#தமிழ்பொதுவேட்பாளர் அபத்தம் 1: நேசமணி பிடுங்கிய மற்றொரு ஆணி!

Date:

தமிழ் பொதுவேட்பாளரை நிறுத்த வேண்டுமென இப்பொழுது சிலர் கூற ஆரம்பித்துள்ளனர். தூதரக புரஜெக்ட்டுக்களிற்காக சிவில் அமைப்புக்களை தொடங்கியவர்களும், அந்த புரஜெக்ட்களில் செயற்படுபவர்களுமே பொதுவேட்பாளரை கோரும் மிகப்பெரும்பாலானவர்கள்.

பொதுவேட்பாளர் என்ற மாயமானின் பின்னாலுள்ள ஆபத்து, சாத்தியமின்மைகள் பற்றி சிறிய சிறிய பகுதிகளாக தமிழ்பக்கத்தில் குறிப்பிடவுள்ளோம்.

பொதுவேட்பாளரை பணத்துக்காக பிரச்சாரம் செய்பவர்கள் போக, இன்னும் சிலர் கோட்பாட்டு ரீதியாக ஆதரிக்கிறார்கள். அவர்களில் அரசியல்வாதிகள், சிவில் அமைப்பினர், ஏனைய தரப்பினரும் உள்ளனர். இந்த வகையானவர்களை கவனித்தீர்கள் என்றால்- அவர்கள் தேர்தல் அரசியலில் தோல்வியடைந்தவர்களாகவே இருப்பார்கள். அதாவது, அவர்கள் நேர்மையாக சிந்திப்பவர்களாக இருந்த போதிலும், அதை பிரயோகிக்க, பிரயோகிக்கும் களத்தை தெரியாதவர்களாக இருப்பார்கள். புற்றுநோயும் நோய்தான். காய்ச்சல் வகைகளும் நோய்தான். புற்றுநோய் மருந்தை காய்ச்சலால் பாதிக்கப்பட்டவருக்கு செலுத்த முடியாது.

பொதுவேட்பாளரை ஆதரிக்கும் தோல்வியடைந்த அரசியல்வாதிகள நேர்மையாளர்களாக இருந்தாலும், காய்ச்சல் நோயாளிக்கு புற்றுநோய் மருந்தை செலுத்துபவர்களை போல, களச்சூழலை, நிலவரத்தை நாடி பிடிக்க முடியாதவர்கள்.

தமிழ் பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்துவதன் மூலம் மக்கள் திரட்சியை உருவாக்கப் போவதாக, பொதுவேட்பாளர் பிரசாரகர்கள் குறிப்பிடுகிறார்கள்.

அது சாத்தியமா?… தேவையா?

முதலாவது- ஏன் இப்பொழுது மக்கள் திரட்சியை உருவாக்க வேண்டும்?

தமிழ் மக்கள் சாதியாக, மதமாக, கட்சியாக, இன்னபிறவாக பிரிந்து நிற்கிறார்கள். அவர்களை தமிழ் தேசியத்தின் பால் ஓன்றுதிரட்ட முயல்வது தப்பா என இந்த பிரச்சார்கள் கேட்கிறார்கள்.

தமிழ் மக்கள் மேற்படி வகைகளில் பிரிய ஆரம்பித்தது 2009 யுத்தத்தின் பின்னிருந்து.  யுத்தம் முடிந்து 15 வருடங்களாகிறது. இந்த பிரிவு இன்றுதான் இந்த ஆய்வாளர்களின் கண்ணில் பட்டதா?, அல்லது இதுவரை இப்படியொன்றை செய்யுங்கள் என யாரும் பணம் தரவில்லையா?

தமிழ் மக்கள் மேற்படி வகைகளில் பிரிய ஆரம்பித்தது- இந்தவகை ஆய்வாளர்களிடம் கருத்து கேட்டு அரசியல் செய்யும் தமிழ் தேசிய கட்சிகளின் கையாலாகாத்தனத்தினால் மட்டுமே.

தமிழ் மக்கள் கட்சியாக, சாதியாக, மதமாக பிரிந்தாலும்- அவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழ் தேசிய நிலைப்பாட்டில் இருப்பவர்களே.

