வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் சித்திரவதைக்குள்ளாகி உயிரிழந்த சித்தன்கேணி இளைஞன் தொடர்பான வழக்கில், கைது செய்யப்பட்ட 4 பொலிசாரையும் பிரதான சாட்சி அடையாளம் காண்பித்துள்ளார்.
இன்று (8) யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் நடந்த அடையாள அணிவகுப்பில், தன்னை தாக்கிய 4 பொலிசாரையும் பிரதான சாட்சி அடையாளம் காட்டினார்.
அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 4 பொலிசாரும் இன்று பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டிருந்தனர்.
சித்தன்கேணியை சேர்ந்த நாகராசா அலெக்ஸ் என்ற இளைஞனும், அவரது நண்பரும் வட்டுக்கோட்டை பொலிசாரால் நவம்பர் 8ஆம் திகதி கைது செய்யப்பட்டு, சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டனர். சித்திரவதையால் அலெக்ஸ் பாதிக்கப்பட்டதால், அவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்தாமல், இரகசியமாக தடுத்து வைத்திருந்தனர்.
இந்த விவகாரம் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கவனத்துக்கு சென்றதும், 12ஆம் திகதி நீதிமன்றத்தில் முற்படுத்தினர்.
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சமயத்தில் 19ஆம் திகதி அலெக்ஸ் உயிரிழந்தார். இந்த வழக்கில் 4 பொலிசார் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அலெக்ஸ் உடன் கைதான நண்பன்,வழக்கு விசாரணையின் போது, இன்று 4 பொலிசாரையும் அடையாளம் காண்பித்தார்.




