கப்பட்டன.
இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சசித்ர சேனாநாயக்க கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டு, 2023 செப்டெம்பர் மாதம் தலா 5 மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டார்.