தற்போது களத்தில் இருக்கும் கட்சிகளில் தமிழ் தேசிய கட்சிகள் என கூறிக்கொள்பவற்றிற்கு வாக்களிப்பவர்கள் மட்டும் தமிழ் தேசியவாதிகள் அல்ல. தமிழ் அரசு கட்சி, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் கூட்டணி, தமிழ் தேசிய பசுமை இயக்கம் போன்ற தமிழ் தேசிய கட்சிகளுக்கு மட்டுமல்ல, மு.சந்திரகுமாரின் சமத்துவகட்சி, சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் யாழ் வேட்பாளர் அங்கஜன் இராமநாதன், ஐ.தே.கவின் யாழ் வேட்பாளர் விஜயகலா, கிழக்கில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள், இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் தரப்பு, தமிழர் விடுதலை கூட்டணி, கருணாவின் தரப்பை ஆதரிப்பவர்களிலும் கணிசமான தமிழ் தேசியவாதிகள் உள்ளனர்.

ஆக, வடக்கில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு வாக்களித்தவர்கள்தான் இந்த நிலைப்பாட்டுக்கு மாற்றமான நிலைப்பாடுடையவர்கள்.

இந்த அவலம் எதனால் வந்ததெனில், தமிழ் அரசியல் கட்சிகளின் பலவீனத்தாலும், சிந்தனைப் பிரப்பிலுள்ள குறைபாட்டினாலும்தான்.

இந்த பலவீனங்களை ஒரே டோஸில் சரிசெய்ய இவர்கள் கண்ட சர்வரோக நிவாரணியே தமிழ் பொதுவேட்பாளர். எப்படி 1976இல் மக்களின் சிந்தனையை திசைதிருப்பி, தமது தேர்தல் அரசியலை பாதுகாக்க வட்டுக்கோட்டை பிரகடனம் உருவாக்கப்பட்டு ஏமாற்றப்பட்டதோ, அப்படியான ஒரு மோசடி திட்டமே தமிழ் பொதுவேட்பாளர்.

வட்டுக்கோட்டை தீர்மானத்தின் அரசியல் அர்த்தத்தை நாம் கேள்விக்குட்படுத்தவில்லை. அதை எப்படியான மோசடியான நோக்கத்திற்காக பிரகடனப்படுத்தினார்கள் என்பதையும் அறிய வேண்டுமல்லவா. தமிழீழத்துக்கான சர்வசன வாக்கெடுப்பு என குறிப்பிட்டு, அதில் மக்கள் ஆணை கிடைத்தால் தமிழீழத்துக்கான பேரவை உருவாக்கப்படும் என்றுவிட்டு, 1981ஆம் ஆண்டு மாவட்ட அபிவிருத்திசபை தேர்தலில் போட்டியிட்டனர்.

ஆயுதப் போராட்ட காலத்தில்- குறிப்பாக புலிகள்- சொல்லுக்கும் செயலுக்குமிடையில் வித்தியாசமின்றி வாழ்ந்ததால், அவர்களின் அரசியல் வழியில் மக்களுக்கு விமர்சனமிருக்கவில்லை. அவர்கள் தமிழீழத்தையும் அடைவார்கள் என மக்கள் சந்தேகத்துக்கு இடமின்றி நம்பினார்கள்.

புலிகளின் தோற்கடிக்கப்பட்டு 15 வருடங்களின் பின்னர் இப்பொழுது மீண்டும் அன்றைய தமிழர் விடுதலைக் கூட்டணியின் சிந்தனை மரபு வாரிசுகள் தமிழ் பொதுவேட்பாளரை சர்வரோக நிவாரணியாக முன்னிறுத்துகிறார்கள்.

15 வருடத்தில் தமிழ் மக்கள் ஒரே கட்சியின் கீழ் திரளாமல் ஏன் சிதறுண்டார்கள் என்ற பரிசோதனை இல்லாமல்- அதை சரிசெய்யாமல்- மக்களை திரட்ட ஒரு சர்வரோக நிவாரணியாக பொதுவேட்பாளரை பிரகடனம் செய்கிறார்கள்.

மக்களை திரட்டி வழிநடத்தும் அமைப்பு எதுவும் இல்லாமல்- கட்சிகள் செயல்திறனற்றுள்ள நிலையில், மக்களை போலியாக திரட்டி, அடுத்து என்ன செய்யப் போகிறோம். ஆயுதப் போராட்டமா? வழிநடத்தும் முறையாக அமைப்பின்றி- மக்களை போலியாக நம்பிக்கையூட்டி, மீண்டும் நடுத்தெருவில் விடுவது, தமிழ் தேசிய அரசியலை மேலும் பலவீனப்படுத்தாதா?

