‘யுத்தம் நடக்காத பிரதேசத்தில் பிறந்திருந்தால் நானும் சட்டத்தரணியாகியிருப்பேன்… ஆங்கிலம் படித்தா தலைவர் போராட்டம் நடத்தினார்?’: சிறிதரன் எம்.பி!

Date:

தேசியத் தலைவர் ஆங்கிலம் படித்து போராட்டத்தை நடத்தவில்லை. அவர் பெரும் கட்டமைப்பை உருவாக்கினார் என தெரிவித்துள்ளார் இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைமை பதவி வேட்பாளர் சி.சிறிதரன் எம்.பி.

கடந்த 6,7ஆம் திகதிகளில் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களின் இலங்கை தமிழ் அரசு கட்சியின் உறுப்பினர்களுடன் நடந்த கலந்துரையாடலில் இதனை தெரிவித்தார்.

மட்டக்களப்பில் கல்குடா தொகுதிக்கான கூட்டம் சீ.யோகேஸ்வரனின் அலுவலகத்திலும், மட்டக்களப்பு தொகுதிக்கான கூட்டம் முன்னள் மேயர் தி.சரவணபவன் வீட்டிலும், பட்டிருப்பு தொகுதிக்கான கூட்டம் சிறிநேசன் வீட்டிலும், அம்பாறை, திருக்கோவிலில் கோடீஸ்வரன் வீட்டிலும், கல்முனை- பாண்டிருப்பில் சனசமூக நிலையத்திலும் இந்த கூட்டங்கள் நடந்தன.

இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் தெரிக்கான போட்டி சூடு பிடித்துள்ளது. சி.சிறிதரன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் தலைமை பதவிக்கான போட்டியில் தீவிரமாக குதித்துள்ளனர்.

எம்.ஏ.சுமந்திரனுக்கு ஆங்கில புலமையுள்ளது, அவர்கள் வெளிநாட்டு பிரமுகர்களுடன் பேசுவார்கள் என அவரது ஆதரவாளர்கள் தீவிரமாக பிரச்சாரம் செய்து வரும் நிலையில், கடந்த இரண்டு நாள் கூட்டங்களில்- ஆங்கில புலமை கருத்துக்கு சிறிதரன் பதிலளித்துள்ளார்.

அவர் குறிப்பிட்ட கருத்துக்களின் சாரம்சம் வருமாறு-

“எனக்கு ஆங்கிலம் பேச வராது. ஆனால் ஆங்கிலத்தில் பேசுவது புரியும். அதற்கு பதிலளிப்பதே சிரமம். ஆனால், அதை ஒரு பிரச்சினையாக நான் கருதவில்லை. உலக நாடுகளின் பல தலைவர்கள் ஆங்கிலம் தெரியாமல் நல்ல தலைவர்களாக இருந்துள்ளார்கள். ஆங்கில புலமை ஒரு தலைமை தகுதியல்ல. ஆங்கிலம் படிக்க வேண்டுமென்ற தேவையிருந்திருந்தால் நானும் அதை படித்திருப்பேன்.

உதாரணமாக எமது தேசியத்தலைவர் ஆங்கிலம் படித்து போராட்டத்தை நடத்தவில்லை. ஆனால், அவர் யாரும் உருவாக்க முடியாத கட்டமைப்புக்களை உருவாக்கினார். அவரின் போராட்டத்திலிருந்து நான் பலவற்றை படித்துள்ளேன். கிளிநொச்சியில் அவற்றை நடைமுறைப்படுத்தியுமுள்ளேன். மக்கள் திரட்சியில்லாத எந்த இனமும் வெற்றியடைய முடியாது. கிளிநொச்சியில் அடிமட்ட மக்களை சென்றடையக்கூடிய பல கட்டமைப்புக்களை உருவாக்கியுள்ளேன்.

நான் தமிழ் அரசு கட்சியின் தலைவரானால் அந்த கட்டமைப்புக்களை அனைத்து மாவட்டங்களிலும் உருவாக்குவேன். மக்களை திரட்டுவேன்.

