நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனைக் கொல்ல முயற்சித்தமை மற்றும் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகளை மீள கட்டியெழுப்ப முயன்றமை உள்ளிட்ட 8 குற்றச்சாட்டுகளின் கீழ் விடுதலைப் புலிகளின் முன்னாள் செயற்பாட்டாளர்கள் நால்வருக்கு எதிரான வழக்கின் பிரதான பிரதிவாதியான எம்.அனோஜனுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று (07) பிடியாணை பிறப்பித்துள்ளது.
இந்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, நீதிமன்றத்தை தவிர்த்து வரும் நான்காவது பிரதிவாதியை உடனடியாக கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் பயங்கரவாத விசாரணைப் பிரிவில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் சட்டமா அதிபர் தாக்கல் செய்துள்ள இந்த வழக்கில், காராளசிங்கம் குலேந்திரன் என்றழைக்கப்படும் சோலை குமரன் என்ற மாஸ்டர்,
லெவிஸ் மரியநாயகம் அஜந்தன் அல்லது கடலன் அல்லது ஜனா, முருகையா தவேந்திரன் அல்லது வேந்தன், ஞானசேகரலிங்கம் ராஸ்மதன் அல்லது மதன் அல்லது வரதன்,
மகாத்மாஜி அனோஜன் அல்லது கண்ணன் அல்லது வெற்றி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
வழக்கு விசாரணையின்போது, பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தரப்பு சாட்சியமளிக்க தயாராக இருந்த போதிலும் நான்காம் பிரதிவாதி இல்லாத காரணத்தினால் விசாரணை நடைபெறவில்லை.
ஒக்டோபர் 2016 மற்றும் ஜனவரி 2017 க்கு இடையில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் பெயர் குறிப்பிடப்படாத பிற நபர்களுடன், கிளிநொச்சி-திருவையாறு, கனகபுரம் மற்றும் வடமராட்சி கிழக்கு மண்முனை ஆகிய பிரதேசங்களில் கிளேமோ குண்டுகள்,
200க்கும் மேற்பட்ட வெடிகுண்டுகள் மற்றும் டெட்டனேட்டர்களை பயன்படுத்தி எம்.ஏ.சுமந்திரன் மீது கொலை முயற்சிக்கு திட்டமிட்டமை மற்றும் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பை உருவாக்கியமை ஆகிய குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடைசெய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை மீள கட்டியெழுப்ப முயன்றமை, அதற்காக ஆதரவளித்தமை, இந்த குற்றத்தில் ஈடுபட மற்றவர்களை தூண்டியமை, இலங்கையில் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை கொல்ல முயன்றமை உள்ளிட்ட 8 குற்றச்சாட்டுக்களின் கீழ் அவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
பிரதிவாதிகள் 1 மற்றும் 2 சார்பில் சட்டத்தரணி கே.எஸ். ரத்னவேல், 3 மற்றும் 4 ஆம் பிரதிவாதிகள் சார்பாக சட்டத்தரணி ரதீந்திர கருணாரத்ன மற்றும் சுரங்க பண்டாரயன ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.