அல்லது, எந்த தூரநோக்குமின்றி, அரசியல் வரைபடமுமின்றி- தேர்தல் சீசன்களில் பொதுவேட்பாளர், கட்சிகள் ஒற்றுமை என வெட்டிப் பேச்சு பேசும் அரசியல்தான் செய்யப் போகிறோமா?

தமிழ் மக்கள் ஜனாதிபதி தேர்தலிலும், பாராளுமன்ற தேர்தலிலும் வாக்களிக்கும் விதம் வேறுவேறு விதமானது. தமிழ் மக்கள் என்னதான் எதிர்ப்பு போராட்ட வரலாறுடையவர்கள் எனினும், தகவமைத்து வாழும் இயல்புடையவர்களும் ஆவர். அதற்கு மேற்படி இரண்டு தேர்தல்களுமே உதாரணம்.

பாராளுமன்ற தேர்தல்களில் கட்சிகளின் பேச்சை கேட்பார்கள். ஜனாதிபதி தேர்தலில் மக்களின் மனஉணர்வையறிந்து கட்சிகள் முடிவு செய்யும். இதுதான் யதார்த்தம்.

எப்படியும் ஒரு சிங்கள ஜனாதிபதியின் ஆட்சியில்தான் வாழ வேண்டுமென்பதன் அடிப்படையில், தமது அரசியல் பார்வைக்கு அதிக இடையூறு இல்லாத ஒருவரை வாக்களித்து தெரிவு செய்கிறார்கள். இடையூறு விளைவிப்பவர்களை தோற்கடிக்க வாக்கை ஒரு ஆயுதமாகவும் பாவிக்கிறார்கள். கட்சிகள் பலமிழந்துள்ள நிலையில், மக்கள் தம்மாலான அதிகபட்ச நடவடிக்கையாக- வாக்கை ஆயுதமாக பிரயோகிக்கிறார்கள்.

விஞ்ஞானபாட செயல்முறை விளக்கத்தில் கம்பராமாய பாடலை எழுதுபவர்கள் அல்ல அவர்கள். ஜனாதிபதி தேர்தலை அதற்குரிய அர்த்தத்திலேயே நோக்குவார்கள்.இதுதான் தமிழ் மக்களின் வாக்களிப்பு வரலாறு.

தமிழ் பொதுவேட்பாளர் மூலம் மக்களை திரட்டுவது இப்பொழுது எந்த சாதகமான பலனையும் தராது. எதிர்விளைவுகளையே ஏற்படுத்தும். அதுபற்றி ஏற்கெனவே குறிப்பிட்டுள்ளோம்.

மக்களை திரட்டி யாருக்கு செய்தி சொல்லப் போகிறோம்… என்ன செய்தி சொல்லப் போகிறோம்?

தென்னிலங்கைக்கா, சர்வதேசத்துக்கா?- நம்மில் பலரை விட, அவர்களிற்கு நமது பிரச்சினைகள் நன்றாக தெரியும். தற்போதைய பூகோள அரசியல் யதார்த்தத்தில்- நமது செய்தியை விட- வலுவான பாத்திரத்தை தென்னிலங்கை அரசு கொண்டுள்ளது. இந்த சூழல்களில் மாற்றங்களை ஏற்படுத்தாமல் ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளரை நிறுத்துவது- ஒரு திருட்டு உத்தி.

நமக்கு முன்னாலுள்ள உடனடி தேவையென்ன?.. மக்களை தமிழ் தேசிய பாதையில் அணிதிரட்டுவதா?- அப்படியெனில் அதற்கான அமைப்பை வலுவாக கட்டியெழுப்பவல்லவா வேண்டும். யுத்தம் முடிந்த போது இருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்று எத்தனை பிளவை சந்தித்து விட்டது. இப்பொழுது பிரமுகர்களாக பிளவுபடும் நிலையில் தமிழ் அரசு கட்சி உள்ளது. இதுதான் தமிழ் மக்களை வழிநடத்தும் அமைப்புக்களின இலட்சணம்.

