மஹுவா மொய்த்ரா எம்.பி. பதவி பறிப்பு: கேள்வி கேட்க பணம் பெற்ற குற்றச்சாட்டில் நடவடிக்கை

Date:

பணம் பெற்றுக்கொண்டு நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியதாக கூறப்படும் குற்றச்சாட்டில், திரிணமூல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ரா இன்று (வெள்ளிக்கிழமை) பதவி நீக்கம் செய்யப்பட்டார். அவருடைய மக்களவை எம்.பி. பதவி பறிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் அதானிக்கு எதிராக கேள்வியெழுப்ப தொழிலதிபர் ஹிராநந்தானியிடம் திரிணமூல் எம்பி மஹுவா மொய்த்ரா லஞ்சம் பெற்றது தொடர்பான குற்றச்சாட்டு குறித்து பாஜக எம்.பி., வினோத் குமாா் சோன்கா் தலைமையிலான மக்களவை நெறிமுறைக் குழு விசாரணை நடத்தி, அதன் அறிக்கையை நவ.9-ஆம் தேதி வெளியிட்டது. அந்த அறிக்கையில், மஹுவா மொய்த்ராவை பதவி நீக்கம் செய்ய பரிந்துரைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து திரிணமூல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ராவை பதவி நீக்கம் செய்யக் கூறும் மக்களவை நெறிமுறைக் குழு பரிந்துரை இன்று (வெள்ளிக்கிழமை) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது, எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் அவை மீண்டும் கூடியபோது அவையில் கடுமையான அமளி நிலவியது. மஹுவா தனது தரப்பு கருத்தை முன்வைக்க விரும்பினார். ஆனால், அவருக்கு அவையில் பேச அனுமதி அளிக்கப்படவில்லை. மஹுவாவுக்கு அவையில் பேச அனுமதி அளிக்கக் கோரி மக்களவையில் எதிர்க்கட்சியினர் குரல் எழுப்பினர். கடும் அமளிக்கு மத்தியில் மஹுவா மொய்த்ரா பதவி நீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கூறுகையில், “மக்களவை நெறிமுறைக் குழு பரிந்துரைக் குழுவின் அறிக்கையை ஏற்கப்படுகிறது. மஹுவா மொய்த்ராவின் நடவடிக்கை அறமற்றது, அநாகரிகமானது. அவையின் மாண்பை சிதைக்கும் வகையில் மஹுவா செயல்பட்டுள்ளார். அதனால் அவர் மக்களவை உறுப்பினராகத் தொடர இயலாது” என்று தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து நாடாளுமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்த மஹுவா, ”என் மீதான குற்றச்சாட்டுகளை முழுமையாக விசாரணைக்கு உட்படுத்தவில்லை. எந்த ஒரு குற்றச்சாட்டும் ஆதாரத்துடன் நிரூபிக்கப்படவில்லை. எனக்கு நாடாளுமன்றத்தில் பேசக்கூட அனுமதி அளிக்கப்படவில்லை. பெண்கள், சிறுபான்மையினர் என அனைத்து தரப்பினரின் உரிமையையும் மத்திய அரசு பறிக்கிறது. அதானி என்ற ஒருவருக்காக மட்டுமே இந்த அரசாங்கம் இயங்குகிறது” எனக் காட்டமாகத் தெரிவித்தார்.

பின்னணி என்ன?

மேற்கு வங்கத்தின் கிருஷ்ணாநகர் மக்களவைத் தொகுதியின் திரிணமூல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா. இவர் மக்களவையில் இதுவரை 61 கேள்விகளை எழுப்பியுள்ளார். இதில் 50 கேள்விகள் அதானி குழுமம் தொடர்பானவை. இந்த கேள்விகளை எழுப்ப ரியல் எஸ்டேட் தொழிலதிபர் ஹிராநந்தானியிடம் இருந்து மொய்த்ரா ரூ.2 கோடி வரை லஞ்சமாக பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது. மேலும், மொய்த்ராவின் நாடாளுமன்ற இணைய கணக்கை துபாயில் வசிக்கும் ஹிராநந்தானி பயன்படுத்தியதும் கண்டுபிடிக்கப்பட்டது.

மொய்த்ராவின் முன்னாள் காதலர் ஜெய் ஆனந்த் தேஹத்ராய் இந்த ரகசியத்தை அம்பலப்படுத்தினார். இதை ஆதாரமாக வைத்து பாஜக எம்பி நிஷிகாந்த் துபே மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவிடம் புகார் அளித்தார். இதுதொடர்பாக நாடாளுமன்ற நெறிமுறைகள் குழு விசாரணை நடத்தி, மொய்த்ராவை பதவி நீக்கம் செய்ய பரிந்துரை செய்தது. நெறிமுறைக் குழு விசாரணையின்போது மஹுவா பாதியிலேயே வெளியேறினார். மேலும், நெறிமுறைக் குழு தலைவர் அநாகரீகமான கேள்விகளை எழுப்புவதாக குற்றம் சாட்டினார். ஆனால், உண்மையான கேள்விகளுக்கு பதிலளிப்பதை தவிர்ப்பதற்காகவே மஹுவா இந்த நாடகத்தை ஆடியதாகவும், இதற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்களும் அவருக்கு துணை போனதாகவும் நெறிமுறைக் குழு தலைவர் குற்றம் சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

கரூரில் 31 பேருக்கு அரசுப் பணி வழங்கிய அரசாணை ரத்து: உயர் நீதிமன்றம் அதிரடி

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களில் 31 பேரின் குடும்பத்தினருக்கு அரசுப் பணி...

பேராசிரியர் ரகுராம் வழக்கில் இடைக்கால கட்டளை நீடிப்பு

பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரகுராம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்புவதற்கு எதிராக...

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பரிபாலனசபைக்கு இடைக்கால தடைவிதித்தது நீதிமன்றம்

வரலாற்று சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் பரிபாலன சபையின் செயற்பாடுகளுக்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்