இமாச்சல பிரதேச ஆற்றிலிருந்து சைதை துரைசாமி மகன் வெற்றியின் உடல் மீட்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி (45), விலங்குகளைப் படம் எடுப்பதற்காக, தனது நண்பர் கோபிநாத்துடன் இமாச்சல பிரதேசத்துக்கு சென்றார்.
கடந்த 4-ம் தேதி மாலை கசாங்நளா பகுதியில் காரில் சென்று கொண்டிருந்தபோது, கார் கட்டுப்பாட்டை இழந்து, சாலையை ஒட்டி இருந்த சட்லெஜ் ஆற்றில் கவிழ்ந்துள்ளது.
சுமார் 50 அடி பள்ளத்தில் உருண்டு சென்ற கார், நீரில் மூழ்கியது. படுகாயங்களுடன் மீட்கப்பட்ட நண்பர் கோபிநாத், அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். உள்ளூர் கார் ஓட்டுநர் தன்ஜின் மற்றும் வெற்றி இருவரை காணவில்லை. பின்னர், ஆற்றிலிருந்து தன்ஜின் உடல் மீட்கப்பட்டது.
சைதை துரைசாமி மகன் வெற்றியை தேடும் பணியில் அம்மாநில போலீஸார், ராணுவம், பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் அப்பகுதி பழங்குடியின மக்கள் ஈடுபடத் தொடங்கினர். இந்நிலையில், வெற்றியை தேடும் பணியில் 9-வது நாளாக நேற்றும் மீட்புப் படையினர் ஈடுபட்டனர். பிற்பகலில் விபத்து நடந்த சில கிலோ மீட்டர் தொலைவில் சட்லெஜ் ஆற்றில், பாறையின் அடியில் சிக்கியிருந்த உடல் ஒன்றை ஆழ்கடல் நீச்சல் வீரர்கள் மீட்டனர். பின்னர், அந்த உடல் வெற்றியின் உடல் என்பது உறுதி செய்யப்பட்டது.
வெற்றியின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக, அங்குள்ள அரசுமருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. வெற்றியின் உடலை சென்னை கொண்டு வருவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. வெற்றிக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர்.