நாம் புத்திசாலிகள் எனில், இந்த அமைப்புக்களை வலுப்படுத்தி, பாராளுமன்ற, மாகாணசபை தேர்தல்களில்- மக்களின் இழந்த நம்பிக்கையை மீட்டெடுத்து காண்பிப்பதும், அதை தக்கவைத்து, உண்மையான அரசியல் விடுதலைக்காக செயற்படுவதுமல்லவா செய்ய வேண்டிய பணி.

அதற்கு ஏசி அறைகளில் இருந்து செயற்பட முடியாது. ரிஸ்க் எடுக்க வேண்டும். போராட்டங்கள், சிறைக்கு செல்ல முடியாது என்பதால், பொதுவேட்பாளர் மூலம், குறுக்கு வழியில் செல்ல முயற்சிப்பது சரியல்ல.

நமக்கு இப்பொழுது ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளர் அவசியமில்லை. தமிழ் தேசிய அமைப்பை பலப்படுத்தி, பாராளுமன்ற, மாகணசபை தேர்தல்களில் பொதுவேட்பாளரை நிறுத்துவதே தேவையானது. கிழக்கு மாகாணத்தில், மன்னாரில், வவுனியாவில் சில பிரதேசங்களில் தமிழர் பிரதிநிதித்துவம் இழக்கப்படுகிறது. மிகச்சிறந்த உதாரணம் அம்பாறை- கல்முனை. வெவ்வேறு தரப்புக்களில் போட்டியிடும் தமிழ் தேசிய கட்சிகளை ஒருங்கிணைத்து, யாராவது ஒருவரை வேட்பாளராக நியமித்தால் அந்த பகுதிகளை வெற்றியீட்டி, தமிழர்களின் நாடாளுமன்ற பலத்தை அதிகரிக்கலாமல்லவா?

ஆனால் அதற்கு கட்சிகள் சம்மதிக்காது. தமது நாடாளுமன்ற வாய்ப்பை இழக்க அவர்கள் தயாரில்லை.

நமக்கு முன்பாக செய்ய வேண்டிய சிரமமான பணி ஏதோவுள்ளது. ஆனால், அதை செய்வது சிரமமானது, பிரமுகர் அரசியலை செய்ய முடியாது, கட்சிகளுக்கு ஆலோசனை சொல்ல முடியாது என, நிலைமையை சமாளிக்கும் வேலைகளை செய்வதும் துரோகமே. இந்தவகை வேலைகள் எல்லாமே நேசமணி பிடுங்கிய ஆணி வகைக்குள்ளேயே சேரும்.

தமிழக முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி மீது பல ஈழத்தமிழர்களுக்கு விமர்சனமுள்ளது. அவர் நம்மை கைவிட்டவர், சொத்து சேர்த்தவர் என பல விமர்சனங்களை வைக்கிறார்கள். ஆனால், தமிழக தமிழர்களை திரட்சியடைய செய்த முக்கியமான தலைவர்களுள் அவரும ஒருவர். அதை அவர் சாதாரணமாக செய்யவில்லை. ரயில் தண்டவாளத்தில் தலைவைத்தும் படுத்தார்.

தமிழ் மக்களை திரட்சியடைய வைக்கப் போகிறோம் என புறப்பட்டுள்ள குழு எந்த போராட்டங்களுக்கும் செல்வதில்லை. காணாமல் ஆக்கப்பட்டவர்கள், நினைவேந்தல் உரிமை, காணி விடுவிப்பு போராட்டம் எதற்கும் சென்றதில்லை. சாதிச் சிக்கல்களிற்கும் களப்பயணம் சென்றதில்லை. பொருளாதார நெருக்கடியிலுள்ள மக்களிடமும் சென்றதில்லை. இது எதையும் செய்யாமல், எப்படி மக்களை திரட்சியடைய செய்வது?

spot_imgspot_img

More like this
Related

அரசுக்கு எதிராக 12ஆம் திகதி அடையாள உண்ணாவிரதம்: ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு

அனுர குமார திசாநாயக்க ஜனாதிபதியாக ஆட்சி அதிகாரத்திற்கு வந்து இரண்டு வருடங்கள்...

மனைவியின் தங்கையில் கண் வைத்த இராணுவச்சிப்பாய் கைது!

தனது மனைவியின் தங்கையான 15 வயது பாடசாலை மாணவியை வன்புணர்வு செய்த...

வெளிநாட்டுக்கு தப்பியோடிய நீதிமன்ற உத்தியோகத்தர்

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான சலிந்து மல்சித...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்