புலம்பெயர் மக்களையும் இணைக்காமல் நாம் வெற்றயடைய முடியாது. நான் அதை செய்வேன்.

நானும் படிக்கும் காலத்தில் சட்டத்தரணியாக விரும்பினேன். அதற்காக விண்ணப்பமும் செய்திருந்தேன். ஆனால் யுத்த சூழலால் எனது மாவட்டத்திலிருந்து அதை செய்ய முடியவில்லை. நான் வேறு மாவட்டத்தில் இருந்திருந்தலோ அல்லது யுத்த சூழல் இல்லாமலிருந்திருந்தாலோ நானும் சட்டத்தரணியாக இருந்திருப்பேன். யுத்த சூழலுக்குள் முதுமாணி பட்டம் பெற்று அதிபராகிய என்னால், சட்டத்தரணியாகியிருக்க முடியாதா?

நான் தலைவரானால் குழு செயற்பாடுகளே முன்னெடுப்பேன் என்றார்.

இதேவேளை, கல்முனை தொகுதி கூட்டத்தின் போது, உரையாற்றிய பலர் எம்.ஏ.சுமந்திரனின் பலவீனங்கள் என குறிப்பிட்டு சில விடயங்களை சுட்டிக்காட்டினர்.

அந்த தொகுதிக்கிளை தலைவர் பின்னர் உரையாற்றிய போது, தனிநபர் தாக்குதல்களை தவிர்க்க வேண்டுமென்றார்.

பின்னர் உரையாற்றிய சி.சிறிதரன் அதற்கும் பதிலளித்தார்.

கட்சியின் இரண்டு வேட்பாளர்களுக்கு இடையில் போட்டி நடக்கும் போது, ஒருவரின் தவறுகளை சுட்டிக்காட்டுவது வழக்கம் என்றும், இது தனிநபர் தாக்குதல் அல்லவென்றும், கட்சிக்குள்ளேயே இது சுட்டிக்காட்டப்படுவதாகவும் தெரிவித்தார்.

கட்சியின் மத்தியகுழு கூட்டங்களில் இவ்வாறு பல குறைபாடுகள் சுட்டிக்காட்டப்பட்டு விவாதிக்கப்படும். எனது குறைபாடுகளை சுட்டிக்காட்டினால் நான் ஏற்றுக்கொள்வேன் என்றார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், சர்வதேச விசாரணை முடிந்து விட்டது என சுமந்திரன் குறிப்பிட்டார். அது நடக்கவில்லை. முடிந்து விட்டது என ஏற்றுக்கொள்கிறீர்களா?. அமெரிக்காவுக்கு எம்.ஏ.சுமந்திரன், நிர்மலா சந்திரகாசன் உள்ளிட்ட 3 சட்டத்தரணிகள் சென்றனர். திரும்பி வந்து, பெரிய மாற்றங்கள் நிகழுமென்றனர். 2 வருடங்களாகி விட்டது ஏதாவது நடந்ததா?

ஒரு குழுவாக செயற்பட்டாலே வெற்றியடைய முடியும். ஒருவர் தவற விட்ட விடயங்களை மற்றவர் சுட்டிக்காட்டுவார். ஒருவர் போய் வந்தால், அவர் என்ன சொன்னாலும் நம்ப வேண்டுமென்றார்.

spot_imgspot_img

More like this
Related

யாழ். விமான நிலைய ஓடுபாதையில் மின்விளக்குகள் கூட இல்லாதது அதிர்ச்சியளிக்கிறது

காங்கேசன்துறை துறைமுகம் மற்றும் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலைய அபிவிருத்திக்கு இந்திய...

6 பிரதிப்பொலிஸ்மா அதிபர்களுக்கு இடமாற்றம்

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அங்கீகாரத்திற்கு உட்பட்டு, ஆறு பிரதி பொலிஸ் மா...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்